Monday, September 16, 2013

Re: சவகர்லால் கவிதைகள்

                   பொற்கிழிக் கவிதை
    ( திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் 15-06-70-ல்
      நடத்திய நேர்முகக் கவிதைப் போட்டியில்
      பொற்கிழி ( 1008 )ப் பரிசு பெற்ற கவிதை )
     
      பொருள்; 'எந்தை இறைவன் இறைவியிடம்
               இம் மன்பதை பற்றி உரையாடல்'

கண்ணுக்குள் ஒளியானைக் காணும் மாந்தர்
   கருத்துக்குள் ளிருப்பானை, எண்ணும் நல்லோர்
எண்ணத்தில் நிறைவானைக் கற்ற வர்தம்
   இதயத்தில் ஒளிர்வானை, ஏழை மக்கள்
வண்ணப்பொன் கற்பனையின் வடிவே யாகி
   வாழ்வோடு விளையாடும் இறைவன் தன்னை,
வண்ணத்துப் பொற்கிளியா ளுமையா ளோடு
   வானத்துப் பனிமலையில் கண்டு வந்தேன்.

காதலொளிர் மடப்பிடியும் உலகுக் கென்றே
   கருணைபொழி பெருங்களிறும் உயர்ந்த கைலை
மீதமர்ந்தே இவ்வுலக மாந்தர் பற்றி
   மொழியாடத் துவங்கிவிட்டார்; நின்று கேட்டேன்;
ஆதலுக்கும் ஆகிவிட்ட பொருள்கள் இங்கே
   ஆடலுக்கும், ஆடிவிட்ட உயிர்கள் மேலே
போதலுக்குங் காரணராம் முக்கண் ணன்தான்
   போதவிழ்ந்த குழலோடு பேசி நின்றான்.

பேசுகின்ற கணவனுரை அமைவாய்க் கேட்டே
   பேரமைதி கொள்ளுகின்ற பண்பே அந்த
வீசுபுகழ் வானவட்கும் இல்லை கண்டேன்;
   மெய்யறிவன் ஏதேதோ சொல்லிட் டாலும்
வீசுகிறாள் வினாக்கணையை; அவனை மெல்ல
   வினாக்கடலுள் மூழ்கடிக்கப் பார்த்தாள்; அந்த
மாசில்லா விடையோன்தான் விடையைச் சொன்னான்.
   மனங்கொண்ட சிலசெய்தி நானும் சொல்வேன்.

உமையவள் கூற்று;

மன்பதையைப் பார்த்திட்டால் மனங்கொ திக்கும்;
   மனக்கோணல் கண்டிட்டால் உளந்தி கைக்கும்;
துன்பநிறை வறிந்திட்டால் துயர்க விக்கும்;
   துடிக்கின்றோர் எண்ணிட்டால் சிந்தை சாகும்;
என்புநிறை இடுகாட்டில் வாழ்கின் றீரே!
   இவ்வுலகும் என்புநிறை இடுகா டேயாம்;
இன்பத்தைக் கண்டறியா மாந்தர்; நேர்மை
   இம்மியுமே காணாதார் நிறைந்த பூமி;

வான்முட்டும் மாளிகைகள் மெத்த வுண்டு;
   வளர்ந்துள்ள அதனடியில் 'அய்யா சாமி!
நான்சாவேன்' என்றலறும் என்பின் கோவை
   நானிலத்தில் மிகஅதிகம்; இந்தத் தாழ்வை
ஏன்படைத்தீர்? இருப்போரும் எதுவு மில்லா
   ஏழைகளும் ஏனிங்கே படைத்தீர்? மக்கள்
ஏனிங்கே உயர்ந்தோர்கள் தாழ்ந்தோ ரென்ற
   இத்துணைவேற் றுமையோடு வாழச் செய்தீர்?

பறக்கின்ற பறவைக்குக் கூடு; காட்டில்
   பாய்ந்துதிரி விலங்குகட்குப் புதர்கள்; வாயைத்
திறக்கின்ற பாம்புக்குப் புற்று; பண்டந்
   திருடுகின்ற எலிகட்கும் வளைகள்; இங்கே
பிறந்திட்ட எவ்வுயிர்க்கும் இடம ளித்தீர்;
   பெரும்பாவம் இவரென்ன செய்தார்? மண்ணில்
பிறந்தார்கள்; அவரிங்கே தங்கு தற்குப்
   பேருக்கும் இடமில்லை. ஏனோ சொல்வீர்?

அவரென்ன பழிசெய்தார்? உயர்ந்து வாழும்
   இவரென்ன நலஞ்செய்தார்? சொல்லப் போனால்
அவர்கள்தாம் நல்லவர்கள்; பழியைச் செய்ய
   ஆற்றலின்றி அமைந்திட்டார்; செல்வ மிக்க
இவர்கள்தாம் பெருக்குவது செல்வம் மட்டோ?
   இல்லையில்லை பாவமுமே பெருக்கு கின்றார்;
இவருக்கேன் பெருவாழ்க்கை? தவிக்கு மந்த
   ஏழைக்கேன் சீர்கேடு? சொல்வீ ரென்றாள்.

சிவன் கூற்று;

செம்மேனி சிரித்திட்டான்; இளஞ்சி ரிப்பு;
   "சிறுவையம் கண்டுவந்து வினவு கின்ற
அம்மா!நீ அறிந்ததெல்லாம் கேட்டாய்; நானே
   அத்தனைக்கும் மூலவனென் றென்னைக் கேட்டாய்;
சும்மாவோ உண்மைக்கோ நீதான் கேட்ட
   செய்தியெலாம் சொல்லுகிறேன்; கேட்பாய்! ஞாலத்
தம்மையேஉன் சிந்தையிலே தைத்த முள்தான்
   அகிலத்துப் பொருட்பேதம்; இலையா? சொல்வாய்!

பசும்புல்லின் பெரும்பரப்பில் மேயச் செல்லும்
   பசுக்களிலே 'வாய்ப்பிடியில்' சிறந்து நிற்கும்
பசுத்தானே புல்லைமிகக் கொள்ளும்; இன்னும்
   பக்கத்துத் துணையாகக் கொம்பி ரண்டை
விசுக்கென்று வீசிநிற்கும் காளை சேர்ந்தால்
   விளைபுல்லின் பரப்பெல்லாம் அவைகட் கன்றோ;
பசுங்கிளியே! இதுதானிந் நிலத்துச் செய்தி;
   பாங்காக அறிந்திடுவாய்! என்றார் தேவர்.

உலகத்தைத் தான்படைத்தேன்; பலவா யங்கே
   உருக்கொண்ட வேற்றுமையைப் படைக்க வில்லை;
கலகலக்கும் செல்வத்தைப் படைத்தேன்; செல்வங்
   கடிதிற்போய்க் குவியஇடம் படைக்க வில்லை;
பலதிறத்தும் பாயறிவைப் படைத்தேன்; தீமை
   படைப்பதற்கென் றவ்வறிவைப் படைக்க வில்லை;
பலவுயிரும் பலவுலகும் வாழ்ந்தால் தானே
   பரமனுக்கும் வாழ்வுண்டு; தெரியா தாசொல்!

எப்படியோ தீமைபல பெருகிப் போச்சே!
   எடுத்தெறிய இயலாமல் வேரி றங்கித்
தப்புகளே மலிந்தனவே! நானே போட்ட
   தனிப்பயிரைக் களைமறைக்கக் கண்டேன்; அந்தோ!
எப்படித்தான் களைநீக்கிப் பயிர்செய் வோமோ?
   ஏங்குகிறேன்; எனக்குந்தான் வந்த தேக்கம்;
இப்படியே விட்டிட்டால் உலகந் தானே
   எப்படியோ அழிந்துவிடும்; என்ன செய்வோம்?

ஆண்டவன்தான் விளையாடல் செய்தா னென்றே
   அறைவார்கள்; இப்போதோ உலகம் பொய்மைத்
தாண்டவத்து மேடையென ஆகி அங்கே
   தனிநடனம் யார்யாரோ ஆடு கின்றார்;
ஆண்டவன்நான்; இப்போது புவியை இங்கே
   ஆள்பவனோ கொடுங்கலிதான்; இதைய ழிக்கத்
தாண்டவத்தை ஆடிடவா? சொல்வா யென்றான்;
   தளிர்க்கோதை 'பொறுத்திடுவீர் பார்ப்போ' மென்றாள்;

உமையவள் கூற்று:

அப்பரடி நடந்தநிலம்; நம்சம் பந்தர்
   அமுதொழுகப் பயின்றநிலம்; வாச கர்தாம்
மெய்ப்புகழை விதைத்தநிலம்; சுந்த ரர்தாம்
   மெய்யின்பம் விளைத்தநிலம்; அடியா ரெல்லாம்
மெய்யுருகி நின்றநிலம்; இந்நி லத்தே
   மேலாகப் புதர்மண்டி நிறையக் கண்டோம்;
மெய்யான புதர்நீக்கிப் பயிரை நல்ல
   மேன்மையொடு வளர்த்திடுவீர்; அழித்தல் வேண்டாம்;

மாலோடே அயனாரும் உன்றன் மூலம்
   முடிவையுமே காணாமல் தோற்றார்; உண்மை;
மாலோடும் இந்நிலத்து மக்கள் நெஞ்சில்
   மண்டிட்டே கீழோடிப் படர்ந்த வஞ்சம்
காலோடு தலையறிய யாரால் கூடும்?
   கண்டிப்பாய்த் தேவருமே தோற்பார்; தூய
பாலோடு நீர்க்கலப்பைப் போல நெஞ்சில்
   பாழாகும் வஞ்சத்தைக் கலந்து வாழ்வார்;

காலாடித் தனத்திற்கே உதவுங் கால்கள்;
   கையாடித் தவறுசெய்ய உதவுங் கைகள்;
மேலோடித் தீமைசெய்ய விழையும் நெஞ்சம்;
   மிக்கோங்கும் பழிகாண முந்துங் கண்கள்;
நாலோடே ஐந்தாகப் பொய்மை பேச
   நாடோறும் முந்திநிற்கும் நாக்கு; பொய்மை
மேலோடும் செய்தியினைக் கேட்கும் காது;
   மேலவனே! ஐம்புலனுக் கிதுதான் வேலை.

அவரெல்லாம் உம்படைப்பே; கையுங் காலும்
   ஆட்டுவதே உம்மால்தான்; மேலும் மேலும்
அவரெல்லாம் பழிக்கடலுள் மூழ்கா வண்ணம்
   ஆடிடுவீர் புதுநடனம்! அவ்வாட் டத்தே
அவர்கட்குப் புதுப்பாடம் சொல்வீர்! சற்றும்
   அவர்கொள்ள வில்லையெனில் பிறகு பார்ப்போம்;
எவர்க்கென்று செய்தாலும் உங்கள் ஆட்டம்
   எல்லாமே காட்டாதீர்; தாங்க மாட்டார்.
            ( வேறு )
என்றுமை சொன்னதை நின்றுமே அறிந்துநான்
   ஏகினேன் என்னிடம் நோக்கியே;
நின்றதைக் கவியிலே சொல்லிட நெஞ்சினில்
   நினைப்பது முந்திட இங்குநான்
என்றனின் புன்மதி இயக்கிடச் சிறுகவி
   ஏட்டினி லேற்றினேன், ஆயினும்
என்னுளம் எண்ணிய பொருளினை முற்றுமே
   எடுத்துரைத் ததாக நினைவிலை;

புன்கவி யென்னினும் பொருந்திய என்னுளம்
   புகுந்துமே சொற்களாய் வந்ததே
என்கவி யென்றது மென்னுளம் மகிழ்ச்சியை
   ஏற்றிட லெங்குமே இயற்கையே;
என்கவி நெஞ்சினில் இறையுமை உரையதை
   ஏறிய வண்ணமே சொல்லிடப்
புன்கவி செய்தனன்; பொறுத்தருள் இறைவனே!
   போற்றினேன் உன்கழல் நெஞ்சிலே.
 




   




 


No comments:

Post a Comment