Wednesday, January 11, 2012

gnanakkirukkan


        ஞானக்கிறுக்கன்

கவிஞன் நானொரு ஞானக் கிறுக்கன்
புவிப்பொரு ளனைத்தும் போதி மரங்கள்

தென்றலை இறுகக் கட்டி யணைப்பேன்
மண்ணில் தீண்டாமை உனக்கிலை என்பேன்

மணக்கும் மலரை மோந்து திளைப்பேன்
உனக்குள் சாதிகள் உண்டா என்பேன்

கதிரவன் ஒளிக்குத் தடைகள் உண்டா?
அதுநுழை வதிலே பேதமே தென்பேன்

பாறையைப் பார்த்துநீ கடவுளா? கல்லா?
யாராய் நீதான் மாறுவா யென்பேன்

கடவுளை நான்தான் கட்டி யிழுத்தே
அடநீ இந்த அவனிபா ரென்பேன்

படைத்தவ  னேநீ படைத்த நெஞ்சுகள்
உடைபடு  மோசை கேட்குதா என்பேன்

பார்முழு தும்களை மண்டியே பயிரை
சீரழித் திடுநிலை தெரியுதா? என்பேன்

கோவிலில் கூட்டம் பக்தியா லல்ல
பாவங்கள் கசக்கிப் பிழிதலால் என்பேன்

கவிஞன் நானொரு ஞானக் கிறுக்கன்
புவியுள நியாயம் புரிபட வில்லை

நரிகள் புலிகளாய் மாறுவ தில்லை
குறுமுயல் சிங்கமாய் உறுமுவ  தில்லை

மனிதனோ மிருகமாய் மாறிடு கின்றான்
மனிதனைக் கடித்துக் குதறிடு கின்றான்

"படைத்தவ  னேநீ மனிதனின் நெஞ்சுள்
குடியிருந் தொருநாள் கூத்தைப் பாரேன்"

என்றுநான் அழைத்தேன் "அய்யோ என்னைக்
கொன்றுபோட் டாலும் குடிவர மாட்டேன்

நான்தான் படைத்தேன் ஆனால் இன்றோ
ஏன்தான் படைத்தேன் எனஅழு கின்றேன்"

என்றான் 'அடநீ என்போன் றோரை
என்ன கருதி நெஞ்சுடன் படைத்தாய்?

என்றேன் அவனோ "கவீஞனே மண்ணில்
உன்றன் நெஞ்சம் அடிபட அடிபடப்

பாட்டினி லேஒரு பக்குவம் தோன்றும்
கேட்பாய் அந்தப் பக்குவம் நான்தான்"

என்றான்;இந்த ஞானக் கிறுக்கன்
ஒன்றும் புரியாமல் பாடித் திரிவேன்.

No comments:

Post a Comment