சிந்திக்கும் நெஞ்சத்துள் தித்திக்கத் தித்திக்கத்
திகழ்கின்ற மலைக்கொழுந்தே!
சிந்தனையி லுனையன்றிச் சிறக்கின்ற வேறுபொருள்
தினமும்நான் உணர்வதில்லை;
நிந்திக்கும் பெருங்கூட்ட நெருக்கடியில் வாழ்கின்றேன்;
நித்தமுமே வாடுகின்றேன்;
நினைப்புக்கும் செயலுக்கும் யாதுமொரு தொடர்பில்லா
நேயரையே கூடுகின்றேன்;
வந்திக்கும் நிறைபொருளா யிளையவனே! உனையேநான்
வாழ்நாளில் தேடுகின்றேன்;
வாடுகிற கணந்தோறும் மலருகிற உன்மேனி
வடிவழகைப் பாடுகின்றேன்;
செந்தமிழின் பாட்டிலொரு சுவைக்கூட்டாய்த் திகழுகின்ற
சேயவனே! வருகவேநீ!
திகழ்குன்றக் குடிமலையில் சிறப்பாக விளையாடித்
திரிகுமர! வருகவேநீ!
துன்பங்கள் கணந்தோறும் எனைவந்து தாக்கியேஎன்
சிந்தையைக் கலக்கிநிற்கும்;
தொலையாத இடர்பலவும் அலையாக வீசியெனைத்
துரும்பாக அலைக்கழிக்கும்;
இன்பத்தின் நிழல்கூட எனைவந்து தொடுவதில்லை
எனையேனோ புறக்கணிக்கும்;
இதயத்தில் பலவான பொல்லாத பேய்க்கூட்டம்
எப்போதும் ஆர்ப்பரிக்கும்;
கண்பாவச் செயல்காணும்; கைபாவச் செயல்செய்யும்;
கால்பாவ வழிநடக்கும்;
காதுகளும் பாவத்தின் குரல்கேட்டே மகிழ்ந்திருக்கும்;
கடும்பாவம் எனைநடத்தும்;
மென்பாவை வள்ளிமயில் விளையாடு தோளழகா!
முருகான வாவருக!
முந்துகிற புகழ்கண்ட குன்றத்தின் மேலமர்ந்த
முத்தான வாவருக!
நாள்தோறும் எனைநாடும் நண்பர்தம் கூட்டத்தில்
நாடகமே காணுகின்றேன்;
நெஞ்சிலொரு நினைப்பாகி நாவிலொரு சொல்லாகி
நடக்கின்றார் நாணுகின்றேன்;
தோள்தழுவி உறவாடும் தோழனேஎன் பின்னிருந்து
தொல்லைதர வாடுகின்றேன்;
தூய்மையொடு வாய்மையின் தடங்கூடத் தெரியவில்லை
தொலைதூரம் தேடுகின்றேன்;
நாள்பலவும் கழிகிறது; நெஞ்சமோஉள் அழுகிறது;
நல்லகதி வேண்டுகின்றேன்;
நாட்டிலது கிடைக்குமெனும் நம்பிக்கை எனக்கில்லை;
நெஞ்சுறுதி தளருகின்றேன்;
வேல்தாங்கி வந்தென்றன் வேதனைகள் ஒழித்திடவே
வேலவனே! வருகவேநீ!
மயில்தாங்கி நடந்துவர வளைதாங்கு மயிலோடு
மால்மருக னேவருகவே!
அறியாமை தனில்மூழ்கிக் கிடக்கின்றார் பாமரர்கள்;
அவர்கள்தம் தலையிலேயே
அருமையுடன் மிளகாயை அரைக்கின்றார்; தலைகொடுத்தோர்
அகமகிழ்ந்து திளைக்கின்றார்;
தெரியாமல் கேட்கின்றேன்; தலையெரிச்சல் தெரியாத
திறமென்ன திறமதுவோ!
தெரிந்தாலும் சரியென்று கும்பிட்டுப் பணிசெய்யும்
செயலென்ன செயலதுவோ!
அறிவுறுத்த முயல்பவரை அச்சுறுத்த முயல்கின்றார்;
அடிப்பதற்கும் அஞ்சவில்லை;
அறுமுகனே! சூரரினை அழிக்கவேநீ முனைந்துவந்தால்
அடியவரே எதிர்ப்படுவார்;
புரியாத நல்லமனப் போக்குகளே புரிந்துசெயப்
பொன்மயிலு டன்வருக!
புகழேறு குடியதனில் மலையேறி நிற்கின்ற
புண்ணியனே வருகவேநீ!
பொல்லாத மனமென்னைப் பாடாகப் படுத்திநாளும்
போகாத இடம்செலுத்தும்;
புரியாத அறிவென்னைப் பெருங்குழப்பந் தனிலாழ்த்திப்
பொல்லாங்கில் மூழ்குவிக்கும்;
இல்லாத ஆசையெல்லாம் என்னென்ன வோஎழுந்தே
என்னெஞ்சில் புயலெழுப்பும்;
என்றைக்கும் நனவாகாக் கனவுகளே என்வாழ்வின்
ஏக்கமென நிறைந்திருக்கும்;
செல்லாத நெறிசெலுத்தும் சபலங்கள் தேரேறித்
திசையெல்லாம் ஓடிநிற்கும்;
செய்வதொன்றும் புரியாமல் திசைவழிகள் தெரியாமல்
திண்டாடி வீழ்ந்துநிற்பேன்;
கல்லாத எனக்குவழி காட்டிடவே மயிலேறிக்
காற்றாக வருகவேநீ!
கலைநிலவு குடியதனில் மலைநிலவி யுயர்ந்துள்ள
கலைமணியே வருகவேநீ!
பொருள்செய்யும் வழியறியா திவ்வுலகில் நாள்தோறும்
புண்பட்டு வாடுகின்றேன்;
பொழுதொன்றும் பொருளின்றிப் போகாத தையுணர்ந்தே
புலம்பியேநான் ஓடுகின்றேன்;
பொருளுக்கும் நான்கற்ற கல்விக்கும் சற்றுமொரு
பொருத்தமுமே காணவில்லை;
பொருள்கூடாக் கற்றவரைப் பூனையுமே மதிப்பதில்லை;
புவியினிலோர் உயர்வுமில்லை;
மருள்போகக் கற்றவனைப் பொருள்சேர்க்கக் கற்குமொரு
வழிகாட்டி அருளவேண்டும்;
வாராத இடரேதும் வந்தாலே நீவந்து
வாரியணைத் தெடுக்கவேண்டும்;
அருள்தோகை விரித்தமயில் அழகுவள்ளி யுடனாக
அப்பப்ப! வருகவேநீ!
அருங்குன்றக் குடியிலுயர் பெருங்குன்றி லாடுகின்ற
அழகழகா! வருகவேநீ!
எத்தனையோ துன்பங்கள்; எத்தனையோ துயரங்கள்;
எத்தனையோ மனஉளைச்சல்;
எத்தனையோ பேராசை; எத்தனையோ மனஓசை;
எத்தனையோ நெஞ்செரிச்சல்;
எத்தனையோ மனவீழ்ச்சி; எத்தனையோ மனத்தளர்ச்சி;
எத்தனையோ பேரிகழ்ச்சி
எத்தனையோ நடிப்பலைகள்; எத்தனையோ இடிப்பலைகள்;
எத்தனையோ துடிப்பலைகள்;
இத்தனையும் நான்தாங்கி இவ்வுலகில் வாழ்ந்திடஎன்
இதயத்தில் வலிமையில்லை;
எனைக்கூட்டி யணைத்தெனக்கோர் வழிகாட்டி நடத்தியெனக்
கென்றும்நீ அருளவேண்டும்.
இத்தரையில் வந்துகுற வள்ளிமயில் மணந்தவனே!
எழில்முருக னேவருக!
எழிலான குடிதன்னில் உயர்வான மலைவாழும்
இளையவனே! வருகவேநீ!;
No comments:
Post a Comment