Wednesday, August 29, 2012

puthiyathor ulagu seyvom


 புதியதோர் உலகு செய்வோம் ----சேவை
                    (திருச்சி வானொலி--14-01-69- பொங்கற்
               கவியரங்கம் )

இதற்குமுன்னே புத்துலகம் சமைக்க எண்ணி
   இவ்வுலக நெருப்பாற்றில் நீந்தி உள்ளம்
வதைப்பெய்தி உடல்கருகிச் செத்த சான்றோர்
   வரலாறு நன்றாகத் தெரிந்தி ருந்தும்
புதிதாக உலகத்தைச் செய்வோ மென்று
   புறப்பட்ட கவிஞர்காள்! உணர்ச்சி வேகக்
கொதிப்பினிலே புறப்பட்டீர்!  அய்யோ பாவம்!
   கொடுங்குளவிக் கொடுக்கினிலே கைவைக் கின்றீர்.

இருக்கின்ற சமுதாய நிலையை ஆங்கே
   ஏழையினம் வாழ்கின்ற முறையை, இன்னும்
இருக்கின்ற சீர்கேட்டை யெல்லாம் நாமா
   எடுத்துரைத்து நாடறிதல் வேண்டும் ? கையில்
இருக்கின்ற புண்ணுக்குக் கண்ணா டீயா?
   எரிகின்ற நெஞ்சுக்கு விளக்கம் வேறா?
விரிக்கின்ற வாய்ப்பந்தல் தொலைத்துச் சேவை
   விரித்திட்டால் புதிதாக உலகம் ஆகும்.

சாதியினை, வேற்றுமையை, அதனால் கூடும்
   சஞ்சலத்தைத் தவிர்க்கவெனச் சான்றோன் காந்தி
ஆதிமுதற் சேவைசெய்தான்; உயிரும் ஈந்தான்;
   அதற்குப்பின் தொண்டரென்பார் பெருகக் கண்டோம்;
சாதிப்பேய் தொலைந்ததுவா? பேயாட் டத்தில்
   சமுதாயம் பிழைத்ததுவா? மணக்க லப்பால்
சாதியொன்று புதிதாக முளைத்த லன்றிச்
   சமுதாயம் எப்பயனைக் கண்ட தய்யா?

மேடையிலே நாப்பறையை அடிப்பார்; சாதி
   வேற்றுமையைச் சொல்லிமனம் துடிப்பார்; கண்ணீர்
மேடையினை மூழ்கடிக்க நடிப்பார்; தீயில்
   வேகின்ற புழுப்போலத் தவிப்பார்; பேச்சு
மேடையிலே கைதட்டைக் குவிப்பார்; தேர்தல்
   வந்துவிட்டால் தன்சாதி பெரிதாய்க் காட்டித்
தேடுகிறார் நம்வாக்கு நமக்கே என்று;
   செயல்வீரர் இவர்தொண்டர்; செயல்தான் சேவை.

பறவைக்குச் சிறுபுழுக்கள் படைத்தான்; நச்சுப்
   பாம்பிற்குத் தவளையினைக் கொடுத்தான்; அந்தச்
சிறுபுழுக்கென் றழுக்குகளை வைத்தான்; துள்ளும்
   தவளைக்குப் பூச்சிகளைக் குவித்தான்; காட்டில்
திரிகின்ற விலங்குகட்கும் உணவைத் தந்தான்;
   தேடியுண்ணும் வலிமையொடு வழியுந் தந்தான்;
பிறந்திட்ட ஏழைகளுக் கென்ன வைத்தான்?
   படுந்துன்பம் தலைவிதியா? அதுவா நீதி?

வயல்நீரைப் பயிரெல்லாம் ஏற்கும்; சோலை
   வருதென்றல் மலர்க்கெல்லாம் பொதுவா யாகும்;
கயல்மீன்கள் குளத்துணவைப் பொதுவாய்க் கொள்ளும்;
   கலைமதியின் ஒளிவெள்ளம் பொதுவா யாகும்;
குயிலிசையும் பொதுவாகும்; இறைவ னிங்கே
   கொடுத்திட்ட எல்லாமே எல்லார்க் காகும்;
மயல்நிறைந்த இவ்வுலகச் செல்வ மொன்றே
   மாளிகைக்குத் த்னியான உடைமை யாகும்.

குழிவிழுந்த கன்னத்தை, வளைந்த கேள்விக்
   குறிபோன்ற உடல்தன்னை, தெய்வத் தின்மேற்
பழிபோட்டுப் பசிதீர்க்கும் நிலையை, நாளும்
   பணத்திற்காண் மகன்நோகும் பாட்டை, மிக்க
இழிநிலையில் இரந்துண்ணும் செயலை, ஏதும்
   இயலாது மடிகின்ற துணிவை, இந்தக்
குழிகளையே மூடிவிட்டுச் சமமா யாக்கிக்
   கூட்டிவிட்டால் புதுவுலகம் அதுதான் சேவை.

இருப்போனை இல்லானாய்ச் செய்ய வேண்டாம்;
   இல்லானை இருப்போனாய்ச் செய்வோம்; மேனி
பெருப்பானை இளைப்பானாய்ச் செய்ய வேண்டாம்;
   பெருத்திடவே இளைத்தானைச் செய்வோம்; வீட்டில்
இருப்போரைத் தெருவிழுக்க வேண்டாம்; வாழ
   இல்லாதோர் இல்லமுறச் செய்வோம்; இந்தத்
திருப்பத்தைத் துணிவோடு செய்திட் டால்தான்
   தேடிவந்த புதுவுலகம் கண்ணிற் காணும்.

சமுதாய வாழ்க்கையிலே தேங்கி நிற்கும்
   சாக்கடையைத் துப்புரவு செய்தல் வேண்டும்;
சமுதாய நிலத்தினிலே மண்டி நிற்கும்
   சாதியெனும் களைதன்னை நீக்க வேண்டும்;
சமுதாயப் பாதையிலே மேடு பள்ளம்
   தடுமாறச் செய்கிறதே அதனை இந்தச்
சமுதாயக் காவலர்கள் சரிசெய் தால்தான்
   சமநிலையில் புத்துலகம் அமைதல் கூடும்.

ஏடெடுத்துப் பாட்டெழுதுங் கவிகாள்! நாம்தாம்
   இதுவரையில் எதைஎதையோ பாடி விட்டோம்;
கோடுயர்ந்த பிறையினையே பாடி வந்தோம்;
   கூடியொளிர் மீனினத்தைப் பாடி வந்தோம்;
ஓடிவரு தென்றலினைப் பாடி வந்தோம்;
   உள்ளமுணர் காதலினைப் பாடி வந்தோம்;
தேடியொரு சேவையினிச் செய்வோம்; நம்மைச்
   சுற்றியுள்ள ஏழைகளைப் பாட்டிற் காண்போம்.

மாலைவரை வீடுகட்டும் தொழிலைச் செய்து
   மனையின்றித் தெருவோரம் தூங்கு வோரை,
சேலைவகை நவநவமாய்ச் செய்து விட்டுச்
   சுற்றவொரு துணியின்றி வாடு வோரைக்,
காலைமுதல் மாட்டோடு பாடு பட்டுக்
   கதிரறுத்துப் பசியோடு திரும்பு வோரை,
மாலையிலே வீடுவந்தும் அமைதி காணா
   வக்கற்ற ஏழைகளைப் பாட்டிற் கண்போம்.

ஒட்டியுள்ள அவர்வயிற்றை, உடம்பின் எண்சாண்
   ஒருசாணாய்க் குறுகிவரும் நிலையை, என்பில்
ஒட்டியுள்ள தோலுடலை, அதனைப் போர்த்த
   இல்லாத வறுமையினை, அவனை வாழ்விற்
கட்டிநொந்த பெண்கொடியைப், புன்சி ரிப்பைக்
   காணாத அவள்முகத்தை, மக்கள் தம்மை
எட்டியுதைத் திடுமந்த எரிச்சல் தன்னை,
   ஏட்டினிலே பாடிவைத்தாற் குறைந்தா போகும்?

நிலவுதனைப் பாடியது போதும்; ஆடும்
   நீளலையைப் பாடியது போதும்; சோலை
கலகலக்கும் குயிற்பாட்டுப் போதும்; கூடும்
   காதலினைப் பாடியது போதும்; வீரக்
களத்தினையே பாடியது போதும்; பெண்கள்
   கற்பினையும் பாடியது போதும்; இந்த
நிலையில்லாச் சமுதாய வாழ்க்கை நன்கு
   நிலைபெறவே புதியமுறைப் பாடல் செய்வோம்.  
   
   

No comments:

Post a Comment