Thursday, August 30, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                      ஏனடி மறந்தாய்?

தென்றலும் வந்தது; தீங்குளிர் வந்தது;
  தேமலர்ச் சோலையில் பாடிடும்
வண்டினம் வந்தது; மலரினை மொய்த்தது;
   மயங்கிய பூக்களூம் ஆடிட
நின்றிசை பெய்தது; நீள்கதிர் மாய்ந்தது;
   நிரம்பின செவ்வொளி யெங்கணும்;
என்றனைக் கொன்றிட வந்தது மாலையும்;
   ஏனடி நீவர மறந்தனை?

பூங்குயில் வந்தது; புள்ளினம் வந்தது;
   பூத்திடு மலர்களும் சிரித்தன;
மாங்கனி யொன்றினைத் தீண்டிடும் அணிலெனை
   மாய்த்திடு வகையினில் நகைத்தது;
தாங்கிய ஆவலில் தாவிடு பார்வையில்
   தவித்திடு மென்னிலைக் கிரங்கியே
வீங்கிய மாலையும் வீழ்ந்தது; சோலையில்
   விரைந்திட ஏனடி மறந்தனை?

கார்முகில் வந்தது; களிமயில் வந்தது;
   களிப்பொடு தோகையை விரித்தது;
சீர்நடம் பயின்றது; சிந்தையைக் கொண்டது;
   சிந்திய பூவினப் பாயலில்
போரினைத் துவக்கியே பூஞ்சிறைச் சிட்டினைப்
   புல்லிப் புரண்டது ஆணிணை;
பாரினில் மாரன்கை ஓங்கிய வேளையில்
   பாவையே ஏன்வர மறந்தனை?

                      10--11--61
   
   ;
   

Wednesday, August 29, 2012

மாற்றம்

                         மாற்றம்

பதித்தவிதை முளையாகித் தளிரா யாகிப்
   படர்ந்துவரு கொடியாகி நுனியில் முத்துப்
பதித்ததுபோல் மொட்டாகிச் சிரித்து நிற்கும்
   படர்மணத்துப் பூவாதல் இயற்கை மாற்றம்;
குதிகொண்ட நெஞ்சத்துக் குமரி கொய்யக்
   குழலேறி யழகுபெறல் அடுத்த மாற்றம்;
சுதியோடு வேண்டிநின்ற வண்டுங் கூடத்
   தொடவிரும்பா துதிர்ந்திடுதல் இறுதி மாற்றம்;

கள்ளமிலாச் சிரிப்போடு கழுத்தைக் கட்டிக்
   கைகொட்டி மேல்விழுந்து முத்த மீந்த
வெள்ளையுளச் சிறுபெண்ணாள் ஒதுங்கி நின்று
   மேலாடை சரிசெய்து நிலத்தைப் பார்த்தே
உள்ளத்து மகிழ்ச்சிக்கோ ரணையைக் கட்டி
   ஓரத்தில் இதழசைத்துத் தூர நின்று
வெள்ளத்தி லாடுமிளங் கொடியைப் போல
   விளங்குகின்ற நிலையதுதான் பருவ மாற்றம்;

கொத்துகின்ற கலைகற்றுக் கொடுத்துக் குப்பை
   கிளறியதிற் கிடைத்தவற்றைக் குஞ்சுக் கீந்து
தத்துமிளங் குஞ்சுகளைச் சிறகிற் காத்துத்
   தனியன்பு காட்டிட்ட கோழி யோர்நாள்
தத்துகின்ற குஞ்சதுவும் பெரிதா யானால்
   தன்னருகும் நெருங்கவிடா தோட்டி யோட்டி
கொத்துகின்ற நிலையதுவே அன்பின் மாற்றம்;
   கோழியினப் பெருக்கத்திற் கதுவும் வேண்டும்

காலைவரும்; இருள்மாறும்; வானில் மெல்லக்
   கதிரேறும்; ஆட்சிசெய்யும்; பின்ன ராங்கே
மாலைவரும்; கதிர்மறையும்; குளுமை காட்டி
   வட்டநிலா வான்பரப்பில் ஆட்சி கூட்டும்;
காலையிலே துவங்கிமறு காலைக் குள்ளே
   கடுகிவரு மாற்றந்தான் நாளின் மாற்றம்;
வேலைசூழ்ந் தோய்வின்றிச் சுழலு கின்ற
   வியனுலகிற் கிம்மாற்றம் என்றுந் தேவை.

மாற்றத்தை வேண்டுவதே உலகி யற்கை;
   மனிதவுடல் நாள்தோறும் மாறும்; அந்த
மாற்றத்தை வளர்ச்சியென்போம்; அறிவு சேர
   மனமதுவும் மாறுமதை மலர்ச்சி என்போம்;
தோற்றத்தி லிருந்தபடி இருப்பின் யாதும்
   துளிப்பெருமை பெறுவதில்லை உண்மை; ஆனால்
மாற்றத்தால் நன்மைவர வேண்டும்; வீணே
   மாற்றத்தால் பயனில்லை; மாற்றம் வெல்க!

           (1968 ல்மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்
            எட்டாம் ஆண்டுக் கவிதைப் போட்டியில் முதற்
            பரிசு பெற்றது.வழங்கியவர் கலைஞர்.)  
    .

puthiyathor ulagu seyvom


 புதியதோர் உலகு செய்வோம் ----சேவை
                    (திருச்சி வானொலி--14-01-69- பொங்கற்
               கவியரங்கம் )

இதற்குமுன்னே புத்துலகம் சமைக்க எண்ணி
   இவ்வுலக நெருப்பாற்றில் நீந்தி உள்ளம்
வதைப்பெய்தி உடல்கருகிச் செத்த சான்றோர்
   வரலாறு நன்றாகத் தெரிந்தி ருந்தும்
புதிதாக உலகத்தைச் செய்வோ மென்று
   புறப்பட்ட கவிஞர்காள்! உணர்ச்சி வேகக்
கொதிப்பினிலே புறப்பட்டீர்!  அய்யோ பாவம்!
   கொடுங்குளவிக் கொடுக்கினிலே கைவைக் கின்றீர்.

இருக்கின்ற சமுதாய நிலையை ஆங்கே
   ஏழையினம் வாழ்கின்ற முறையை, இன்னும்
இருக்கின்ற சீர்கேட்டை யெல்லாம் நாமா
   எடுத்துரைத்து நாடறிதல் வேண்டும் ? கையில்
இருக்கின்ற புண்ணுக்குக் கண்ணா டீயா?
   எரிகின்ற நெஞ்சுக்கு விளக்கம் வேறா?
விரிக்கின்ற வாய்ப்பந்தல் தொலைத்துச் சேவை
   விரித்திட்டால் புதிதாக உலகம் ஆகும்.

சாதியினை, வேற்றுமையை, அதனால் கூடும்
   சஞ்சலத்தைத் தவிர்க்கவெனச் சான்றோன் காந்தி
ஆதிமுதற் சேவைசெய்தான்; உயிரும் ஈந்தான்;
   அதற்குப்பின் தொண்டரென்பார் பெருகக் கண்டோம்;
சாதிப்பேய் தொலைந்ததுவா? பேயாட் டத்தில்
   சமுதாயம் பிழைத்ததுவா? மணக்க லப்பால்
சாதியொன்று புதிதாக முளைத்த லன்றிச்
   சமுதாயம் எப்பயனைக் கண்ட தய்யா?

மேடையிலே நாப்பறையை அடிப்பார்; சாதி
   வேற்றுமையைச் சொல்லிமனம் துடிப்பார்; கண்ணீர்
மேடையினை மூழ்கடிக்க நடிப்பார்; தீயில்
   வேகின்ற புழுப்போலத் தவிப்பார்; பேச்சு
மேடையிலே கைதட்டைக் குவிப்பார்; தேர்தல்
   வந்துவிட்டால் தன்சாதி பெரிதாய்க் காட்டித்
தேடுகிறார் நம்வாக்கு நமக்கே என்று;
   செயல்வீரர் இவர்தொண்டர்; செயல்தான் சேவை.

பறவைக்குச் சிறுபுழுக்கள் படைத்தான்; நச்சுப்
   பாம்பிற்குத் தவளையினைக் கொடுத்தான்; அந்தச்
சிறுபுழுக்கென் றழுக்குகளை வைத்தான்; துள்ளும்
   தவளைக்குப் பூச்சிகளைக் குவித்தான்; காட்டில்
திரிகின்ற விலங்குகட்கும் உணவைத் தந்தான்;
   தேடியுண்ணும் வலிமையொடு வழியுந் தந்தான்;
பிறந்திட்ட ஏழைகளுக் கென்ன வைத்தான்?
   படுந்துன்பம் தலைவிதியா? அதுவா நீதி?

வயல்நீரைப் பயிரெல்லாம் ஏற்கும்; சோலை
   வருதென்றல் மலர்க்கெல்லாம் பொதுவா யாகும்;
கயல்மீன்கள் குளத்துணவைப் பொதுவாய்க் கொள்ளும்;
   கலைமதியின் ஒளிவெள்ளம் பொதுவா யாகும்;
குயிலிசையும் பொதுவாகும்; இறைவ னிங்கே
   கொடுத்திட்ட எல்லாமே எல்லார்க் காகும்;
மயல்நிறைந்த இவ்வுலகச் செல்வ மொன்றே
   மாளிகைக்குத் த்னியான உடைமை யாகும்.

குழிவிழுந்த கன்னத்தை, வளைந்த கேள்விக்
   குறிபோன்ற உடல்தன்னை, தெய்வத் தின்மேற்
பழிபோட்டுப் பசிதீர்க்கும் நிலையை, நாளும்
   பணத்திற்காண் மகன்நோகும் பாட்டை, மிக்க
இழிநிலையில் இரந்துண்ணும் செயலை, ஏதும்
   இயலாது மடிகின்ற துணிவை, இந்தக்
குழிகளையே மூடிவிட்டுச் சமமா யாக்கிக்
   கூட்டிவிட்டால் புதுவுலகம் அதுதான் சேவை.

இருப்போனை இல்லானாய்ச் செய்ய வேண்டாம்;
   இல்லானை இருப்போனாய்ச் செய்வோம்; மேனி
பெருப்பானை இளைப்பானாய்ச் செய்ய வேண்டாம்;
   பெருத்திடவே இளைத்தானைச் செய்வோம்; வீட்டில்
இருப்போரைத் தெருவிழுக்க வேண்டாம்; வாழ
   இல்லாதோர் இல்லமுறச் செய்வோம்; இந்தத்
திருப்பத்தைத் துணிவோடு செய்திட் டால்தான்
   தேடிவந்த புதுவுலகம் கண்ணிற் காணும்.

சமுதாய வாழ்க்கையிலே தேங்கி நிற்கும்
   சாக்கடையைத் துப்புரவு செய்தல் வேண்டும்;
சமுதாய நிலத்தினிலே மண்டி நிற்கும்
   சாதியெனும் களைதன்னை நீக்க வேண்டும்;
சமுதாயப் பாதையிலே மேடு பள்ளம்
   தடுமாறச் செய்கிறதே அதனை இந்தச்
சமுதாயக் காவலர்கள் சரிசெய் தால்தான்
   சமநிலையில் புத்துலகம் அமைதல் கூடும்.

ஏடெடுத்துப் பாட்டெழுதுங் கவிகாள்! நாம்தாம்
   இதுவரையில் எதைஎதையோ பாடி விட்டோம்;
கோடுயர்ந்த பிறையினையே பாடி வந்தோம்;
   கூடியொளிர் மீனினத்தைப் பாடி வந்தோம்;
ஓடிவரு தென்றலினைப் பாடி வந்தோம்;
   உள்ளமுணர் காதலினைப் பாடி வந்தோம்;
தேடியொரு சேவையினிச் செய்வோம்; நம்மைச்
   சுற்றியுள்ள ஏழைகளைப் பாட்டிற் காண்போம்.

மாலைவரை வீடுகட்டும் தொழிலைச் செய்து
   மனையின்றித் தெருவோரம் தூங்கு வோரை,
சேலைவகை நவநவமாய்ச் செய்து விட்டுச்
   சுற்றவொரு துணியின்றி வாடு வோரைக்,
காலைமுதல் மாட்டோடு பாடு பட்டுக்
   கதிரறுத்துப் பசியோடு திரும்பு வோரை,
மாலையிலே வீடுவந்தும் அமைதி காணா
   வக்கற்ற ஏழைகளைப் பாட்டிற் கண்போம்.

ஒட்டியுள்ள அவர்வயிற்றை, உடம்பின் எண்சாண்
   ஒருசாணாய்க் குறுகிவரும் நிலையை, என்பில்
ஒட்டியுள்ள தோலுடலை, அதனைப் போர்த்த
   இல்லாத வறுமையினை, அவனை வாழ்விற்
கட்டிநொந்த பெண்கொடியைப், புன்சி ரிப்பைக்
   காணாத அவள்முகத்தை, மக்கள் தம்மை
எட்டியுதைத் திடுமந்த எரிச்சல் தன்னை,
   ஏட்டினிலே பாடிவைத்தாற் குறைந்தா போகும்?

நிலவுதனைப் பாடியது போதும்; ஆடும்
   நீளலையைப் பாடியது போதும்; சோலை
கலகலக்கும் குயிற்பாட்டுப் போதும்; கூடும்
   காதலினைப் பாடியது போதும்; வீரக்
களத்தினையே பாடியது போதும்; பெண்கள்
   கற்பினையும் பாடியது போதும்; இந்த
நிலையில்லாச் சமுதாய வாழ்க்கை நன்கு
   நிலைபெறவே புதியமுறைப் பாடல் செய்வோம்.  
   
   

Sunday, August 5, 2012

விடியலும் உண்டா ?

      விடியலும் உண்டா?

தவறுகள் நியாய மாகிச்
  சாதனை படைக்கும்; வென்ற
தவறுகள் ஊர்வ லம்போய்ச்
  சந்தியில் முழங்கும்; நீதி
கவலையே யின்றிக் கண்ணைக்
  கட்டியே தூங்கும்; இந்த
அவலமே நடப்பா யாகும்
  அவனியில் விடிய லுண்டா?

வேலியே பயிரை மேயும்
  வேதனை திகழும்; பெண்ணின்
தாலியே சுருக்காய் மாறிச்
  சாவினை நிகழ்த்தும்; கெட்ட
காலிகள் கூட்டுச் சேர்ந்தே
  காரியம் முடிக்கும்; நாளும்
போலிகள் வெல்லு மிந்தப்
  பூமியில் விடிய லுண்டா?

சத்தியம் குத்துப் பட்டுச்
  செத்திடும்; தர்ம மிங்கே
நித்தமும் வெட்டுப் பட்டே
  நடுங்கிடும்; நேர்மை நாட்டில்
சுத்தமாய்த் துடைக்கப் பட்டுத்
  துவண்டிடும்; நியாயம் நாளும்
கத்தியே ஒடுங்கும்; இந்தக்
  காசினி விடிய லுண்டா?

காந்திகள் நெஞ்சைப் பாவக்
  குண்டுகள் துளைக்கும்; வஞ்சம்
ஏந்திகள் நெஞ்சம் மாலை
  ஏந்தியே சிரிக்கும்; சூழ்ச்சி
மாந்துவோர் வாழ்க்கை நாளும்
  மகிழ்வினில் செழிக்கும்; தூயோர்
சாந்தியே இன்றி நையும்
  சகத்தினில் விடிய லுண்டா?
             -அமுதசுரபி தீபாவளி மலர்-92      

சுதந்திரம்

                                சுதந்திரம்

கற்பனைச் சிறகின் மீதேறி--வானக்
  கருமுகிற் கூட்டம் கிழித்தெறிந்தே
அற்புதச் சுதந்திரக் கனவுகளில்--நம்
  அகங்கள் மிதந்திடக் கனவுகண்டோம்

கையில் சுதந்திரக் கனிபெற்றோம்--அதைக்
  கண்ணுற உருட்டிக் களிப்புற்றோம்
கையில் கிடைத்ததை வாய்சுவைக்க--அங்கே
  'கடக்'கெனப் பல்லுடை படுகிறது.

கனிக்குளே கல்லா? வியக்கின்றோம்!--ஆனால்
  கடைப்பல் உடைவதை உணர்கின்றோம்
இனிப்புள சுதந்திரக் கனிக்குள்ளே--ஊழல்
  எப்படிக் கல்லெனப் புகுந்ததுவோ?

கனிச்சுளை யெல்லாம் கல்லானால்--அந்தக்
  கனிபெறும் பெயர்வே றாகாதா?
கனிக்குளே கலந்துள கற்களையே--கழித்துக்
  கனியினைக் காத்திட வேண்டாமா?

சுதந்திரக் காற்றில் கிருமிகளாய்--ஊழல்
  கலந்திடக் கண்டும் பொறுத்திருந்தால்
சுதந்திர நாடே அழியாதா?--அதன்
  சுவாசக் காற்றுநஞ் சாகாதா?

காற்று வெளியெலாம் நஞ்சானால்--நம்
  கண்ணெனும் தாய்நா டழியாதா?
கூற்றுவ னாய்வரும் அந்நஞ்சை--நாம்
  கொன்று காத்திட வேண்டாமா?

இனியொரு சுதந்திரப் போராட்டம்-- இங்கே
  எழுந்துதான் நாடு பிழைத்திடுமா?
கனியினைக் குரங்குகைக் கொடுத்துவிட்டே--நாம்
  கதறினால் கனிகளே பிழைத்திடுமா?

சுதந்திர நாட்டுக் குடிமகன்கள்-- பிழை
  செய்திடா உணர்வே பெறவேண்டும்.
இதந்தரு நன்மை பெருகிடவே--தூயோர்
  இங்குவந் தாட்சிகள் செயவேண்டும்.

சுதந்திரக் கனியைச் சுவைத்திடுவோம்--நாம்
  சொல்லொணாப் பெருமகிழ் வடைந்திடுவோம்
சுதந்திர நாட்டின் குடிகள்நாம்--என்றும்
  தூய்மை வாய்மை யுடன்வாழ்வோம். 

Saturday, August 4, 2012

ஏனிந்தப் பிறவி

                             ஏனிந்தப் பிறவி ?

ஏனிந்தப் பிறவி? எனக்குத் தெரியவில்லை;
நானிந்தப் பிறவி விரும்பி எடுக்கவில்லை;

நாயாய்ப் பிறந்திருந்தால் நன்றிக்கு விளக்கமாவேன்
காயாய்ப் பிறந்தாலும் கனியாகிப் பயன்தருவேன்

புழுவாய்ப் பிறந்தாலும் மண்ணை உரமாக்கி
உழுவார்க் கொருபயனை உதவி மகிழ்ந்திருப்பேன்;

மனிதனாய்ப் பிறந்துவிட்டேன்; மனிதனாய் வாழவில்லை;
மனசுக்குள் ஒருபாதி மிருகமாய் வாழ்கிறது;

நேர்மை தூய்மைவாய்மை எனக்குப் புரியவில்லை;
சீர்மை எனஒன்று தேவைதானா? தெரியவில்லை;

சுற்றிப் பார்க்கின்றேன்; எனைச்சுற்றிப் பெருங்கூட்டம்;
உற்றுப் பார்க்கின்றேன்; மனிதன்யார் தெரியவில்லை;

குள்ள நரியாகிக் குழிபறிப்போர்; எப்போதும்
உள்ளத்தை மறைத்தே ஒழுகும் திருக்கூட்டம்;

கண்ணீரைக் கொட்டிக் கதறியழு தணைத்தவர்கள்
வெந்நீரை ஊற்றி வேடிக்கை காட்டுகின்றார்;

கொள்கை என்றாலே கொள்ளுங்கை என்கின்றார்
கொள்கையைப் புதைக்கலாம்; ஆதாயம் குறியென்பார்;

எனைச்சுற்றி இவர்களே இருக்கையில் இவ்வுலகில்
எனக்கிந்தப் பிறவி ஏன்கொடுத்தாய் இறைவாநீ?

கண்குருடாய்ப் படைத்திருந்தால் கொடுமையின் கூத்தாட்டம்
க்ண்ணிற் படாமல் களிப்போடு வாழ்ந்திருப்பேன்;

செவிபழுதாய்ப் படைத்திருந்தால் தீமைகளின் கூக்குரல்கள்
புவியைப் புரட்டுவதைக் கேளாமல் வாழ்ந்திருப்பேன்;

இதயம் எனஒன்றைப் படைக்காமல் இருந்திருந்தால்
இதயமிலா மனிதரினை எண்ணாமல் இருந்திருப்பேன்;

ஏனிந்தப் பிறவி எனக்களித்தாய்? நாள்தோறும்
நானிந்தப் பிறவிகளைப் பார்த்து நோவதற்கா?

நெஞ்சுக்கும் வாய்க்கும் நெடுந்தூர மாகிறது;
வஞ்சமும் சூழ்ச்சியும் வீதிநட மிடுகிறது;

குத்தாட்டம் ஆடுகின்ற கொடுமைகளைக் கண்டுதினம்
செத்துப் பிழைக்கின்றேன்; எனக்கேன் இப்பிறவி?

தூய்மை திகழுமிடம்; சீர்மை வாழுமிடம்;
வாய்மை வெல்லுமிடம் இருந்தால் பிறக்கவைப்பாய்;

அப்படியோர் இடமுனக்கே தெரியவில்லை என்றிட்டால்
இப்படிப் பிறவிவேண்டாம்; நீயே பிறந்துவா;

வந்துபார்! நீபடைத்த உலகத்துக் கொடுமைகளை
நொந்துபார்! பிறகுநீயே ஏதேனும் முடிவையெடு;

அதுவரை எனக்கேதும் பிறவி அளிக்காதே!
இதைமீறிப் படைத்தால்நான் என்னசெய்வேன்? தெரியாது.;