Saturday, January 21, 2012

தலைத்தொழில் வல்லோன்


தலையாய தொழிலெங்கள் தொழில்தான்;ஆமாம்
  தலைமீது தானேஎம் தொழில்ந டக்கும்
கலையாத முடிவகைகள்;எந்தப் போதும்
  கலைந்திருக்கும் முடிவகைகள்; அழகு கூட்டும்
நிலையான முடிவகைகள்;நடிகர் தாங்கும்
  நிலையில்லா முடிவகைகள்;எல்லாம் எங்கள்
கலைவண்ணச் சின்னங்கள்;நீங்கள் என்னைக்
  கலையழகாய் முடிகொண்டான் என்ன லாமே

கருப்பரொடு வெள்ளையர்கள் மிகநெ ருங்கிக்
  கலந்துவாழும் சாம்ராஜ்யம்;நிறங்கள் கூட்டும்
நெருப்பங்கே மூள்வதில்லை;தீண்டாப் பொல்லா
  நினைப்பங்கே எழுவதில்லை;காற்றி லாடி
விருப்பமுடன் உறவாடும் அவர்க ளைத்தான்
  வெட்டிவெட்டிக் குவிப்பேன்நான்;விழுந்த போதும்
நெருக்கமுடன் கிடக்கின்ற ஒருமைப் பாட்டை
  நினைத்துமகிழ்ந் திடுவேன்நான் உண்மை யாக

முடியாட்சி தனையொழிக்கப் படைகள் தாங்கி
  முன்னிற்கும் வீரரினம் நாங்கள்;இங்கே
முடியாட்சி படைபலத்தால் வீழுங் கோலம்
  முழுவதையும் கண்டுநெஞ்சில் மகிழ்வு கொள்ளா
முடியரசர் யாருமில்லை; சொல்லப் போனால்
  முடிதுறந்த ம்முடியரசர் அன்பு கொஞ்சப்
படியளப்பா ரென்றிட்டால் எங்கள் மேன்மை
  பாரறியப் பறையறைந்தா சொல்ல வேண்டும்?

முடியரசில் எங்கேனும் ஏற்றத் தாழ்வு
  முனையரும்பின் சரிசெய்ய என்னி டந்தான்
முடியரசர் வருவார்கள்;தலைவ ணங்கி
  முடியரசர் அமர்ந்தபின்னே அவர்த லையில்
துடிப்போடு கைவைப்பேன்;உயர்வு தாழ்வுத்
  தோற்றத்தைச்  சரிசெய்வேன்;தலையை நீட்டும்
முடிகளையே வீழ்த்திடுவேன்;இந்த மண்ணில்
  முடியாட்சி ஒழுங்குபெற்ற தெம்மா லேதான்

No comments:

Post a Comment