Monday, September 23, 2013

seyaay naan maarenaa

            சேயாய் நான் மாறேனா?

கள்ளமிலாச்  சிரிப்புனக்குக்  கட்டியங்கள்  கூறிவர
உள்ளமெலாங் கொள்ளைகொளும் ஊர்வலமே நடத்துகிறாய்
வெள்ளமெனப் பாய்ந்துநெஞ்சை மூழ்கடித்தே மகிழ்ச்சியினை
அள்ளியிங்கே வழங்குமுன்வாய் அசைவெனநான் ஆகேனா?

கன்னத்தின் குழிக்குளென்றன் கருத்தள்ளிப் புதைத்திட்டே
எண்ணத்தில் போதையேற்றி இதயத்துள் சூடேற்றி
வண்ணத்துப் பூச்சியென வானிலெனைப் பறக்கவிடும்
என்னுறவே! உன்றனுடை இதழ்க்கடையாய் மாறேனா?

பார்வையிலே வலைவீசிப் பார்ப்போரை மீனாக்கிக்
கோர்வையுடன் வீழ்த்துகின்ற கொள்ளையின்பக் கண்ணொளியே!
பார்முழுதும் விண்முழுதும் படைத்தாலும் ஒப்பாகாச்
சீர்திகழும் உன்னிருகண் மணிகளென மாறேனா?

நடந்தாலும் இனிக்கிறது; விழுந்தாலும் இனிக்கிறது;
கிடந்தாலும் பாற்கடல்மேற் கிடப்பவனாய் இனிப்பவளே!
தடுமாறி வீழ்ந்தாலும் இனித்திடவே செய்யுமுன்றன்
தடுமாறுங் காலிலுள்ள தண்டையென மாறேனா?

எத்தனையோ துன்பங்கள் அணியணியாய் வந்தாலும்
அத்தனையுந் தீண்டாமல் அழகழகாய்ச் சிரிப்பவளே!
தத்துமொழி யுதிர்க்குமுன்றன் கடைவாயில் துளிர்க்கின்ற
தித்திக்கும் எச்சிலிலே  ஈயாகி மேயேனா?

தீதுநிறை யுலகத்தில் தீதுநிறை யுடல்தாங்கி
தீதுநிறை சுற்றத்தார் சுற்றிவர வாழும்நான்
தீதுதொடாத் தூயநெஞ்சம் தூசுதொடா உன்னுடலில்
ஏதேனும் ஆகிடவே இறையருள மாட்டானா?




No comments:

Post a Comment