Sunday, September 29, 2013

vittu viduthalaiyaaki

     விட்டு விடுதலையாகி.........

விட்டு விடுதலை யாவெனத் திகைக்கிறேன்;
விட்டு விடுவ தெதையெனக் கேட்கிறேன்;

கட்டுப் படாது கட்டறுத் தலைந்ததைக்
கட்டில் வைத்த கட்டை விடுவதா?

ஆசை நெருப்பை அணைத்துக் கலந்த
ஆசைக் குளத்தின் அணைப்பை விடுவதா?

பாச உணர்வின் பரப்பை உணர்த்திய
நேசக் கொடியின் நினைப்பை விடுவதா?

கற்பனைச் சிறகாய்க் கவிதைப் பொருளாய்
நிற்பவ ளவளின் பிணைப்பை விடுவதா?

இன்பம் இதுவென இதய முணர்த்திய
இன்பக் கொள்முதற் களஞ்சியம் விடுவதா?

அன்பை விரிக்கும் அற்புதம் காட்டிய
நண்பர் கூட்டை நறுக்கென விடுவதா?

பல்வகைப் படிப்பைப் பல்வகை யுணர்வைப்
பல்வகை கொடுத்த பள்ளியை விடுவதா?

நல்லவர் அணைப்பை நவில்தொறும் இனிக்கும்
நல்லவர் உரையை நானே விடுவதா?

பாட்டில் இன்பம் பகிர்ந்ததை விடுவதா?
பாட்டா யாகிப் பயின்றதை விடுவதா?

வீட்டை விடுவதா? விட்டுப் பின்னொரு
காட்டை யடைந்து களிப்பிற் கலைவதா?

காட்டையும் விட்டுக் கண்முன் இன்பக்
கூட்டையும் விட்டுநான் கொள்ளை போவதா?

சொர்க்கமே இதுவெனக் காட்டிய வீட்டைப்
பொக்கென விட்டுப் பாவியாய்ப் போவதா?

கட்டில் இருப்பதே சுகமெனக் கொண்டபின்
கட்டென் செய்யும்? விடுதலை என்செயும்?

காற்றுக் குதிரையில் வான்வலம் வரலாம்;
ஆற்றிக் கொள்வது வீட்டணைப் பன்றோ?

துடிப்பும் தவிப்பும் அலைப்பும் நெரிப்பும்
நொடிப்பும் சலிப்பும் நோயாய்ப் பற்ற

அனைத்தும் விட்டு விடுதலை யாகி
நினைத்து மகிழ விடுவது வீடே;

அதைநான் விடுவதா? அதையேன் விடுவது?
வதைநான் படவா? வீட்டைநான் விடவா?

விட்டு விடுதலை யாக மறுக்கிறேன்;
விட்டு விடுவ தேனெனக் கேட்கிறேன்.
   -திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
        நங்கநல்லூர் --05-09-07

kaviarangam 38

             கவியரங்கம்---38

            தலைமை---கவிஞர் சிவசூரி

   பூவிதழ் தனில மர்ந்து
      பாடிடும் வண்டாய் நல்ல
   பாவினை ஈந்து நிற்கும்
      பைந்தமிழ் வல்ல சூரி
   நாவெலாம் கவிதை நங்கை
      நாட்டிய மேடை யாகும்;
   பாவினில் இனிப்பை வைக்கும்
      பக்குவம் சூரிக் குண்டு.

   அருமையாய்த் தலைமை தாங்கும்
      அவருடை அழைப்பை யேற்றுத்
   தருகிறேன் கவிதை; எந்தத்
      தனிச்சுவை சிறிது மின்றி
   வருகிற கவிதை யேனும்
      மனமகிழ் வுடனே ஏற்றுத்
   தருகிற உமது வாழ்த்தைத்
      தலையிலே தாங்கிக் கொள்வேன்.

           கவிதை என் காதலி

மெல்லக் கவலைகள் என்னைப் பிழிகையில்
      வந்து தழுவிடுவாள்;--எனை
அள்ளிப் பறந்தே அண்ட கோள்களின்
      அதிசயம் காட்டிடுவாள்;

கையசைத் தேஒரு காவியம் படைத்திடக்
      கருப்பொரு ளீந்திடுவாள்;--அவள்
மெய்யசைத் தேஎன் மேனியி லேஓர்
      மின்னலைப் பாய்ச்சிடுவாள்;

சொல்லினி லடங்காச் சுந்தர புரிக்கெனைச்
      சுருட்டி யிழுத்திடுவாள்;--நான்
வில்லினில் தொடுத்த அம்பென அவள்வழி
      விரைந்து பாய்ந்திடுவேன்;

எத்தனை சுகங்கள் எத்தனை நலங்கள்
      எனக்கவள் ஈந்துநிற்பாள்;-- நான்
அத்தனை யும்கவி ஆக்கும் முயற்சியில்
      அலறித் துடித்துநிற்பேன்;

சொல்லுக் குளேஓர் சூத்திரம் அமைத்துச்
      சுவைகள் கொட்டிநிற்பாள்;--அந்தச்
சொல்லைத் தெரிந்துநான் தொட்டிடு போதினில்
      தோளினில் கூத்திடுவாள்;

எந்த நேரமு மென்றிலை என்னையே
      என்னவோ செய்துநிற்பாள்;--அவள்
வந்து தழுவிடுங் கணத்திலே விண்ணொடு
      மண்ணைப் பிணைத்துநிற்பாள்;

சிற்சில நேரமே பற்பல கூவினும்
      செவிதர மறுத்திடுவாள்;--நான்
வற்புறுத் தியேநீ வாடியிங் கென்றிடில்
      மாயமாய் மறைந்திடுவாள்;

அருவி யெனச்சில நேரமே சொற்களை
      அள்ளிச் சொரிந்திடுவாள்;--நான்
உருகி வேண்டினும் சிலபோ தவளே
      ஓடி ஒளிந்திடுவாள்;

காலை மலரிலும் சோலைக் குளிரிலும்
      கண்ணைச் சுழற்றிநிற்பாள்;--வீழும்
மாலைக் கதிரிலும் மல்லிகை மொட்டிலும்
      வாவென அழைத்துநிற்பாள்;

கவிதை யெனஒரு காதலி வந்ததால்
      கவலை மறந்துநிற்பேன்;--இந்தப்
புவியில் எனக்கொரு பொருளை உணர்த்தியே
      பொழுதெலாம் இணைந்திருப்பாள்;

அய்யோ இவள்வர விலையெனில் மண்ணிலே
      அழிந்துமே போயிருப்பேன்;--வாழ்விற்
பொய்யிலை இவளே புத்துயி ரளித்துப்
      பொழுதெலாங் காத்துநிற்பாள்;

இவளணைப் பெனக்கே இருக்கிற வரையிலும்
      எனக்கொரு துன்பமில்லை;--வாழ்வில்
இவளணைப் பொன்றே என்றன் உயிர்நிலை
      இலையெனில் நானுமில்லை.   

Tuesday, September 24, 2013

kuzhanthai

           குழந்தை

பஞ்சுக் காவியம்; பனிமலர் ஓவியம்;
நெஞ்சுக்குள் மாயம் நிகழ்த்துமொரு சூத்திரம்;

கல்லைக் கனியாக்கும் கண்வீச்சு; பொருளற்ற
சொல்லைச் சுழற்றிநமைச் சொக்கவைக்கும் மாமாயம்;

இதழசைந்தால் காணும் இதயங்கள் கூத்தாடும்;
மதலையின் ஒலிக்கூட்டில் மனமயங்கிச் சுற்றிவரும்;

வஞ்சங்கள்; சூழ்ச்சிகள்; வாழ்க்கையின் மேடுபள்ளம்
கொஞ்சமும் தாக்காமல் கூத்தாடும் சிறுபிஞ்சு;

தாய்மை என்னுமொரு தனியுயர்வைப் பெண்ணுக்குத்
தூய்மை யுடனளிக்கும் தனிமகிழ்ச்சிக் கருவூலம்;

இப்படி எத்தனையோ அடுக்கடுக்காய்ப் பாடினாலும்
எப்படி யும்பாடி முடிக்கவொண்ணாப் பெரும்பொருளாம்;

இதுதானே குழந்தை! சமுதாயப் பெருமண்ணில்
அதுதானே மனிதனாய் அவதாரம் எடுக்கிறது;

மனிதனாய் மாறியபின் கண்ணசைவும் காலசைவும்
இனிக்கிறதா? இங்கேதான் ஏதோ இடிக்கிறதே!

அதேஓர் குழந்தையை அப்படியே வளர்க்காமல்
எதையோ திணித்ததனை என்னவோ ஆக்குகிறோம்;

அந்தக் கதையெதற்கு? அணுஅணுவாய் இன்பத்தை
இந்த உலகத்தில் ஈயுமதைப் போற்றுவோமே!

குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான்; அதுவிங்கே
குழந்தை குழந்தையாக இருக்கும் வரையில்தான்;

குழந்தையைப் பாடுவோம்; குழந்தைக்காய்ப் பாடுவோம்;
குழந்தையுள்ளம் கொடுத்திடுவாய்! என்றிறையை வேண்டுவோம். 

Monday, September 23, 2013

seyaay naan maarenaa

            சேயாய் நான் மாறேனா?

கள்ளமிலாச்  சிரிப்புனக்குக்  கட்டியங்கள்  கூறிவர
உள்ளமெலாங் கொள்ளைகொளும் ஊர்வலமே நடத்துகிறாய்
வெள்ளமெனப் பாய்ந்துநெஞ்சை மூழ்கடித்தே மகிழ்ச்சியினை
அள்ளியிங்கே வழங்குமுன்வாய் அசைவெனநான் ஆகேனா?

கன்னத்தின் குழிக்குளென்றன் கருத்தள்ளிப் புதைத்திட்டே
எண்ணத்தில் போதையேற்றி இதயத்துள் சூடேற்றி
வண்ணத்துப் பூச்சியென வானிலெனைப் பறக்கவிடும்
என்னுறவே! உன்றனுடை இதழ்க்கடையாய் மாறேனா?

பார்வையிலே வலைவீசிப் பார்ப்போரை மீனாக்கிக்
கோர்வையுடன் வீழ்த்துகின்ற கொள்ளையின்பக் கண்ணொளியே!
பார்முழுதும் விண்முழுதும் படைத்தாலும் ஒப்பாகாச்
சீர்திகழும் உன்னிருகண் மணிகளென மாறேனா?

நடந்தாலும் இனிக்கிறது; விழுந்தாலும் இனிக்கிறது;
கிடந்தாலும் பாற்கடல்மேற் கிடப்பவனாய் இனிப்பவளே!
தடுமாறி வீழ்ந்தாலும் இனித்திடவே செய்யுமுன்றன்
தடுமாறுங் காலிலுள்ள தண்டையென மாறேனா?

எத்தனையோ துன்பங்கள் அணியணியாய் வந்தாலும்
அத்தனையுந் தீண்டாமல் அழகழகாய்ச் சிரிப்பவளே!
தத்துமொழி யுதிர்க்குமுன்றன் கடைவாயில் துளிர்க்கின்ற
தித்திக்கும் எச்சிலிலே  ஈயாகி மேயேனா?

தீதுநிறை யுலகத்தில் தீதுநிறை யுடல்தாங்கி
தீதுநிறை சுற்றத்தார் சுற்றிவர வாழும்நான்
தீதுதொடாத் தூயநெஞ்சம் தூசுதொடா உன்னுடலில்
ஏதேனும் ஆகிடவே இறையருள மாட்டானா?




Monday, September 16, 2013

Re: சவகர்லால் கவிதைகள்

                   பொற்கிழிக் கவிதை
    ( திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் 15-06-70-ல்
      நடத்திய நேர்முகக் கவிதைப் போட்டியில்
      பொற்கிழி ( 1008 )ப் பரிசு பெற்ற கவிதை )
     
      பொருள்; 'எந்தை இறைவன் இறைவியிடம்
               இம் மன்பதை பற்றி உரையாடல்'

கண்ணுக்குள் ஒளியானைக் காணும் மாந்தர்
   கருத்துக்குள் ளிருப்பானை, எண்ணும் நல்லோர்
எண்ணத்தில் நிறைவானைக் கற்ற வர்தம்
   இதயத்தில் ஒளிர்வானை, ஏழை மக்கள்
வண்ணப்பொன் கற்பனையின் வடிவே யாகி
   வாழ்வோடு விளையாடும் இறைவன் தன்னை,
வண்ணத்துப் பொற்கிளியா ளுமையா ளோடு
   வானத்துப் பனிமலையில் கண்டு வந்தேன்.

காதலொளிர் மடப்பிடியும் உலகுக் கென்றே
   கருணைபொழி பெருங்களிறும் உயர்ந்த கைலை
மீதமர்ந்தே இவ்வுலக மாந்தர் பற்றி
   மொழியாடத் துவங்கிவிட்டார்; நின்று கேட்டேன்;
ஆதலுக்கும் ஆகிவிட்ட பொருள்கள் இங்கே
   ஆடலுக்கும், ஆடிவிட்ட உயிர்கள் மேலே
போதலுக்குங் காரணராம் முக்கண் ணன்தான்
   போதவிழ்ந்த குழலோடு பேசி நின்றான்.

பேசுகின்ற கணவனுரை அமைவாய்க் கேட்டே
   பேரமைதி கொள்ளுகின்ற பண்பே அந்த
வீசுபுகழ் வானவட்கும் இல்லை கண்டேன்;
   மெய்யறிவன் ஏதேதோ சொல்லிட் டாலும்
வீசுகிறாள் வினாக்கணையை; அவனை மெல்ல
   வினாக்கடலுள் மூழ்கடிக்கப் பார்த்தாள்; அந்த
மாசில்லா விடையோன்தான் விடையைச் சொன்னான்.
   மனங்கொண்ட சிலசெய்தி நானும் சொல்வேன்.

உமையவள் கூற்று;

மன்பதையைப் பார்த்திட்டால் மனங்கொ திக்கும்;
   மனக்கோணல் கண்டிட்டால் உளந்தி கைக்கும்;
துன்பநிறை வறிந்திட்டால் துயர்க விக்கும்;
   துடிக்கின்றோர் எண்ணிட்டால் சிந்தை சாகும்;
என்புநிறை இடுகாட்டில் வாழ்கின் றீரே!
   இவ்வுலகும் என்புநிறை இடுகா டேயாம்;
இன்பத்தைக் கண்டறியா மாந்தர்; நேர்மை
   இம்மியுமே காணாதார் நிறைந்த பூமி;

வான்முட்டும் மாளிகைகள் மெத்த வுண்டு;
   வளர்ந்துள்ள அதனடியில் 'அய்யா சாமி!
நான்சாவேன்' என்றலறும் என்பின் கோவை
   நானிலத்தில் மிகஅதிகம்; இந்தத் தாழ்வை
ஏன்படைத்தீர்? இருப்போரும் எதுவு மில்லா
   ஏழைகளும் ஏனிங்கே படைத்தீர்? மக்கள்
ஏனிங்கே உயர்ந்தோர்கள் தாழ்ந்தோ ரென்ற
   இத்துணைவேற் றுமையோடு வாழச் செய்தீர்?

பறக்கின்ற பறவைக்குக் கூடு; காட்டில்
   பாய்ந்துதிரி விலங்குகட்குப் புதர்கள்; வாயைத்
திறக்கின்ற பாம்புக்குப் புற்று; பண்டந்
   திருடுகின்ற எலிகட்கும் வளைகள்; இங்கே
பிறந்திட்ட எவ்வுயிர்க்கும் இடம ளித்தீர்;
   பெரும்பாவம் இவரென்ன செய்தார்? மண்ணில்
பிறந்தார்கள்; அவரிங்கே தங்கு தற்குப்
   பேருக்கும் இடமில்லை. ஏனோ சொல்வீர்?

அவரென்ன பழிசெய்தார்? உயர்ந்து வாழும்
   இவரென்ன நலஞ்செய்தார்? சொல்லப் போனால்
அவர்கள்தாம் நல்லவர்கள்; பழியைச் செய்ய
   ஆற்றலின்றி அமைந்திட்டார்; செல்வ மிக்க
இவர்கள்தாம் பெருக்குவது செல்வம் மட்டோ?
   இல்லையில்லை பாவமுமே பெருக்கு கின்றார்;
இவருக்கேன் பெருவாழ்க்கை? தவிக்கு மந்த
   ஏழைக்கேன் சீர்கேடு? சொல்வீ ரென்றாள்.

சிவன் கூற்று;

செம்மேனி சிரித்திட்டான்; இளஞ்சி ரிப்பு;
   "சிறுவையம் கண்டுவந்து வினவு கின்ற
அம்மா!நீ அறிந்ததெல்லாம் கேட்டாய்; நானே
   அத்தனைக்கும் மூலவனென் றென்னைக் கேட்டாய்;
சும்மாவோ உண்மைக்கோ நீதான் கேட்ட
   செய்தியெலாம் சொல்லுகிறேன்; கேட்பாய்! ஞாலத்
தம்மையேஉன் சிந்தையிலே தைத்த முள்தான்
   அகிலத்துப் பொருட்பேதம்; இலையா? சொல்வாய்!

பசும்புல்லின் பெரும்பரப்பில் மேயச் செல்லும்
   பசுக்களிலே 'வாய்ப்பிடியில்' சிறந்து நிற்கும்
பசுத்தானே புல்லைமிகக் கொள்ளும்; இன்னும்
   பக்கத்துத் துணையாகக் கொம்பி ரண்டை
விசுக்கென்று வீசிநிற்கும் காளை சேர்ந்தால்
   விளைபுல்லின் பரப்பெல்லாம் அவைகட் கன்றோ;
பசுங்கிளியே! இதுதானிந் நிலத்துச் செய்தி;
   பாங்காக அறிந்திடுவாய்! என்றார் தேவர்.

உலகத்தைத் தான்படைத்தேன்; பலவா யங்கே
   உருக்கொண்ட வேற்றுமையைப் படைக்க வில்லை;
கலகலக்கும் செல்வத்தைப் படைத்தேன்; செல்வங்
   கடிதிற்போய்க் குவியஇடம் படைக்க வில்லை;
பலதிறத்தும் பாயறிவைப் படைத்தேன்; தீமை
   படைப்பதற்கென் றவ்வறிவைப் படைக்க வில்லை;
பலவுயிரும் பலவுலகும் வாழ்ந்தால் தானே
   பரமனுக்கும் வாழ்வுண்டு; தெரியா தாசொல்!

எப்படியோ தீமைபல பெருகிப் போச்சே!
   எடுத்தெறிய இயலாமல் வேரி றங்கித்
தப்புகளே மலிந்தனவே! நானே போட்ட
   தனிப்பயிரைக் களைமறைக்கக் கண்டேன்; அந்தோ!
எப்படித்தான் களைநீக்கிப் பயிர்செய் வோமோ?
   ஏங்குகிறேன்; எனக்குந்தான் வந்த தேக்கம்;
இப்படியே விட்டிட்டால் உலகந் தானே
   எப்படியோ அழிந்துவிடும்; என்ன செய்வோம்?

ஆண்டவன்தான் விளையாடல் செய்தா னென்றே
   அறைவார்கள்; இப்போதோ உலகம் பொய்மைத்
தாண்டவத்து மேடையென ஆகி அங்கே
   தனிநடனம் யார்யாரோ ஆடு கின்றார்;
ஆண்டவன்நான்; இப்போது புவியை இங்கே
   ஆள்பவனோ கொடுங்கலிதான்; இதைய ழிக்கத்
தாண்டவத்தை ஆடிடவா? சொல்வா யென்றான்;
   தளிர்க்கோதை 'பொறுத்திடுவீர் பார்ப்போ' மென்றாள்;

உமையவள் கூற்று:

அப்பரடி நடந்தநிலம்; நம்சம் பந்தர்
   அமுதொழுகப் பயின்றநிலம்; வாச கர்தாம்
மெய்ப்புகழை விதைத்தநிலம்; சுந்த ரர்தாம்
   மெய்யின்பம் விளைத்தநிலம்; அடியா ரெல்லாம்
மெய்யுருகி நின்றநிலம்; இந்நி லத்தே
   மேலாகப் புதர்மண்டி நிறையக் கண்டோம்;
மெய்யான புதர்நீக்கிப் பயிரை நல்ல
   மேன்மையொடு வளர்த்திடுவீர்; அழித்தல் வேண்டாம்;

மாலோடே அயனாரும் உன்றன் மூலம்
   முடிவையுமே காணாமல் தோற்றார்; உண்மை;
மாலோடும் இந்நிலத்து மக்கள் நெஞ்சில்
   மண்டிட்டே கீழோடிப் படர்ந்த வஞ்சம்
காலோடு தலையறிய யாரால் கூடும்?
   கண்டிப்பாய்த் தேவருமே தோற்பார்; தூய
பாலோடு நீர்க்கலப்பைப் போல நெஞ்சில்
   பாழாகும் வஞ்சத்தைக் கலந்து வாழ்வார்;

காலாடித் தனத்திற்கே உதவுங் கால்கள்;
   கையாடித் தவறுசெய்ய உதவுங் கைகள்;
மேலோடித் தீமைசெய்ய விழையும் நெஞ்சம்;
   மிக்கோங்கும் பழிகாண முந்துங் கண்கள்;
நாலோடே ஐந்தாகப் பொய்மை பேச
   நாடோறும் முந்திநிற்கும் நாக்கு; பொய்மை
மேலோடும் செய்தியினைக் கேட்கும் காது;
   மேலவனே! ஐம்புலனுக் கிதுதான் வேலை.

அவரெல்லாம் உம்படைப்பே; கையுங் காலும்
   ஆட்டுவதே உம்மால்தான்; மேலும் மேலும்
அவரெல்லாம் பழிக்கடலுள் மூழ்கா வண்ணம்
   ஆடிடுவீர் புதுநடனம்! அவ்வாட் டத்தே
அவர்கட்குப் புதுப்பாடம் சொல்வீர்! சற்றும்
   அவர்கொள்ள வில்லையெனில் பிறகு பார்ப்போம்;
எவர்க்கென்று செய்தாலும் உங்கள் ஆட்டம்
   எல்லாமே காட்டாதீர்; தாங்க மாட்டார்.
            ( வேறு )
என்றுமை சொன்னதை நின்றுமே அறிந்துநான்
   ஏகினேன் என்னிடம் நோக்கியே;
நின்றதைக் கவியிலே சொல்லிட நெஞ்சினில்
   நினைப்பது முந்திட இங்குநான்
என்றனின் புன்மதி இயக்கிடச் சிறுகவி
   ஏட்டினி லேற்றினேன், ஆயினும்
என்னுளம் எண்ணிய பொருளினை முற்றுமே
   எடுத்துரைத் ததாக நினைவிலை;

புன்கவி யென்னினும் பொருந்திய என்னுளம்
   புகுந்துமே சொற்களாய் வந்ததே
என்கவி யென்றது மென்னுளம் மகிழ்ச்சியை
   ஏற்றிட லெங்குமே இயற்கையே;
என்கவி நெஞ்சினில் இறையுமை உரையதை
   ஏறிய வண்ணமே சொல்லிடப்
புன்கவி செய்தனன்; பொறுத்தருள் இறைவனே!
   போற்றினேன் உன்கழல் நெஞ்சிலே.
 




   




 


Saturday, September 14, 2013

with kannadasan

 [ 1972 ல் ஆ.தெக்கூர் மேனிலைப் பள்ளியில் 
            கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 
              நடந்த கவியரங்கம்.}
                 திறமை
    
தலைப்பிங்கே சரியில்லை என்று சொல்லித்
   தாவிக்கொண் டென்மனைவி அருகில் வந்தாள்;
தலைப்புனக்கும் பிடிக்கலையா? எஞ்சி நின்ற
   தலைப்பிதுதான்; என்னசெய்ய? என்றேன். உங்கள்
தலைவிதியா? யார்யாரோ கழித்துப் போட்ட
   தலைப்பினைஏன் எடுக்கவேண்டும்? என்று சேலைத்
தலைப்பிலுள்ள கிழிசலையே காட்டி நின்றாள்;
   சரிசரியிச் சங்கதியே வேறு; வேறு

கவியரங்கத் தலைப்பெனக்குத் 'திறமை' என்றேன்;
   கடகடெனச் சிரித்திட்டுச் 'சரிதான் இந்தப்
புவியினிலே இல்லாதார்க் கீதல் தானே
   புகழ்மிக்க கொடையாகும்; பொருத்தம்' என்று
செவியினிலே அறைந்தாற்போல் சொன்னாள்; சொன்ன
   சொல்லினிலும் தவறில்லை; திறமை இந்தப்
புவியினிலே எனைத்தவிர மற்ற எல்லாப்
   பொருள்விற்கும் வியாபாரி யிடத்து முண்டு.

கத்திரிக்காய் வாங்கிவரப் போனால் அந்தக்
   கடைக்காரன் என்னிடத்தே அன்பு கொண்டு
கத்திரிக்காய் நான்பொறுக்கித் தருவே னென்று
   கனியாகத் தந்திடுவான்; வீட்டில் சேர்த்தால்
கத்திடுவாள்; நறுக்கிடுவாள்; புழுவாய்க் கொட்டும்;
   'கடையினிலே கத்திரிக்காய் வாங்கக் கூடக்
கற்றிருக்க வில்லையிங்கே திறமை பற்றிக்
   கவிபாடிக் கிழியுமெனப் பாடித் தீர்த்தாள்;

நானென்ன செய்திடுவேன்? திறமை இன்று
   நாட்டினிலே பொதுவுடைமை ஆகிப் போச்சு;
தேனென்ற பேச்சாலே மயக்கி நம்மைத்
   தெளிவாக ஏமாற்றும் திறமை இந்த
மாநிலத்தில் எங்குமுண்டு; நமக்கே அந்த
   மாயத்தில் ஏமாறாத் திறமை வேண்டும்;
மாநிலத்தில் இதுமட்டுந் தானா? எல்லா
   வகையினிலும் திறமையிங்கே வெளிச்சம் போடும்.

அரசியலில் இத்திறமை கொண்டோர் நாட்டை
   ஆளுகின்ற பொறுப்பேற்பார்; நம்மை நோக்கி
வரவிலையே காற்றெனவே ஏங்கி நிற்போர்
   வாழ்க்கையெலாம் ஏக்கத்தில் கழிப்பார்; ஐந்து
வருடத்திற் கொருமுறையோர் புயல டிக்கும்;
   வீதிதொறும் பெருமுழக்காய் இடியி டிக்கும்;
சிறுதூற்றல் சில்லரையாய்க் குடிசைப் பக்கம்
   சிந்திவரும்; தென்றலெனப் பேச்சு வீசும்;
            ( இதெல்லாம் எதற்காக )
வாக்குண்டாம்; மணமுண்டாம்; பெரிய வர்கள்
   வரவுண்டாம்; உரையுண்டாம்; குடிசைக் கெல்லாம்
வாக்கில்லை யெனிலிங்கோ மணமு மில்லை;
   வரவுமில்லை; பைத்தியமா? பயனே யின்றி
வாக்கில்லா மக்களுடன் பேசப்; பின்னர்
   வருகின்ற தேர்தலுமே முடிந்து போனால்
வாக்களித்த பெரியோர்கள் இறைவ னாவார்;
   வாக்காளர் தவங்கிடக்கும் அடியா ராவார்.

             உயர்ந்த திறமை

நம்முன்னோர் திறமையிலே குறைந்தா போனார்?
   நானிலத்தில் நாகரிகம் பரவா முன்பே
நம்முன்னோர் கலைகளிலே நிமிர்ந்து நின்றார்;
   நாலுவகைத் திறமையிலும் உயர்ந்து நின்றார்;
நம்முன்னோர் காலம்பொற் காலம்; எல்லா
   நுண்கலையும் ஈடில்லா தொளிர்ந்த காலம்;
அம்முன்னோர் பெருமையினை அளந்து காட்டி
   அளப்பரிய ஆண்டுகளாய்க் கலைகள் நிற்கும்.

வானெட்டிப் பார்க்கின்ற கோபு ரத்தின்
   வகையெட்டிப் பார்த்திட்டால் வியப்பு மீறும்;
ஏனெட்டி உலகாளும் வாய்ப்பை இந்த
   இனமெட்டிப் பெறவில்லை? என்ற கேள்வி
தானெட்டி மனதிலெழும்; இலக்கி யத்தின்
   திறமெட்டிச் சுவைத்தாலும் அதுவே தோன்றும்;
ஏனெட்டி உயரவில்லை? காலத் தோடே
   இனமெட்டி வளரவில்லை; அவ்வ ளவ்வே.

திறமைகளோ பலவிதமாம்; தீயைப் போலச்
   செய்வதற்கும் அழிப்பதற்கும் துணையாய் நிற்கும்
திறமையினை நாம்வளர்க்க வேண்டும்; அந்தத்
   திறமையினால் பிறரழித்துத் தானே வாழும்
திறமிங்கே தோன்றாமல் இருக்க வேண்டும்;
   தினந்தோறும் உரையாடும் போதும் பேசி
உறவாடுங் காலத்தும் நம்மைக் காக்கும்
   ஒப்பரிய திறமையுரு வாக வேண்டும்.



Thursday, September 5, 2013

இறைவனுக்குகந்தது --தமிழில் வழிபாடு

                 இறைவனுக்குகந்தது
              --தமிழில் வழிபாடு--

மண்ணுலக ஆசை மயக்கத்தில் தடுமாறி
கண்கெட்ட பின்னேயென் கடைவாசல் வருகின்றீர்;

செய்யும் பாவத்தைத் தொகைதொகையாய்ச் செய்துவிட்டே
உய்யும் வழிநாடி  ஓடியென்முன்  வருகின்றீர்;

நடமாடும் மனிதர்தம் நரிச்செயலில் மிகநொந்து
படமாடும் பரமனென்முன் பணிவாக நிற்கின்றீர்;

விதைத்தவை அறுக்குங்கால் வேதனை தாங்காமல்
வதைநீக்க வேண்டி வாய்திறந்து புலம்புகின்றீர்;

வாருங்கள்; புலம்புங்கள்; வருந்தி உருகுங்கள்;
பாருங்கள் பசிதீரப்  பரமன் திருமுகத்தை;

நீங்கள் வருவதுவும் நின்றே உருகுவதும்
தேங்காய் பழங்கொண்டு வழிபாடு செய்வதுவும்

கண்டு மகிழ்கின்றேன்; கண்ணிலருள் கூட்டிக்
கொண்டணைத்து மகிழ்வித்துக் குளிரக் காத்துள்ளேன்;

உள்ளங் கரைந்தோடி ஒப்பரிய என்பாதங்
கொள்ள வேண்டுமெனில் கனிவுவர வேண்டாமா?

உங்கள் நினைப்பும் உளங்கனிந்த வேண்டுதலும்
தங்கு தடையின்றித் தாவிவர வேண்டாமா?

நினைப்பை வெளிக்காட்ட மொழிதடை யாயிருந்தால்
நினைப்புத்தா னெப்போதென் நேர்முகத்தை எட்டுவது?

தமிழ்நாட்டில் தமிழ்பேசும் நீங்கள் வழிபாட்டைத்
தமிழிலே செய்தால்தான் சிந்தை வெளியாகும்;

தூய திருமேனி; தொண்டிற் கனிந்தவுடல்;
வாய்மை கொப்புளிக்கும் வண்மைத் திருப்பாட்டு;

உழவாரப் படையேந்தி ஒப்பரிய தொண்டுகளை
அழகாகச் செய்தவராம் அப்பர் மொழியென்ன?

நெருப்பறையில் வைத்தே வேகவைத்த காலத்தும்
விருப்புடனே தமிழ்பாடி வெப்பத்தை வென்றாரே!

நீற்றறையைத் தென்றலென நிகழ்த்திக் காட்டியதும்
மாற்றரிய கல்புணையாய் மாகடலைக் கடந்ததுவும்

அண்டிவந்த யானை அப்பரை மிதிக்காமல்
மண்டியிட்டு வணங்கி மறுவழியிற் போனதுவும்

நஞ்சும் அமுதாகி நல்லுயிர் காத்ததுவும்
செஞ்சொல்லா லான தமிழ்ப்பாட்டின் திறந்தானே!

நொந்தஉள்ளம் கடைத்தேற நெஞ்சார வணங்கும்நீர்
செந்தமிழில் வழிபாடு செய்தே உய்யுங்கள்;

என்தோழன் ஆரூரன் எப்போதும் என்னை
அன்போடு அழைத்தே அதிகவேலை வாங்கினானே!

தெருவிலே தூதாகச் சென்றேனே! அவனுள்ளம்
வருந்தாமல் துணைசேர்த்து வாழ்வின்பங் கூட்டினேனே!

எல்லாம் எதற்காக?  இனிமையாய் அவனிடத்தில்
உள்ள தமிழ்கேட்கும் ஒப்பரிய  ஆர்வந்தான்;

அர்ச்சனை பாட்டே!  ஆதலால் என்னைச்
சொற்றமிழ் பாடுகெனச் சுந்தரர்க்குச் சொன்னேனே!

அப்பாட்டைக் கேட்டே அகமகிழ்ந்து திளைத்தேனே!
செப்புங்கள் அப்பாட்டை என்செவி துறக்கலாமா?

தேன்மழையா யென்செவியில் தினம்பொழிந்த பாடலுக்காய்
நான்ஏங்கி நிற்கின்றேன்; நல்லதமிழ் பாடுங்கள்;

இழிபாட்டைப் போக்கவுங்கள் இதயந் திறந்திடுங்கள்;
வழிபாட்டைச் செந்தமிழில் மனமகிழச் செய்திடுங்கள்;

ஆற்றலிலா வொன்றா? அழகில் லாவொன்றா?
போற்றாம லேனிந்தப் பைந்தமிழைப் புறக்கணிப்பீர்?

மறைக்கதவம் தமிழ்ப்பாட்டால் திறந்தேனே! என்செவியாம்
இருகதவம்  தமிழுக்காய் நான்திறக்க மாட்டேனா?

அழகான தமிழ்ப்பாட்டால் வழிபாடு செய்யுங்கள்;
குழைவோடு வணங்குங்கள்; கும்பிட்டே உய்யுங்கள்;

நானப்பன்; நீர்மக்கள்; நம்மிடையே என்றென்றும்
தேனான தமிழ்மொழியே வழிபாட்டில் திகழட்டும்.

எனக்கும் இனிக்கும்; உமக்கும் புரியும்;
மனக்கவலை சருகாக மந்திரத் தமிழெரிக்கும்.

திருமுறைகள் செய்யாத விந்தையினை இவ்வுலகில்
ஒருமுறையும் பிறமொழிதான் செய்யாது; உண்மையிது.

கூடுங்கள் என்முன்னே; கூடித் தமிழ்ப்பாடல்
பாடுங்கள் என்முன்னே; பணிந்து வேண்டுங்கள்;

கூப்புங்கள் கையிரண்டை; கொட்டுங்கள் தமிழ்ப்பாட்டை;
கேட்பதற்  கேங்கும்நான் கேட்டு மகிழ்கின்றேன்.
                 திருப்புத்தூர்--31-05-82




Wednesday, September 4, 2013

இவைகள் பேசினால் --அபிஷேக எண்ணெய்

          இவைகள் பேசினால்---
      அபிஷேக எண்ணெய்  (முருகன்)

தொட்டாலே கைமணக்கும் தூய மேனி
   தொடஆசைப் பட்டதுண்டு; நெடுநா ளாகக்
கட்டான ஆறுமுகன் உடலைத் தீண்டும்
   காற்றாக மாறஆசைப் பட்ட துண்டு;
எட்டாத ஆசையென விட்டு விட்டேன்;
   இன்றைக்கிங் கவ்வாசை தீரப் பெற்றேன்;
இட்டமெலாந் தீருமட்டும் தழுவி வீழும்
   எண்ணெயென என்னையேநீர் மாற்றி விட்டீர்.

வள்ளிமகள் காதலுக்காய் மரமாய் நின்றான்;
   மான்தேடும் வேட்டுவனாய் அலைந்து நொந்தான்;
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இளமை மூடி
   ஒருவிருத்த னாய்வடிவம் பூண்டு சென்றான்;
வள்ளிமகள் தழுவலிலே குழைந்த மேனி
   வழிகின்ற எண்ணெயென்றன் தழுவல் தன்னில்
உள்ளபடி மகிழ்ந்திடுமா? தெரிய வில்லை;
   ஒப்பரிய வகையினிலே நான்ம கிழ்ந்தேன்.

அழுக்கடையாத் திருமேனி தன்னைக் கூட
   அன்றாடங் குளிப்பாட்டுந் தத்து வத்தை
அழுக்கடையும் சிறுமேனி மனிதர் இங்கே
   அறிந்ததாகத் தெரியவில்லை; அறிந்தார் தாமும்
அழுக்கழிக்கும் விளம்பரத்துப் பொருளால் மேனி
   அலசிவிட்டு வருவாரே யல்லால் நெஞ்சின்
அழுக்கினையே போக்கிவிட்டுக் கோயில் நாடும்
   அறிவுணர்ச்சி பெற்றவராய்த் தோன்ற வில்லை.

பளபளக்கும் பட்டாடை மறைப்புக் குள்தான்
   பஞ்சமகா பாதகங்கள் குடியி ருக்கும்;
சலசலக்கும் சிறுபேச்சின் மத்தி யில்தான்
   சண்டாளத் திட்டங்கள் உருவெ டுக்கும்;
கலகலப்பாய்ச் சிரிக்கின்ற சிரிப்புக் குள்தான்
   கட்டாரி போல்வஞ்சம் மறைந்தி ருக்கும்;
நிலைகலங்கி நெஞ்சத்தை மேய விட்டு
   நேயன்முன் நிற்பதனால் பயனும் உண்டா?

வள்ளியுடன் இருந்தாலும் அவனுக் கென்ன
   வஞ்சகங்கள் புரியாதா? இன்பங் கொஞ்சும்
உள்ளமுடன் இருந்தாலும் அவனுக் கென்ன
   உள்ளங்கள் தெரியாதா? வேலின் கூர்மை
உள்ளபடி அறிந்திருந்தும் வேலன் முன்னே
   உள்ளொன்று புறமொன்றாய் நிற்கின் றாரே
வள்ளியுட னிருப்பதனால் தீமை தன்னை
   மன்னிப்பான் வள்ளலவன் எனும்நி னைப்பா?

சந்தையிலே தரங்கெட்டு நாறிப் போன
   சரக்காகி மனம்நொந்து போன நான்தான்
எந்தைபிரான் இளையமகன் மேனி தன்னில்
   இறங்கிவிளை யாடுகின்ற பொருளாய் வந்து
இந்தவொரு பிறப்பெடுத்த பயனைப் பெற்றேன்;
   எண்ணெய்நான் அவன்குளிக்கக் குளிர்ச்சி பெற்றேன்;
கந்தனவன் கேசாதி பாதம் தொட்டுக்
   கடைத்தேறி விட்டேன்நான்; மனம்நி றைந்தேன்.
                 தேவகோட்டை--14-11-85
   

Monday, September 2, 2013

I இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

                    இவைகள் பேசினால்--
        சிங்கவாகனம் பராசக்தியிடம்

தாயே! பராசக்தி! தனிக்கருணை மாமழையே!
வாய்திறந் தழுவோரை வாரி யணைப்பவளே!

பெற்றவளும் நீதானே! பிள்ளைகள்யாம் பெருந்துன்பம்
உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே!

யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய
சீராட்சித் திறந்தானே செகமெல்லாம் காக்கிறது;

உன்னுடைய கண்மேகம் அருள்பொழிய வில்லையெனில்
மண்ணில்  உயிரெல்லாம்  வாடிக்  கருகாதா?

மண்ணைத் தாங்குகின்ற மாகாளி! பராசக்தி!
உன்னைத் தாங்குவதால் உயர்வுபெற்ற சிங்கம்நான்;

வீரத் திருக்கோலம் தாயேநீ எடுக்குங்கால்
சீரோ டுனைத்தாங்கிச் சிறப்போடு திகழ்பவன்நான்;

பாவத்தைச் சுமக்கின்ற பஞ்சைகளின் மத்தியிலே
தேவியைச் சுமப்பதனால் செம்மாந்து திரிபவன்நான்;

குள்ளநரி ஓநாய்கள் கொல்லும் புலிக்கூட்டம்
கள்ளமிலா மானினங்கள் எல்லாமென் காட்டிலுண்டு;

காட்டுக்குள் பேரரசைக் கட்டுக்குள் ஆண்டவன்நான்;
நாட்டுக்குள் உனைத்தாங்கி நாற்றிசையும் சுற்றுகிறேன்;

புதரை வீடாக்கி விலங்கினந்தான் வாழ்கிறது;
புதராக்கி வீட்டை மனிதஇனம் சாகிறது;

அன்றாடம் வருகின்ற அடியவர் செயலெல்லாம்
உன்கீழே இருக்கும்நான் ஒழிவின்றிக் காண்கின்றேன்;

சிங்கம்நான் என்நோக்கில் திசையெல்லாம் பார்க்கின்றேன்;
அசிங்கங்கள் தாமே அகமெல்லாம் தெரிகிறது;

நரிகண்டேன்; புலிகண்டேன்; நாய்கண்டேன்; உன்முன்னே
வருகின்ற கூட்டத்தில் மனிதரைத்தான் காணவில்லை;

தனக்கொருகண் போனாலும் சரிதான்; அடுத்தவன்
தனக்கிருகண் போகட்டும் என்பவர்தாம் ஏராளம்;

குப்பை நெஞ்சங்கள்; கோணல் நினைப்புகள்;
அப்பனுக்கும் அம்மைக்கும் அபிஷேகம் குறைவில்லை;

உள்ளத்தில் வஞ்சம்; உதட்டசைவில் தேவியின்பேர்;
கள்ளத் தொழுகையிலே சக்தியா மயங்கிடுவாய்?

ஏமாற்ற நினைத்தே ஏமாறி நெஞ்சத்தைத்
தாமாற்ற நினைக்காமல் தடுமாற்றம் கொள்கின்றார்;

சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்
அங்கங்க ளிருப்பதனால் அமைதியுட னிருக்கின்றேன்;

தப்புத் தாளம் சங்கீத மாகிறது;
தப்பாத தாளம் எங்கேயோ புதைகிறது;

தனியாக நேர்மை ஆவர்த்தனம் புரிகிறது;
இனிமை யுடன்கேட்க ஆளின்றிப் போகிறது;

நேர்மை வழிசென்ற பயணம் முறிகிறது;
நேர்மை யற்றவழிப் பயணம் தொடர்கிறது;

வஞ்சத்தை விதைக்கின்றார்; வளமைபயி ராகிறது;
நெஞ்சத்தை விற்கின்றார்; நல்லவிலை போகிறது;

வஞ்சத்தைப் பயிராக்கி வன்கொடுமை விளைத்தவர்கள்
மிஞ்சியதைக் காசாக்கி உண்டியலில் கொட்டுகின்றார்;

கொட்டி உண்டியலில் பணத்தைக் குவித்துவிட்டாற்
பட்டுப்போம் பாவமெனப் பாவம் நினைக்கின்றார்;

தள்ளும் படியளவே அவர்செய்த பாவங்கள்
தள்ளுபடி யாகுமென நம்பித் தள்ளுகின்றார்;

சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்
அங்கங்க ளிருப்பதனால் அமைதியா யிருக்கின்றேன்.
               --  --
                     சிவகாசி--16--07--82