Friday, October 13, 2023

அவளே மருந்து

  உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; --என்றன்

   உடலும் உருகுது தாங்கவில்லை;

எண்ணமும் செயலுமே முடங்கிவிட-- என்றன்

   இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.


நெஞ்சுளே ஏதோ உடைகிறது; - என்

   நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;

பஞ்சென உள்ளம் பறக்கிறது -- எங்கோ

   போய்ப்போய் மீண்டும் வருகிறது.


கண்ணிலே ஒளியும் குறைகிறது; - காணும்

   காட்சிகள் குழம்பித் தெரிகிறது;

கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் - ஏதோ

   கொடிய வலியுடன் வதைக்கிறது.


பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் - எங்கோ

   பெரிய வைத்தியன் தேடுகிறாள்;

உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே - இங்கே

   உருகி உருகிப் பேசுகிறார்.


வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த

   நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?

வேதனை நான்பட மற்றவர்கள் - என்னை

   வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.


எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்

   எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?

எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை

   எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?


என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்

   இறகென நீவியே தரவேண்டும்;

என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த

   இளையவ ளேபிற மருந்தில்லை.


நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; - அந்த

   நோயெலாம் உலகில் வேறுவகை;

நோயிதைத் தீர்க்க மருந்தில்லை - இந்த

   நோய்தந்த அவளே நோய்மருந்து.


பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து.

          புணர்ச்சிமகிழ்தல்--1102

  திருவள்ளுவர் இலக்கியமன்றம்

    நங்கநல்லூர்--08-07-06


No comments:

Post a Comment