நெஞ்சக்கனல்
நெஞ்சுக்குள் அக்கினிக்குஞ் சொன்றிருந்தென்
நினைப்புக்குள் சூடாகித் தகிக்கிற்து-அது
பஞ்சுக்குள் பொறியைப்போல் பரவியேஎன்
பாட்டுக்குள் தீயாகிச் சுடுகிறது
கற்பனையில் விண்ணேறிக் கதிரவனாய்
மாறியிந்தக் காசினியைப் பார்க்கிறது
சொற்கூட்டில் நெருப்பாகிச் சுற்றியுள்ள
தீமைகளைச் சூழ்ந்தெரிக்க முயல்கிற்து
காற்றினிலே ஏறியந்த அண்டமெலாம்
அளந்தறியக் கண்ந்தோறும் அலைகிறது-புயற்
காற்றையுமே தென்றலாக்கிக் காட்டுதற்கு
முடியுமெனக் கட்டியமே உரைக்கிறது
சொல்லினிலே ஏறியொரு சுகராக
மிசைக்குங்கால் சொர்க்கமெனத் தெரிகிறது-அதுவே
வில்லினிலே பாய்ந்திடுமோர் அம்பாகித்
தாக்குங்கால் வேதனைகள் தருகிறது
பெண்மைகளைப் பெண்மைகளே சுடுகின்ற
வேதனையில் அக்கனலே எரிகிறது-இந்தப்
பெண்மைகளைச் சீர்குலைக்கும் ஆண்மைகளைக்
காணுங்கால் பெருஞ்சீற்றம் விரிகிறது
உள்ளுக்குள் கனலில்லா ஒருகவிஞன்
இல்லையெனும் உண்மையின்று தெரிகிறது-அந்த
உள்ளத்துக் கவிதைவெறி நன்மைக்கே
இல்லையெனில் உள்ளமெலாம் எரிகிறது
கவிதைக்குள் கனலாகி நிற்குமொரு
சொற்கூட்டே களிப்பள்ளித் தருகிறது-என்றும்
கவிஞர்தம் நெஞ்சுக்குள் கனலாகும்
கவிதையினால் கருத்தெல்லாம் இனிக்கிறது
கவிதைகளே நெருப்பாகித் தீமைகளைச்
சுட்டெரிக்கும் காலமின்று தெரிகிறது-அந்தக்
கவிதைகளைச் சூடாக்கும் கனல்வாழ
வேண்டுமெனக் கவிநெஞ்சம் விழைகிறது