Wednesday, January 18, 2012

நான் யார் ?


நான்யார் என்பது தெரியவில்லை-நிற்கும்
  நீயார் என்பதும் புரியவில்லை
நான்யார்? நீயார்? நடப்பவர்யார்?-இங்கே
  நெருக்கிடும் உறவினர் யார்யார்யார்?

நான்நா னென்பதென் உடல்தானா?-அதை
  நடத்திடும் இயக்க உயிர்தானா?
நானெனச் சொல்வ தென்னவென-நான்
  நாளெலாம் நினைக்கிறேன் தெரியவில்லை

நாள்தொறும் உடற்சுவை தேடுகின்றேன்-என்ற்ன்
  நாக்கிற் கோர்சுவை தேடுகின்றேன்
வாளெனத் துயரெனை அறுக்குங்கால்-அந்த
  வாலறி வன்தாள் நாடுகின்றேன்

தேடித் துய்ப்பவன் தான்நானா?-இல்லை
  துன்பில் நைந்தே இறைவன்தாள்
தேடி எய்ப்பவன் தான்நானா?-அந்தத்
  தேட லென்பதே நான்தானா?

மனத்துள் பயணம் போகின்றேன்-அங்கே
  மலங்கள் மாசுகள் காண்கின்றேன்
மனமே என்பது நான்தானா?-அந்த
  மலமும் மாசும் தான்நானா?

ஆன்ம ஒளிக்கடல் அலைவீச்சில்-ஓர்
  அற்புதச் சோதி ஒளிர்கிற்தே
ஆன்மா என்பது நான்தானா?-அந்த
  அழகிற் குளிப்பவன் நான்தானா?

புலன்பொறி யனைத்தையும் அவைபோக்கில்-எங்கும்
  போக விடுபவன் தான்நானா?-
புலன்பொறி அடக்கப் போராட்டம்-நாளும்
  புரிந்தே களைப்பவன் தான்நானா?

ஆத்திரக் கொடுமுடி தான்நானா?இல்லை
  அமைதிக் கொள்கலம் தான்நானா?
 ஆத்திரம் போக்கி அறிவொளியை-என்
  அகத்துள் காண்பவன் தான்நானா?

எல்லாம் நான்தான் என்றிட்டால்-உள்ளே
  இருப்பவன் அவனும் நான்தானா?
வல்லவன் எனக்குள் அமர்ந்துவிட்டால்-அந்த
  மாயமும் அவனும் தான்நானா?

No comments:

Post a Comment