சிறகு
சிறகை விரித்தொரு பறவை பறந்துவிண்
பரப்பை அளக்கிறது-அங்கே
விரையும் கோளினம் மீனினம் இவ்ற்றின்
வகையறிந் துணர்கிறது
இயங்கிடு கோள்களின் இயக்கம் அளந்திடப்
பறவை துடிக்கிறது
இயக்கம் எத்துணை வகைவகை யெனவே
இதயம் நொடிக்கிறது
அண்ட மியங்கிடு பிண்ட மிவைகளை
ஆட்டுவோன் யாரெனவே-கண்ணால்
கண்டு மகிழ்ந்திட முனைந்து பார்த்துமே
களைத்து வீழ்கிற்து
எனக்கொரு சிறகினை அளித்தனன் அதுவெனை
எங்கணும் இழுக்கிறது-மண்ணில்
கணக்கினி லடங்கா மானிட உள்ளக்
கசடுக ளளக்கிறது
எனக்குளே நுழைந்தென் இதயமே துழாவி
எதெதோ செய்கிறது-அடா
எனக்குளே இத்துணை குப்பைக ளாவென
என்னை இடிக்கிறது
அகமும் புறமும் அளந்து பார்த்தென்
அளவினைக் காண்கிறது-எல்லாப்
பகலும் இரவும் நான்செயும் செயல்கள்
பயனுறச் செய்கிறது
சோலையில் பூத்திடு பூவித ழசைவினில்
சொக்கியே நிற்கிறது-அதி
காலையில் பூவிதழ் மேடையில் வண்டின்
நாட்டியம் காண்கிற்து
மணமுள பூவின் மணமதில் முழுதாய்
மனதை இழக்கிற்து-ஆங்கே
மணமிலாப் பூவின் இதழ்கள் நிறத்தினில்
மயங்கித் திளைக்கிறது
எங்கணும் சுற்றித் திரிந்தெதோ செய்தி
எனக்குத் தருகிறது-அதை
மங்கிடாக் கவியென வடித்திடச் சொல்லி
மனசை இடிக்கிறது
நானென செய்வேன் கவியென ஒன்றை
நறுக்கெனப் படைக்கின்றேன்=அதை
நான்படைத் தேனா சிற்கு படைத்ததா?
அறிந்திடத் துடிக்கின்றேன்...
No comments:
Post a Comment