Tuesday, October 29, 2013

ஏன் மறந்தனை?

           ஏன் மறந்தனை?

தென்றலும் வந்தது; தீங்குளிர் வந்தது;
   தேமலர்ச் சோலையில் பாடிடும்
வண்டினம் வந்தது; மலரினை மொய்த்தது;
   மயங்கிய பூக்களும் ஆடிட
நின்றிசை பெய்தது; நீள்கதிர் மாய்ந்தது;
   நிரம்பின செவ்வொளி எங்கணும்;
என்றனைக் கொன்றிட வந்தது மாலையும்;
   ஏனடி நீவர மறந்தனை?

பூங்குயில் வந்தது; புள்ளினம் வந்தது;
   பூத்திடு மலர்களும் சிரித்தன;
மாங்கனி ஒன்றினைத் தீண்டிடும் அணிலெனை
   மாய்த்திடு வகையினில் நகைத்தது;
தாங்கிய ஆவலில் தாவிடு பார்வையில்
   தவித்திடு மென்னிலைக் கிரங்கியே
வீங்கிய மாலையும் வீழ்ந்தது; சோலையில்
   விரைந்திட ஏனடி மறந்தனை?

கார்முகில் வந்தது; களிமயில் வந்தது;
   களிப்பொடு தோகையை விரித்தது;
சீர்நடம் பயின்றது; சிந்தையைக் கொண்டது;
   சிந்திய பூவினப் பாயலில்
போரினைத் துவக்கியே பூஞ்சிறைச் சிட்டினைப்
   புல்லிப் புரண்டது ஆணிணை.
பாரினில் மாரன்கை ஓங்கிய வேளையில்
   பாவையே ஏன்வர மறந்தனை?
                10-11-61
         சிங்கை தமிழ்முரசு-03-12-61 

Sunday, October 27, 2013

யாரோ?

                        யாரோ?

இருளவித்துத் தலைதூக்குங் கதிரோன் தன்னை
   இதழவிழ்த்துக் கமலங்கள் நோக்கும் போழ்தில்
மருளவித்த ஒளிமுகத்தில் இரண்டு பூக்கள்
   மடலவிழ்த்தே எனைநோக்கக் காண்பேன்; பின்னற்
சுருளவிழ்த்த குழல்சரிய வாச லோடு
   சிறகவிழ்த்த என்னெஞ்சும் சேர்த்துக் கூட்டும்
தெருளவிழ்க்கும் மொழியாட்கு மணமாம்; அந்தத்
   தெவிட்டாத கனிக்குலையைச் சுவைப்பான் யாரோ?

உடல்தாங்கி நலிகின்ற இடையும், வண்ண
   உடைதாங்கி மிளிர்கின்ற உடலும், காமன்
படைதாங்கி எனைத்தாக்குங் கண்ணும், கூந்தற்
   பளுத்தாங்கி வளைகின்ற கழுத்தும், அன்னப்
பெடைதாங்கி அழகூட்டும் நடையும், வானிற்
   பிறைதாங்கி இவட்கீந்த நுதலும், கூட்டும்
இடர்தாங்கி இவள்தாக்கில் மகிழ்வேன்; அந்த
   இன்மொழிக்கு மணமென்றார்; உண்பான் யாரோ?

இடைதனிலே குடமேந்தி வாசல் தாண்டி
   எனைப்பார்வை தன்னாலே சீண்டிச் சன்னல்
இடைதனிலே என்கண்கள் காதல் வேண்டி
   ஏங்குகின்ற நிலைபுரிந்தே இதழின் ஓரக்
கடைதனிலே குறுநகையை நெளிய விட்டுக்
   கதுப்பினிலே செவ்வானப் புதுமை கூட்டி
நடைதனிலே எனைக்கொன்று போடு மந்த
   நங்கைக்கு மணமென்றார்; நுகர்வான் யாரோ?

மணம்நாடி, மலர்ந்துள்ள பூவை நாடி,
   மதுநாடி, அதுதருமவ் வின்பந் தன்னை
மனம்நாடி, மலர்தனையே சுற்றும் வண்டின்
   மனதொடிய அம்மலரைப் பறிப்பார் போலத்
தினம்நாடிப் பார்வையிலே இன்பங் கண்டு
   திளைத்தோடித் திரிந்திட்ட என்றன் உள்ளம்
நிணம்நாடிப் பெறும்வண்ணம் எழிலார் அந்த
   நேரிழைக்கு மணமென்றார், பெறுவான் யாரோ?
                     30-03-60

Monday, October 21, 2013

என் விருப்பம்

                     என் விருப்பம்

    வண்ணக் கனவுகள் என்விருப்பம் --மலரும்
    மாய நிகழ்வுகள்   என்விருப்பம்

பார்முழுதும் பகலவனாய்ப் படர்ந்துவர விருப்பம்;
   பனித்துளியாய்ப் புல்நுனியில் முகங்காட்ட விருப்பம்;
கார்முகிலாய் விண்தடவி மழைபொழிய விருப்பம்;
   காட்டாறாய் மண்தழுவிப் புரண்டுவர விருப்பம்;

பசும்பயிராய்க் காற்றோடு நடனமிட விருப்பம்;
   பசும்பயிரைத் தென்றலெனத் தழுவிடவே விருப்பம்;
பசுமாட்டின் மடுவாகிப் பார்புரக்க விருப்பம்;
   பாரதிரக் காளையெனத் திமிர்ந்துவர விருப்பம்;

முழுமதியைக் கைமீது கொண்டுவர விருப்பம்;
   முகம்பார்க்கும் ஆடியென அதைமாற்ற விருப்பம்;
எழுகதிரை என்வீட்டின் முற்றத்தில் நிறுத்தி
   எல்லோர்க்கும் ஒளிநடனங் காட்டிடவே விருப்பம்;

எல்லாரும் எல்லாமும் பெற்றுலகில் மகிழ்வாய்
   என்றைக்கும் துன்பமிலா திருந்துயர விருப்பம்;
வல்லாரும் மாட்டாரும் இல்லையெனப் புவியில்
   வாழ்வாங்கு மக்களெல்லாம் வாழ்ந்துவர விருப்பம்;

கண்ணசைவில் அதர்மங்கள் கழிந்துபட விருப்பம்;
   கையசைவில் தர்மங்கள் வென்றுவர விருப்பம்;
விண்ணிறங்கித் தேவரலாம் என்வீட்டிற் குவிந்தே
   வேண்டுமேவல் கேட்டுநாளும் பணிசெய்ய விருப்பம்;

விண்மீனைத் தொடுத்தெடுத்தே என்மனையாள் கழுத்தில்
   மின்னுகின்ற பதக்கமெனப் பார்த்திடவே விருப்பம்;
வெண்ணிலவைத் தொட்டிலின்மேல் கட்டிவைத்தே மகனை
   வேடிக்கை பார்க்கவைத்துச் சிரிக்கவைக்க விருப்பம்;

கனவினிலே வந்துசெலுந் தேவதைகள் நனவில்
   கண்முன்னே எழிலாக நடனமிட விருப்பம்;
நினைவினிலே துளீர்க்கின்ற என்னாசை யனைத்தும்
   நடப்பினிலே நடந்தேறி நான்மகிழ விருப்பம்.
            - கல்கி தீபாவளி மலர்--2004 

Saturday, October 12, 2013

gnaanam

            ஞானம்

ஞானி யென்றொரு சொல்படித் தேனவர்
   யாரெனத் தேடி நொந்துநின்றேன்---உயர்
ஞானம் நிறைந்தவர் ஞானிய ரென்கிறார்
   ஞான மென்றால் அதுவென்ன?

பச்சிலை யசைவில் திருவருள் நடனம்
   பார்த்துத் திளைப்ப தொருஞானம் --வீழும்
எச்சிலில் கூட இறைமுகங் கண்டே
   இதயங் களிப்ப தொருஞானம்;

படித்தவர் பாமரர் வேறுபா டின்றிப்
   பாசம் பொழிவ தொருஞானம் --இதயத்
துடிப்பெலா மிறையே! யாரெவ ரென்றிலை
   தொழுங்க ளென்ப தொருஞானம்;

இறையருள் தூதனா யிருந்திடு போதும்
   எளிமையைப் போற்றுத லொருஞானம் --தம்முள்
நிறைந்திடு மாயச் சித்தினை உதறி
   நெகிழ்ந்திடச் செய்வ தொருஞானம்;

இருப்பவர் யாருளம் இருப்பது என்ன?
   என்றறி திறமை ஒருஞானம் --அங்கே
இருப்பவர் தமக்குள் உடன்துயர் துடைத்தல்
   யார்க்கென அறிதல் ஒருஞானம்;

அரியும் சிவனும் வேறிலை ஒன்றென
   அறிந்து தெளிதல் ஒருஞானம் --அந்த
அரிசிவன் பேரால் கலகம் விளைப்பதில்
   அறிவிலை யென்ப தொருஞானம்.

மடமை போக்கி அறிவைப் பெருக்கவே
   மடங்க ளென்ப தொருஞானம் --நாட்டில்
மடங்கள் தனித்தனி யெனினும் வணங்கும்
   பரம்பொரு ளொன்றே எனல்ஞானம்.

இந்த ஞானம் உள்வரப் பெற்றோர்
   எங்குளர்? அவர்தாம் ஞானியரோ --என்றும்
அந்த ஞானி காலடி வீழ்ந்தே
   அறிவுத் தெளிவை அடைவேனா?
             --ஞானக்கிறுக்கன்--2006

Thursday, October 10, 2013

kambavannam

         கம்பவண்ணம்

எந்தவண்ணம் கம்பவண்ணம் என்று கேட்டால்
   ஏதுவண்ணம் நாமுரைப்போம்? படிக்குந் தோறும்
வந்தவண்ண மேயிருக்கும் சுவைகள் பொங்கி
   வழிந்தவண்ண மேயிருக்கும் திறத்தில் மூழ்கிச்
சொந்தவண்ண மேமறந்து கம்பன் காட்டும்
   சுவைவண்ண மாய்மாறித் திளைத்தே ஆடும்
விந்தைவண்ணம் கற்போரின் சிந்தை வண்ணம்;
   மேன்மைவண்ணம் கம்பவண்ணம் போற்று வோமே!

சொல்லிருக்கும் இடத்திலொரு சுவையி ருக்கும்;
   சுவையிருக்கும் சொல்லிலொரு சுகமி ருக்கும்;
வில்லிருக்கும் கையிலொரு விதியி ருக்கும்;
   விதியிருக்கும் வில்லிலொரு கதியி ருக்கும்;
கல்லிருக்கும் பெண்ணிலொரு கதையி ருக்கும்;
   கதையிருக்கும் கல்லிலொரு கனமி ருக்கும்;
சொல்லுக்குள் சொல்லாகச் சுவைகள் வைத்த
   சிற்பியவன் கம்பவண்ணம் சிறந்த வண்ணம்.

மோகவல்லி நடையழகு நடன மாகும்;
   முழுஅழகாய் நளினமுடன் வந்து தோன்றி
மோகமுள்ளில் பூத்துள்ள மலராய் வண்டை
   முனைந்திழுக்க ஆற்றுமுரை தேனே யாகும்;
தாகமெடுத் தோள்நெஞ்சம் பண்பில் பூத்த
   தனியறத்தின் தடாகத்தை நெருங்கி நின்று
தாகமுடன் சிந்துகின்ற உரையைத் தேனாய்த்
   தந்தமகன் கம்பவண்ணம் இன்ப வண்ணம்.

வாலியின்மேல் அம்பைமறைந் தெய்து வம்பாய்
   வாங்குகிறான் சொல்லம்பைச் சரம்ச ரம்மாய்;
கோலமிகும் அந்தஉரை வீச்சில் கம்பன்
   கொடியுயரப் பறக்கிறது; பின்ன ராங்கே
வாலியெனும் சிறியனவே சிந்தி யாதான்
   வதைபட்டும் அறமுதலை வணங்கி மைந்தன்
கோலமிகும் கைபற்றிக் கொடுக்கு மந்தக்
   காட்சியிலே கம்பவண்ணம் அருளின் வண்ணம்.

Tuesday, October 8, 2013

tharaiyil olirum vinmeenkal

   தரையில் ஒளிரும் விண்மீன்கள்

விண்ணைப் பார்த்து வியக்கின்றோம்;
   மனதில் மகிழ்ச்சி அடைகின்றோம்;
மண்ணில் வாழும் அனைவருமே
   மீன்களை இரவில் ரசிக்கின்றோம்;
எண்ணிப் பார்த்தால் மகிழ்ச்சிக்கே
   என்ன காரணம் எனப்புரியும்.
விண்ணின் மீன்கள் சிந்துகின்ற
   வெளிச்சப் பூவே காரணமாம்.

மீன்கள் இல்லா வானத்தை
   மனதில் நினைத்துப் பாருங்கள்!
வானம் கருமிருட் போர்வையென
   வையம் நடுங்கக் காட்சிதரும்.
மீன்கள் தமக்கென ஒளிராமல்
   வானம் பூமி இவைகளுக்காய்
வானில் மின்னிப் பூப்பதுதான்
   மீனின் சிறப்புக் கடிநாதம்.

எத்தனை இளைஞர் இம்மண்ணில்
   ஒளிதரு மீனாய் வாழ்கின்றார்?
எத்தனை மனிதர் சமுதாயம்
   ஒளிபெற விளக்காய்ப் பூக்கின்றார்?
எத்தனை தலைவர் தொண்டருக்காய்
   இனிய ஒளியைத் தருகின்றார்?
அத்தனை பேரும் மண்ணுக்காய்
   ஒளிதரு மீனாய் ஆவாரா?

ஏதோ சோலை யோரத்தில்
   எங்கோ போற்ற ஆளின்றித்
தோதாய்த் தோன்றும் சூழலின்றித்
   துயர இருட்டுக் குகைநடுவில்
ஏதோ ஒருமீன் ஒளிர்வதையே
   உலகம் கண்டு போற்றிடுமா?
தீதே இன்றி அம்மீனின்
   திறத்தை வளர்த்தே ஒளிபெறுமா?

சூரியத் தாக்கில் மீன்களினம்
   சுடரும் ஒளியை இழப்பதுபோல்
வீரிய வறுமைத் தாக்குதலில்
   ஒளியிழப் பவர்கள் ஏராளம்;
யாரெவர் அவர்நிலை கண்டறிவார்?
   யாரெவர் அவர்கட் கொளிதருவார்?
யாரெவர் தந்து போற்றிடினும்
   அவர்கள் மின்னும் மீன்களாவார்.

எத்தனை அழகு பெண்களிடம்?
   எத்தனை ஒளியவர் கண்களிடம்?
அத்தனை அழகும் ஒளிர்கிறதா?
   அவைகள் விண்மீன் ஆகிறதா?
எத்தனை ஒளிகள் சிந்திடினும்
   ஏழைமைக் குளத்துப் பெண்மீனின்
அத்தனை ஒளியும் பெறுதற்கே
   யாரெவ ரிங்கே முன்வருவார்?

தேடித் தேடிப் பாருங்கள்;
   தேடுங் கண்கள் கண்டுணரும்;
நாடி யணைத்தே இளைஞருளம்
   நல்லொளி பெறவழி காட்டுங்கள்!
ஏடுகள் போற்றும் மீன்கூட்டம்
   இந்த மண்ணில் மிளிருவதைத்
தேடுங் கண்ணே கண்டிடலாம்;
   தேடாக் கண்கள் காணாவே!

Sunday, October 6, 2013

puthiya baarathathinaay vaa vaa

 புதிய பாரதத்தினாய் வா! வா!

பாரதி இழுத்த 'பாரத' மென்ன
   பாதியில் நிற்கிறதா?--புதிய
பாரதத் திளைஞர் படையை யழைத்துப்
   பதறிடக் காரணமென்?

அன்றைக் கழைத்தான் பாரதி; நாமோ
   இன்றைக் கழைக்கின்றோம்;--நமக்குப்
பின்னர் பேரன் அழைப்பான்; எந்நாள்
   பாரதம் புதிதாகும்?

இளைஞ ருள்ளார்; அவர்தம் நெஞ்சில்
   எழுச்சிகள் புதியஉள! --அவை
வளைந்து வளர்ந்தே முடத்தெங் காகும்
   மர்மமே புரியவில்லை.

எல்லாம் உள்ளன! எதுவுமே இல்லை!
   என்றவோர் முரண்பாட்டை--இங்கே
எல்லா இளைஞரும் காண்கிறார்--அவர்தம்
   இதயமே என்னசெய்யும்?

பாரத நிலத்தில் விளைத்திட மண்ணே
   பண்பட வேண்டாமா?--மண்ணில்
சீரதை விதைத்துச் சிறப்பினை அறுக்கத்
   திரண்டிட வேண்டாமா?

நல்லதே நாடி நல்லதே செய்யும்
   நல்லவர் படைவரட்டும்;--அவர்தாம்
வல்லவ ராகி வளமைகள் கூட்டும்
   வலிமைகள் பெருக்கட்டும்.

நல்லவை எவையெனத் தெரியா இளைஞரை
   நடப்பிலே காண்கின்றோம்;--அவர்
அல்லவை தம்மை நல்லவை யென்றே
   அணிவதைப் பார்க்கின்றோம்.

விலங்கினை அறுத்தே விடுதலை பெற்றநாம்
   விலங்குவே றணிவதுவா?--மனித
விலங்கெனத் திரிவோர் விலாவினை நொறுக்கியே
   வீழ்த்திட வேண்டாமா?

இளைஞரே எழுக! புதியபா ரதமே
   இங்குமை அழைக்கிறது--நாட்டுக்
களைகளை அழித்தே நலத்தினை விளைக்கும்
   கைகளைக் கேட்கிறது.

தடைகளை நொறுக்கு! தீயவை யனைத்தும்
   சருகென எரித்துவிடு! --எங்கும்
இடையினில் நில்லாப் பயணமே எடு!வுன்
   இதயத்துள் ஒளியேற்று!

புதியதோர் உலகம் படைத்திடப் புறப்படு!
   போரினில் தோள்தட்டு!--புதிய
விதிகளை எழுதிடு! மேலவர் கீழவர்
   வேற்றுமை நொறுக்கிவிடு!

வையகம் செழித்திடும் வழிவகை கையிலே
   மலர்ந்துள தறிந்திடுநீ! --என்றும்
வையகம் அறத்தினில்! மறத்தினை எறிந்திடு!
   வாழ்வினை நிறைத்திடுநீ!
              ---01-09-08-