Friday, October 13, 2023

அழகென்னும் தெய்வம்

பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்

   புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்

காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்

   கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்

சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்

   திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி

ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;

   அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.


காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்

   கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.

சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்

   சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.

காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்

   கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.

மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்

   மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.


மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே

   மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி

மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை

   மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே

மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்

   மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.

மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த

   மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.


தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்

   திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்

தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்

   செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்

தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்

   தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்

தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்

   தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன். 

No comments:

Post a Comment