Saturday, August 4, 2012

ஏனிந்தப் பிறவி

                             ஏனிந்தப் பிறவி ?

ஏனிந்தப் பிறவி? எனக்குத் தெரியவில்லை;
நானிந்தப் பிறவி விரும்பி எடுக்கவில்லை;

நாயாய்ப் பிறந்திருந்தால் நன்றிக்கு விளக்கமாவேன்
காயாய்ப் பிறந்தாலும் கனியாகிப் பயன்தருவேன்

புழுவாய்ப் பிறந்தாலும் மண்ணை உரமாக்கி
உழுவார்க் கொருபயனை உதவி மகிழ்ந்திருப்பேன்;

மனிதனாய்ப் பிறந்துவிட்டேன்; மனிதனாய் வாழவில்லை;
மனசுக்குள் ஒருபாதி மிருகமாய் வாழ்கிறது;

நேர்மை தூய்மைவாய்மை எனக்குப் புரியவில்லை;
சீர்மை எனஒன்று தேவைதானா? தெரியவில்லை;

சுற்றிப் பார்க்கின்றேன்; எனைச்சுற்றிப் பெருங்கூட்டம்;
உற்றுப் பார்க்கின்றேன்; மனிதன்யார் தெரியவில்லை;

குள்ள நரியாகிக் குழிபறிப்போர்; எப்போதும்
உள்ளத்தை மறைத்தே ஒழுகும் திருக்கூட்டம்;

கண்ணீரைக் கொட்டிக் கதறியழு தணைத்தவர்கள்
வெந்நீரை ஊற்றி வேடிக்கை காட்டுகின்றார்;

கொள்கை என்றாலே கொள்ளுங்கை என்கின்றார்
கொள்கையைப் புதைக்கலாம்; ஆதாயம் குறியென்பார்;

எனைச்சுற்றி இவர்களே இருக்கையில் இவ்வுலகில்
எனக்கிந்தப் பிறவி ஏன்கொடுத்தாய் இறைவாநீ?

கண்குருடாய்ப் படைத்திருந்தால் கொடுமையின் கூத்தாட்டம்
க்ண்ணிற் படாமல் களிப்போடு வாழ்ந்திருப்பேன்;

செவிபழுதாய்ப் படைத்திருந்தால் தீமைகளின் கூக்குரல்கள்
புவியைப் புரட்டுவதைக் கேளாமல் வாழ்ந்திருப்பேன்;

இதயம் எனஒன்றைப் படைக்காமல் இருந்திருந்தால்
இதயமிலா மனிதரினை எண்ணாமல் இருந்திருப்பேன்;

ஏனிந்தப் பிறவி எனக்களித்தாய்? நாள்தோறும்
நானிந்தப் பிறவிகளைப் பார்த்து நோவதற்கா?

நெஞ்சுக்கும் வாய்க்கும் நெடுந்தூர மாகிறது;
வஞ்சமும் சூழ்ச்சியும் வீதிநட மிடுகிறது;

குத்தாட்டம் ஆடுகின்ற கொடுமைகளைக் கண்டுதினம்
செத்துப் பிழைக்கின்றேன்; எனக்கேன் இப்பிறவி?

தூய்மை திகழுமிடம்; சீர்மை வாழுமிடம்;
வாய்மை வெல்லுமிடம் இருந்தால் பிறக்கவைப்பாய்;

அப்படியோர் இடமுனக்கே தெரியவில்லை என்றிட்டால்
இப்படிப் பிறவிவேண்டாம்; நீயே பிறந்துவா;

வந்துபார்! நீபடைத்த உலகத்துக் கொடுமைகளை
நொந்துபார்! பிறகுநீயே ஏதேனும் முடிவையெடு;

அதுவரை எனக்கேதும் பிறவி அளிக்காதே!
இதைமீறிப் படைத்தால்நான் என்னசெய்வேன்? தெரியாது.; 

No comments:

Post a Comment