Friday, January 13, 2012

இறைவனைக் கேட்டேன்.

இறைவனைக் கேட்டேன் பதிலில்லை-இங்கே
இருப்பவர் பதிலும் சரியில்லை

நல்லவர் வாழ்க்கை நலிகிறதே-நாளூம்
நடப்பினில் துன்பம் நிறைகிறதே
அல்லவர் வாழ்க்கை உயர்கிறதே-இந்த
அமைப்பெலாம் உன்றன் செயல்தானா (இறை)

வஞ்சகம் கைகொட்டிச் சிரிக்கிறதே-நல்ல
வாய்மையும் தூய்மையும் சரிகிறதே
சஞ்சலம் அறத்தையே சூழ்கிறதே-இந்தச்
சூழலைப் படைத்தவன் நீதானா (இறை)

நல்லன செய்யத் துடித்திருப்பான்-அவன்
நலிந்து கிடக்கிறான் அடித்தளத்தில்
அல்லன செய்பவன் மேல்தள்த்தில்-இந்த
அடித்தளம் மேல்தளம் சரிதானா (இறை)

கள்ளியில் முல்லைகள் பூப்பதில்லை-எந்தக்
கானலும் தாகமே தீர்ப்பதில்லை
கள்ளமே அரியணை அமர்கிறதே-இந்தக்
காட்சி அமைப்பெலாம் சரிதானா (இறை)

காக்கை மயிலென ஆவதிலலை-எந்தக்
காலமும் தோகையை விரிப்பதில்லை
சேர்க்கையில் காக்கை சிறக்கிறதே-இந்தச்
செப்பிடு வித்தைகள் சரிதானா (இறை)

நீதியும் நேர்மையும் சாகிறதே-தூய
நெஞ்சங்கள் தீயினில் வேகிறதே
சாதிகள் சிறகினை விரிக்கிறதே-இந்தச்
சந்தையில் அறங்களே விலைபெறுமா? (இறை)

கீதையை ஏனடா சொல்லிவைத்தாய்?-எந்தக்
கிறுக்கனும் அதன்வழி நடப்பதில்லை
போதையின் நெறிபுகும் மக்களுக்கே-உன்றன்
கீதையின் போதனை சுகம்தருமா? (இறை)

யாரடா அறநெறி தொடர்ந்திடுவார்? இங்கே
யாரடா நாளுமே இடர்ப்படுவார்?
பாரடா கவுரவர் சிரிப்பதனை-அந்தப்
பாண்டவர் கைகளை நெரிப்பதனை

சங்கெடுத் தூதடா சமர்வரட்டும்-அந்தச்
சமரினில் முடிவொன்று தான்வரட்டும்
இங்கெடுத் தெறியடா சக்கரத்தைத்-தீமை
இலையென அழித்துவிட் டதுவரட்டும்

No comments:

Post a Comment