புயலைச் சிறுசிமிழில் அடைத்தே - காலைப்
பனியை அதிற்குழைத்துப் போட்டே
அயலே இருப்பவர்க்கே அளித்தேன் - அவர்
ஆகா இதுஇனிமை என்றார்.
வேம்பின் காயரைத்துப் போட்டே - அதில்
மெல்லிசைச் சொல்லடுக்கிச் சேர்த்தே
வீம்பிலாச் சுவைஞரிடம் தந்தேன் - அவர்
மிதக்கிறோம் தேனாற்றில் என்றார்.
தென்றலைச் சிறைப்பிடித்தே வந்து - கீற்றுத்
தென்னைச் சலசலப்பைச் சேர்த்து
முன்றிலில் உலவிவரச் செய்தேன் - ஆகா
மூளு மிதுகவிதை என்றார்.
தீயின் நாக்குளிரச் செய்தே - அதில்
சிறகுடன் கற்பனைகள் போட்டேன்
தீயின் சுடர்நடுவே சுவைகள் - கண்டே
சிறந்த கவிதைஇதோ என்றார்.
இரவின் விண்மீன்கள் பறித்தே - அவற்றுக்
கெழிலுற வேசந்தம் சேர்த்துக்
குறைவிலாத் தோரணமாய்ச் செய்தேன் -அதைக்
கவிதை வானமென்றே சொன்னார்.
தீமைச் சிறகுகளைக் கொய்தே - அவற்றைத்
தூய கவிநெருப்பில் போட்டேன்
தீமை எரிந்திடவே யில்லை - என்னைத்
தின்றிட முயல்வதைநான் பார்த்தேன்
ஊழற் புற்றுநோய்ப்பூ தமேயிந் - நாட்டின்
ஊனத் தின்காரண மென்றேன்
ஆழக் கிழங்கையகழ்ந் தெடுக்க - இங்கே
ஆரும் முனைந்திடவே காணோம்.
என்னைத் தான்பலரும் முறைத்தார் - கவிஞன்
இவனுக் கேனிக்கொழுப் பென்றார்
வண்ணக் கவியுனக்குப் போதும் - தீமை
வகையுணர் பார்வைவேண்டா மென்றார்.
என்னநான் இப்பொழுது செய்ய? - கால
இருப்பினைக் காட்டுதலே தப்பா?
கண்ணா டிதானிங்கே கவிதை - என்னும்
கருத்தெலாம் ஒதுக்கிவிட்டா பாட?
அப்படி ஒருகவியே வேண்டாம்! - செல்வ
அணிவகுப் பும்விருதுமே வேண்டாம்
இப்படி யேபாடித் திரிவேன் - கிடைப்ப
திடுகா டேயெனினு மதுசோலை.
No comments:
Post a Comment