Wednesday, August 29, 2012

மாற்றம்

                         மாற்றம்

பதித்தவிதை முளையாகித் தளிரா யாகிப்
   படர்ந்துவரு கொடியாகி நுனியில் முத்துப்
பதித்ததுபோல் மொட்டாகிச் சிரித்து நிற்கும்
   படர்மணத்துப் பூவாதல் இயற்கை மாற்றம்;
குதிகொண்ட நெஞ்சத்துக் குமரி கொய்யக்
   குழலேறி யழகுபெறல் அடுத்த மாற்றம்;
சுதியோடு வேண்டிநின்ற வண்டுங் கூடத்
   தொடவிரும்பா துதிர்ந்திடுதல் இறுதி மாற்றம்;

கள்ளமிலாச் சிரிப்போடு கழுத்தைக் கட்டிக்
   கைகொட்டி மேல்விழுந்து முத்த மீந்த
வெள்ளையுளச் சிறுபெண்ணாள் ஒதுங்கி நின்று
   மேலாடை சரிசெய்து நிலத்தைப் பார்த்தே
உள்ளத்து மகிழ்ச்சிக்கோ ரணையைக் கட்டி
   ஓரத்தில் இதழசைத்துத் தூர நின்று
வெள்ளத்தி லாடுமிளங் கொடியைப் போல
   விளங்குகின்ற நிலையதுதான் பருவ மாற்றம்;

கொத்துகின்ற கலைகற்றுக் கொடுத்துக் குப்பை
   கிளறியதிற் கிடைத்தவற்றைக் குஞ்சுக் கீந்து
தத்துமிளங் குஞ்சுகளைச் சிறகிற் காத்துத்
   தனியன்பு காட்டிட்ட கோழி யோர்நாள்
தத்துகின்ற குஞ்சதுவும் பெரிதா யானால்
   தன்னருகும் நெருங்கவிடா தோட்டி யோட்டி
கொத்துகின்ற நிலையதுவே அன்பின் மாற்றம்;
   கோழியினப் பெருக்கத்திற் கதுவும் வேண்டும்

காலைவரும்; இருள்மாறும்; வானில் மெல்லக்
   கதிரேறும்; ஆட்சிசெய்யும்; பின்ன ராங்கே
மாலைவரும்; கதிர்மறையும்; குளுமை காட்டி
   வட்டநிலா வான்பரப்பில் ஆட்சி கூட்டும்;
காலையிலே துவங்கிமறு காலைக் குள்ளே
   கடுகிவரு மாற்றந்தான் நாளின் மாற்றம்;
வேலைசூழ்ந் தோய்வின்றிச் சுழலு கின்ற
   வியனுலகிற் கிம்மாற்றம் என்றுந் தேவை.

மாற்றத்தை வேண்டுவதே உலகி யற்கை;
   மனிதவுடல் நாள்தோறும் மாறும்; அந்த
மாற்றத்தை வளர்ச்சியென்போம்; அறிவு சேர
   மனமதுவும் மாறுமதை மலர்ச்சி என்போம்;
தோற்றத்தி லிருந்தபடி இருப்பின் யாதும்
   துளிப்பெருமை பெறுவதில்லை உண்மை; ஆனால்
மாற்றத்தால் நன்மைவர வேண்டும்; வீணே
   மாற்றத்தால் பயனில்லை; மாற்றம் வெல்க!

           (1968 ல்மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்
            எட்டாம் ஆண்டுக் கவிதைப் போட்டியில் முதற்
            பரிசு பெற்றது.வழங்கியவர் கலைஞர்.)  
    .

No comments:

Post a Comment