அமைதியினைத் தொலைத்துவிட்டோம்; பொறுப்பில் லாமல்
ஆற்றினிலே போட்டுவிட்டுக் குளத்தில் தேடி
அமைதியினைக் காணாமல் நொறுங்கு கின்றோம்;
அகத்துளேஓர் இருட்குகையில் கிடந்த பூதம்
நமதுள்ளம் கிழித்தெறிந்தே ஆர்ப்ப ரித்து
நடுநடுங்க வைப்பதனைக் காணு கின்றோம்.
அமைதியெங்கே எனத்தேடி வாடு கின்றோம்;
அதுஎங்கே? உள்ளேயா? வெளியி லேயா?
நெஞ்சுக்குள் பூகம்பம் வெடிக்கும் போது
நினைவுக்குள் சுழற்காற்றே அடிக்கும் போது
பஞ்சுக்குள் நெருப்பைப்போல் ஏற்றத் தாழ்வு
பற்றிக்கொண் டபலைகளை எரிக்கும் போது
மிஞ்சிநிற்கும் செல்வத்தால் ஏழை மக்கள்
மிதிபட்டுத் தெருவெல்லாம் கதறும் போது
கிஞ்சித்தும் தோன்றிடுமா அமைதி? அந்தக்
கனவுப்பூ எரிமலையின் நடுவா பூக்கும்?
உலகமெலாம் ஒருகுடும்பம் என்ற எண்ணம்
உள்ளத்தில் கொண்டிடுவோம்; வரைப டத்தில்
உலகத்தைப் பிரிக்கின்ற கோட்டை யெல்லாம்
ஒட்டுமொத்த மாயழிப்போம்; உடன்பி றந்தே
கலகத்தை வளர்க்கின்றோர் நெஞ்சுக் குள்ளே
கருணைவெள்ளம் பாய்ச்சிடுவோம்; உயிர்கள் வாழும்
உலகத்தை ஒருகூடாய்க் கண்டெல் லோரும்
ஒருகூட்டுப் பறவைகளாய் உறவு கொள்வோம்.
சாதியினால் ஒருபுகைச்சல்; அவைகள் கூட்டும்
சச்சரவால் பெரும்புகைச்சல்; மதங்கள் தம்முள்
மோதுவதால் ஒருபுகைச்சல்; கட்சி கள்தாம்
முட்டுவதால் ஒருபுகைச்சல்; புகைச்ச லுக்குள்
ஆதிமுதல் இன்றுவரை இருப்ப தல்லால்
அகிலத்தில் அமைதியதே இல்லை; இந்தச்
சேதியினைத் தெளிவாக உணரு கின்றோம்;
தேவையின்றும் என்றைக்கும் அமைதி ஒன்றே.
No comments:
Post a Comment