கவிஞன் நானோர் அழியாத் தத்துவம்
புவியுள அனைத்துமென் தத்துவ விளக்கம்
வஞ்சகம் சூதில் வசப்பட மாட்டேன்
கொஞ்சிடும் உரைக்குள் குழைந்திட மாட்டேன்
கடும்புலி ஓநாய் கடித்திட வரினும்
நடுங்கிட மாட்டேன்; கவிதை படைப்பேன்:
வறுமை என்னை வாட்டி வதைப்பினும்
பெருமைக் கவிப்பொருட் செல்வனாய் இருப்பேன்:
பசிநோய் என்னைப் புசித்திட வரினும்
புசியென அதற்கோர் கவிதை கொடுப்பேன்
பொருளற்று நானும் பொருளற்றுப் போயினும்
பொருளுற்ற கவிதைகள் பெற்றெடுத் தளிப்பேன்
கவிதை எனக்கொரு கைவா ளாகும்
புவியுள தீமைகள் பலியா யாகும்;
அறங்கொன் றெவனும் ஆட்டம் போட்டால்
அற்ம்பா டியேஅவன் அழியச் செய்வேன்;
வான்மதி சூரியன் வசப்பட வைப்பேன்
நானுள திசையெலாம் ஒளிபெற வைப்பேன்;
இறைவனை ஏவல் கேட்டிட வைப்பேன்
குறையிலா உலகம் படைத்திடச் செய்வேன்;
தீமைகள் கொடுமை மழையெனப் பொழியின்
வாய்மைக் கவியொரு குடையாய்ப் பிடிப்பேன்;
பொய்யரை அழிப்பேன்;புரட்டரை ஒழிப்பேன்;
வையகம் நலமாய் வாழ்ந்திட வைப்பேன்;
நில்லாப் பொருளை நிற்க வைப்பேன்;
கல்லைக் கனியாய் மாற்றியும் வைப்பேன்;
இல்லா உலகம் இல்லை யாக்குவேன்;
செல்லாப் பொருள்கள் சென்றிடச் செய்வேன்;
படைப்பதால் நானுமோர் கடவுள்; நல்லதே
படைப்பதால் அவனினும் நானே உயர்ந்தவன்;
மண்ணுளே போயினும் மக்கிட மாட்டேன்
மண்ணுளே வைரமாய்ப் பின்னொளி தருவேன்;
அழிவென எனக்கு வருவதே இல்லை;
அழிவதை நானும் படைப்பதே இல்லை;
கவிஞன் நானோர் அழியாத் தத்துவம்;
புவியுள அனைத்துமென் தத்துவ விள்க்கம்…
No comments:
Post a Comment