Sunday, September 29, 2013

kaviarangam 38

             கவியரங்கம்---38

            தலைமை---கவிஞர் சிவசூரி

   பூவிதழ் தனில மர்ந்து
      பாடிடும் வண்டாய் நல்ல
   பாவினை ஈந்து நிற்கும்
      பைந்தமிழ் வல்ல சூரி
   நாவெலாம் கவிதை நங்கை
      நாட்டிய மேடை யாகும்;
   பாவினில் இனிப்பை வைக்கும்
      பக்குவம் சூரிக் குண்டு.

   அருமையாய்த் தலைமை தாங்கும்
      அவருடை அழைப்பை யேற்றுத்
   தருகிறேன் கவிதை; எந்தத்
      தனிச்சுவை சிறிது மின்றி
   வருகிற கவிதை யேனும்
      மனமகிழ் வுடனே ஏற்றுத்
   தருகிற உமது வாழ்த்தைத்
      தலையிலே தாங்கிக் கொள்வேன்.

           கவிதை என் காதலி

மெல்லக் கவலைகள் என்னைப் பிழிகையில்
      வந்து தழுவிடுவாள்;--எனை
அள்ளிப் பறந்தே அண்ட கோள்களின்
      அதிசயம் காட்டிடுவாள்;

கையசைத் தேஒரு காவியம் படைத்திடக்
      கருப்பொரு ளீந்திடுவாள்;--அவள்
மெய்யசைத் தேஎன் மேனியி லேஓர்
      மின்னலைப் பாய்ச்சிடுவாள்;

சொல்லினி லடங்காச் சுந்தர புரிக்கெனைச்
      சுருட்டி யிழுத்திடுவாள்;--நான்
வில்லினில் தொடுத்த அம்பென அவள்வழி
      விரைந்து பாய்ந்திடுவேன்;

எத்தனை சுகங்கள் எத்தனை நலங்கள்
      எனக்கவள் ஈந்துநிற்பாள்;-- நான்
அத்தனை யும்கவி ஆக்கும் முயற்சியில்
      அலறித் துடித்துநிற்பேன்;

சொல்லுக் குளேஓர் சூத்திரம் அமைத்துச்
      சுவைகள் கொட்டிநிற்பாள்;--அந்தச்
சொல்லைத் தெரிந்துநான் தொட்டிடு போதினில்
      தோளினில் கூத்திடுவாள்;

எந்த நேரமு மென்றிலை என்னையே
      என்னவோ செய்துநிற்பாள்;--அவள்
வந்து தழுவிடுங் கணத்திலே விண்ணொடு
      மண்ணைப் பிணைத்துநிற்பாள்;

சிற்சில நேரமே பற்பல கூவினும்
      செவிதர மறுத்திடுவாள்;--நான்
வற்புறுத் தியேநீ வாடியிங் கென்றிடில்
      மாயமாய் மறைந்திடுவாள்;

அருவி யெனச்சில நேரமே சொற்களை
      அள்ளிச் சொரிந்திடுவாள்;--நான்
உருகி வேண்டினும் சிலபோ தவளே
      ஓடி ஒளிந்திடுவாள்;

காலை மலரிலும் சோலைக் குளிரிலும்
      கண்ணைச் சுழற்றிநிற்பாள்;--வீழும்
மாலைக் கதிரிலும் மல்லிகை மொட்டிலும்
      வாவென அழைத்துநிற்பாள்;

கவிதை யெனஒரு காதலி வந்ததால்
      கவலை மறந்துநிற்பேன்;--இந்தப்
புவியில் எனக்கொரு பொருளை உணர்த்தியே
      பொழுதெலாம் இணைந்திருப்பாள்;

அய்யோ இவள்வர விலையெனில் மண்ணிலே
      அழிந்துமே போயிருப்பேன்;--வாழ்விற்
பொய்யிலை இவளே புத்துயி ரளித்துப்
      பொழுதெலாங் காத்துநிற்பாள்;

இவளணைப் பெனக்கே இருக்கிற வரையிலும்
      எனக்கொரு துன்பமில்லை;--வாழ்வில்
இவளணைப் பொன்றே என்றன் உயிர்நிலை
      இலையெனில் நானுமில்லை.   

No comments:

Post a Comment