கண்ணில் தெரிகிற நிலவு வந்தே
கைப்பட மாட்டாதோ?-அட
விண்ணில் திரிகிற மீன்கள் மடியில்
வீழ்ந்திட மாட்டாவோ?
சோலை தவழ்ந்திடு தென்ற்ல் அதுநம்
சொல்லினைக் கேட்காதோ?-எந்த
வேளை வேண்டினும் வந்தே நம்முடல்
மெல்லெனத் தடவாதோ?
காட்டில் திரிந்திடு புலிநரி அவைநம்
கட்டளை கேட்காவோ?-இந்த
நாட்டு மனிதரில் யாரவை யாரென
நம்மிடம் உரைக்காவோ?
காற்று வெளியெலாம் நம்செவி வந்தே
கதைகள் நவிலாவோ?-இங்கே
நேற்றும் நாளையும் இன்றும் நமதென
நாட்டியம் புரியாவோ?
கண்ணில் தெரிகிற உயிரெலாம் உறவெனக்
கருத்துள் பதியாதோ?-சிந்தை
எண்ண ஒளிக்கடல் நீந்தித் திளைத்தே
இன்பம் அடையாதோ?
கதிரும் நிலவும் உறவென வந்து
கலந்து மகிழாவோ?-அட
எதிரும் புதிருமே இல்லா உலகம்
இங்கு மலராதோ?
கண்ணில் ஒருநிலா கற்பனை ஆயிரம்
காட்சி விரியாதோ?-அட
எண்ணிப் பாரடா என்ன உன்னுளே
இலையென இடிக்காவோ?
கண்ணில் தெரிந்திடு காட்சிகள் நந்தம்
கற்பனை தூண்டாவோ?-நம்
எண்ணம் ஆயிரம் ஆயிரம் சிட்டாய்
எங்கணும் பறக்காவோ?
நானும் நீயும் அவனும் அவளும்
நடமிடும் ஆன்மாவே!-அந்த
வானும் நிலவும் வெளியும் ஆன்மா
ஆடிடு களந்தானே!
கண்ணில் தெரிகிற நிலவே உன்றன்
கருத்துள் நுழையட்டும்-அந்த
விண்ணில் தவழ்ந்திடு கோள்க ளனைத்தும்
மனத்துள் தவழட்டும்
No comments:
Post a Comment