Friday, October 13, 2023

ஆறு

விண்ணகத்துப் பெண்குழந்தை; மேக மென்னும்

  மெல்லியலாள் கருவளர்ந்து மேள தாளம்

மண்ணகத்தை அதிர்விக்கப் பிறந்த வள்நான்;

  மலைமங்கை மேலாடை யென்ன வீழ்ந்து

மண்ணகத்தைத் தொட்டபின்னே குதியாய்ச் சென்று

  மடுமேடு காடெல்லாம் திரிப வள்நான்;

மண்ணெல்லாம் நான்தொட்டால் சிரிக்கும்; நல்ல

  மாணிக்கப் பயிர்விளையும்; கொழிக்கும் செல்வம்


அணை;கட்டும் என்றுநானாய்ச் சொன்ன தில்லை

  அடக்கமுள்ள பெண்மகள்நான் ஆத லாலே;

அணைக்கட்டு வேலையங்கே முடிந்த தென்றால்

  ஆசையுடன் பசுமையினை ஈன்று நிற்பேன்;

நினைவெல்லாம் என்தலைவன் கடலை நாடி;

  நீள்பூமி தவழ்ந்தங்கே கிடைப்ப தெல்லாம்

நினைவோடு தலைவன்கா லடியில் சேர்ப்பேன்;

  நிம்மதியாய் அவன்மடியில் தலையைச் சாய்ப்பேன்;


நாகரிகம் நான்பெற்ற குழந்தை; நல்ல

  நகரங்கள் நான்சேர்த்த சேர்க்கை; எங்கும்

போகவரப் படகுகளே செல்ல யாரும்

  போடாத பெருஞ்சாலை யாவேன்; மாலை

மோகநெருப் புள்ளத்தே எரியக் காதல்

  வேதனையில் தவிப்போர்க்கே இதம ளிப்பேன்;

மோகத்தைக் கொன்றுவிட முனையும் யோகி

  முயற்சிக்கும் இடமளித்தே மகிழ்ந்து நிற்பேன்;


காராக விண்தவழ்வேன்; குளிர்ச்சி மோதிக்

  கனமழையாய் மண்வருவேன்; அருவி யென்னும்

பேராக மலைதவழ்வேன்; இடங்கள் தோறும்

  பெருங்குளமாய் நிலங்கிடப்பேன்; சிலபக் கத்தில்

பேராத பாறையெல்லாம் துளைத்த பின்னர்

  பாதாளத் துள்ளிருந்தே எட்டிப் பார்ப்பேன்;

ஆறாக நான்நடப்பேன்; கடலைச் சேர்வேன்;

  அவதாரம் பலவேதான்; மூர்த்தி ஒன்றே!


நதியென்றே போற்றிடுவார்; மக்கள் வாழ்வை

  நான்நடத்துங் காரணத்தால் என்னை நாட்டின்

விதியென்றுங் கூறிடுவார்; நான்தான் மண்ணில்

  வெறிகொண்டே விளையாடத் துவங்கி விட்டால்

கதியில்லை மக்கட்கே; என்றன் கோபக்

  கடுமையினைத் தாங்காமல் "ஆறு" என்பார்;

இதுபோதும் என்றேநான் ஆற்றிக் கொள்வேன்

  இந்தவினை வடக்கிற்கே ஏக போகம்;  ;


No comments:

Post a Comment