Friday, December 5, 2014

மனித வாழ்வில்--இனம்

        அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
               14-ஆம் ஆண்டு விழா--12-02-06

             மனித வாழ்வில் ....இனம்

   நானெந்த இனமெனக்குத் தெரிய வில்லை;
      நான்பிறந்த ஊர்தெரியும்; தெரியும் நாடு;
   நான்படித்த இடம்தெரியும்; உழைத்தோய்ந் திட்ட
      நான்செய்த பணிதெரியும்; இந்த மண்ணில்
   நான்பிறந்த மனிதகுலம் தெரியும்; பேசும்
      நல்லதமிழ் மொழியெனக்குத் தெரியும்; ஆனால்
   நானெந்த இனமெனக்குத் தெரிய வில்லை;
      நல்லினமா? வல்லினமா? புரிய வில்லை.

   நாய்களெல்லாம் ஓரினந்தான்; நம்கால் சுற்றும்
      நல்லநாயும் வெறிநாயும் இனமொன் றேயா?
   வாய்மணக்கச் சொல்பேசி உளம்ம றைக்கும்
      வஞ்சகரும் தூயோரும் இனமொன் றேயா?
   தூய்மைநிறை மல்லிகையும் மணமே இன்றித்
      தோன்றிநிற்கும் மலர்வகையும் இனமொன் றேயா?
   ஆய்ந்துணர்ந்தால் ஒரேயினமாய்த் தோன்று கின்ற
      அவைகளெல்லாம் பண்பாலே வேறு தானே!

   மனிதரெல்லாம் ஓரினந்தான்; அவர்கட் குள்ளே
      மனவகைகள் எத்துணையோ? உறவு கொண்ட
   மனிதரினை இனங்காண முடியா மல்தான்
      மீளமுடி யாத்துயரில் மூழ்கு கின்றோம்.
   மனிதரினை இனமாகப் பிரித்தால் நல்ல
      மனமுடையோர்; இல்லாதோர்; எனப்பி ரிப்போம்;
   மனம்நல்ல தூயோரோர் இனமாம்; இங்கே
      மனம்கெட்ட தீயோரோர் இனமாம் என்போம்.

   மனிதரெல்லாம் வாழ்பவரா? கைகள் கால்கள்
      வாய்த்திருக்கும் அனைவருமே வாழ்வோர் தாமா?
   மனிதவாழ்வுக் கென்னபொருள்? நம்மைச் சுற்றி
      வாழ்பவரின் துயர்காண வில்லை யென்றால்
   மனிதன்வாழ்ந் தென்னபயன்? விலங்கு கட்கும்
      மனிதனுக்கும் வேறுபாடு அன்பு தானே!
   மனிதரெல்லாம் ஓரினந்தான் என்ற ணைக்கும்
      மகத்தான இனவுணர்வுக் கன்பு தேவை.

   அன்பில்லை யென்றிட்டால் பாச மில்லை;
      அடுத்தவரின் துயர்காணும் பார்வை யில்லை.
   அன்பில்லார்க் கிருக்கின்ற அங்க மெல்லாம்
      அங்கமில்லை; வாழ்வினுக்கோர் பங்க மேதான்.
   அன்புவலை வீசுங்கள்! இனத்தை யெல்லாம்
      அதற்குளகப் படுத்துங்கள்! அதைச்செய் தால்தான்
   மன்பதையில் மனிதரெனப் பிறந்த வர்நீர்!
      மகத்தான இனவுணர்வைக் கொண்ட வர்நீர்.

   சொல்வேறு செயல்வேறாய்த் திகழ்வார்; யார்க்கும்
      தீமையினைத் தயக்கமின்றிச் செய்வார்; நாட்டில்
   நல்லவரைத் துன்புறுத்தி மகிழ்வார்; சொந்த
      நெஞ்செல்லாம் வஞ்சகமே நிறைப்பார்; நாட்டில்
   இல்லாரை ஏளனமாய்ப் பார்ப்பார்; என்றும்
      இதயத்தில் நல்லவையே எண்ணார்; நெஞ்சே
   இல்லாத இவரையெந்த இனத்தில் சேர்ப்போம்?
      இவருந்தான் இனத்தாலே மனிதர் தானா>

   இனம்நல்ல இனமென்ற எண்ணங் கொள்வீர்!
      இனச்சிறப்பைக் காக்கின்ற துணிவை ஏற்பீர்!
   இனம்வாழ்ந்தால் நாம்வாழ்வோம்; இந்த மண்ணில்
      இனம்வீழ்ந்தால் நாம்வீழ்வோம்; சேரு கின்ற
   இனந்தூய்மை கண்டுநலம் வாழ்விற் காண்போம்;
      இருக்கின்ற கைகளவர் துயர்து டைக்கத்
   தினமுயர்ந்து செயல்படட்டும்! இனமு யர்த்தும்
      செயற்பயண நடையினைநம் கால்கூட் டட்டும்!
            ------     -----       ---
.

   

Sunday, November 30, 2014

என்ன நடக்கிறது

                          என்ன நடக்கிறது ?
அரசாங்க அலுவலகம் ஒன்றில் நுழைகிறேன்;
இருகை  நீட்டி   வணங்கிவர   வேற்கிறார்.
கண்ணீலே ஒளிமின்னச் சொற்களில் அன்புவழிய
என்னவேண்டும்? என்கிறார். வந்தவேலை மறந்துவிட்டேன்
அமருங்கள் என்றென்னை அமர்த்திப் பாசமுடன்
அமைதிபொங்க என்குறையைக் கேட்டுப்பின் அவராக
விரைந்து செயல்பட்டு வேண்டியதை முடித்துவிட்டே
உறவோடு கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார்.
      என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

நியாய விலைக்கடையின் ஊழியர் வீடுவந்து
நியாய விலைக்கே என்னவேண்டும்? என்கிறார்;
பட்டியலை வாங்கி அதன்படியே பொருளையெல்லாம்
கட்டிவந்தே அளவு குறையாமல் தருகிறார்.
இதுவரை காணாத அன்பொளியை அவர்முகத்தில்
இதுபோது கண்டவுடன் இதயம் வியக்கிறது.
        என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

என்மகன் பட்டம் இந்தஆண்டு தான்பெற்றான்;
இன்றவனுக் கொருமடல்; ‘உடனே விரைந்துவந்து
நல்ல பணியொன்றில் அமரவேண்டி ஓராணை;
உள்ளம் மகிழாமல் அவனோ நாளைக்கு
இன்னும் உயர்வான பணிதேடி வருமென்றான்.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

இளமைபொங்கும் அழகுமங்கை நிறைந்த நகையோடு
வழக்கமான  வழியில்  நள்ளிரவில்  நடக்கிறாள்
தொந்தியிலாக் காவலர்கள் இரண்டுபேர் விரைவாக
வந்தவளின் முன்னும் பின்னுமாய்ச் செல்கின்றார்;
பாச உணர்ச்சியுடன் அவளையவள் வீடுசேர்த்துப்
பாச மலராக அவர்கள் திரும்புகின்றார்.
       என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

தெருவோரம் ஒருவீட்டில் ‘ என்னகுறை?’ எனக்கேட்டு
வருகிறார்  ஓரமைச்சர்  அவர்மட்டும் தனியாக ;
அடுத்த நாளே  அவ்வீட்டுக் குறைதீர்த்துக்
கொடுத்த மகிழ்ச்சியில் குடும்பம் திளைக்கிறது.
அந்த  அமைச்சர்  பேருந்து நிறுத்தத்தில்
வந்த பேருந்தில்  ஏறிச் செல்கின்றார்.
        என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

புடவைக் கடைக்குள்ளே மனைவியுடன் நான்நுழைந்தேன்;
அடுத்து நுழைந்தார்  முதலமைச்சர் தோழியுடன்;
பருத்திப் பிரிவுக்குள் எங்களுட னேவந்து
உருக்க முடன்பேசி  இதுநன்றா? எனக்கேட்டு
என்மனைவி சொன்னபடி புடவையும் எடுத்தே
அன்போடு சென்றார்; ஆரவாரம் ஏதுமில்லை.
         என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

நாட்டிலுள்ள கட்சியெலாம் ஒருங்கிணைந்து மேடையொன்றில்
கூட்டம் நடக்கிறது;  குழப்பமே  அங்கில்லை;
காவலரே தேவையின்றிக் கருத்துகள் பொழிகின்ற
மேவுபுதுத் தோற்றமுடன் மேடை திகழ்கிறது;
எதிர்க்கட்சி யின்குரலை ஆள்பவர் கேட்கின்றார்;
எதிரியெனக் கருதாமல் இணைந்துநலம் பேணுகின்றார்;
மேடையொரு பூந்தோட்ட மெனமாறி எதையேனும்
நாடிவந்து பறியுங்கள்  எனவேண்டி நிற்கிறது.
        என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

ஊழலென்றால் என்னவென் றிளையோர்கள் கேட்கின்றார்.
ஊழலென்ற சொல்லே  வழக்கின்றிப் போகிறது;
நேர்மை   வாய்மை   தூய்மை   நன்மை
சீர்மை   எனவெங்கும் வளமை கொழிக்கிறது;
காவிரியில் வெள்ளம்; பச்சைப் பசும்புரட்சி
நாவிரித்துப் பாடி நடந்துசெலும் உழவரினம்;
சென்னையில் தண்ணீர்ப்  பஞ்சமே யில்லை;
எண்ணிய கணமெல்லாம் தண்ணிர் கொட்டும்.
சிங்காரச் சென்னை;  குழியில்லாச் சாலை;
இங்கென்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
       வண்ணக் கனவென்றன் உறக்கம் கலைக்கிறது.

      ( நங்கநல்லூர்—13-03-04 )



       ;  .

வாழ்க்கை வாசலில் வள்ளுவம்

      வாழ்க்கை வாசலில் வள்ளுவம்
எம்மூரில் ஒருபழக்கம்; சிலபேரை உள்விடாமல்
எம்வீட்டு வாசலிலே யேநிறுத்தி அனுப்பிவைப்பார்;
என்ன இதுவென்றால் உள்வந்தால் தீட்டென்பார்;
இன்றைக்கு வள்ளுவர்க்கும் அந்தக் கதிதானா?
வாழ்க்கை நடப்புண்மை தெளிவாகக் கண்டுணர்ந்தே
ஆழ்ந்து சிந்தித்து வாசலில் நிறுத்தினீரோ?
வள்ளுவம் உள்வீட்டில் வந்தமர்ந்துச் விட்டதென
சொல்லி மகிழும் துணிவு நமக்குண்டா?

வாழ்க்கை உள்வீட்டில் வள்ளுவம் அமர்ந்துவிட்டால்
தாழ்வேது? துயரேது? தனியொழுக்கச் சிதைவேது?
நாமவர்சொல் கேட்கிறோமா? வள்ளுவச் சொல்லைவிட
நாமேதோ விரும்புகிறோம்; அதையேதான் செய்கிறோம்.
அன்பிற்குத் தாழில்லை என்றார்; உள்ளத்துள்
அன்பிற்குத் தாழிட்டு ஆத்திரத்தை வெளிவிடுவோம்;
இடுக்கண் வருங்கால் நகச்சொன்னார்; பிறர்க்குவரும்
இடுக்கண் களைக்கண்டு நாம்நகைக்கப் பழகிவிட்டோம்;
பொய்யாமை ஆற்றின் வேறறம்வேண் டாமென்றார்;
பொய்ம்மையே அறமாகப் பொழுதெல்லாம் போற்றுகின்றோம்;
வாய்மையைப் புதைத்துவிட்டு அதன்மேல் மேடைபோட்டுத்
தூய்மையைத் துடைத்துவிட்டுச் செயல்வீரம் காட்டுகின்றோம்;
வாய்மை சாகிறது; வழக்கின்றிப் போகிறது;
தூய்மை தொலைகிறது; துரோகந்தான் செழிக்கிறது;
ஆளவந்த பெரியவர்கள் வாக்களித்த குடிகளையே
மாளவந்த மக்களாய் மதித்தன்றோ நடத்துகின்றார்;
அல்லற்பட் டாற்றாது அழுதகண்ணீர் அழிக்குமென்றார்;
அல்லற்பட் டழுகின்றார்; அழிப்பதாய்த் தெரியவில்லை.
வள்ளுவம் உள்வீட்டில் வந்தமர்ந்துச் விட்டதெனச்
சொல்லி மகிழும் துணிவு நமக்குண்டா?
இல்வாழ்க்கை உள்வீட்டில் வள்ளுவர் உள்ளாரா?
இல்வாழும் இருவருமே வள்ளுவர்சொல் ஏற்பவரா?
வாழ்க்கைத் துணைபோற்றும் ஆண்மக்கள் குறைந்துவிட்டார்;
வாழ்க்கையிற்பெண் அடிமையென மதிப்பவர் தானதிகம்.
தற்கொண்டான் பேணத் தலைவிக்கு நேரமில்லை;
தற்கொண்டாள் போற்றத் தலைவர்க்கு நெஞ்சமில்லை.
என்னஇல்லை வள்ளுவத்தில்? அதுகூறும் நெறிமுறையில்
என்னஉண்டு நம்நெஞ்சில்? எண்ணிப் பாருங்கள்;
வள்ளுவனை உலகம் உணர்ந்துசொன்ன பின்னர்தான்
உள்ளாரா இவரொருவர் எனப்போற்றத் துவங்கினோம்நாம்.
நெறிமுறையைப் பறக்கவிட்டு நெஞ்சை விலையாக்கிக்
குறிகொள்கை ஏலமிட்டுக் கோபுரமாய்ப் பலராவார்.
தேர்தல் பெரும்புயல்தான் பொங்கிவரும் இன்றேனும்
யாரெவர் என்றுணரும் அறிவுபெற வேண்டாமா?
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடலென்றார் அய்யனுமே;
எதனையும் எதனாலோ எவனோ முடிக்கின்றான்;
அதனை இனங்காணும் பகுத்துணர்வு வேண்டாமா?
வாசலில் நிற்பவரை வாழ்க்கைக்குள் வரவிடுங்கள்;
நாசமின்றி நாம்வாழ நல்லறிவு கொளுத்தட்டும்!
வள்ளுவம் ஒன்றைமட்டும் வாழ்வறமாய்க் கொள்ளுங்கள்!
உள்ளம் உயரும்; உள்ளபடி வாழ்வுயரும்.
       ( திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
             30-ஆம் ஆண்டு விழா—19-02-06 )     













Friday, November 14, 2014

ரோஜா மலரே!


                ரோஜா மலரே !
                    
                           ரோஜா மலரே மலர்வாயோ—அந்த
           ராஜா இலையெனத் தளர்வாயோ ?

சிரிப்பிலே அவனிதழ் நடமிருக்கும்—தூய
சிந்தனை ரேகையின் தடமிருக்கும்
நெருப்பிலே அவன்நிறம் சிரித்திருக்கும்—அந்த
நேசனே இலையென நினைப்பாயோ ?

கிண்கிணிச் சிரிப்பொலி நெஞ்சிருக்கும்—சின்னக்
குழந்தையைக் கனிவுடன் கொஞ்சிநிற்கும்
வெண்மதி மீன்களை அணைத்திருக்கும்—அந்த
வல்லவன் இலையென மடிவாயோ ?

இமயமும் குமரியும் எதிரொலிக்கும்—அந்த
இன்மகன் சாம்பலில் கதிர்விளைக்கும்
அமைதி என்றிடில் அவனிருக்கும்—அந்த
அன்பனே இலையென அழிவாயோ ?


  ( காங்கிரஸ் நூற்றாண்டு விழாவின்போது திரு.ப.சி. அவர்கள் விரும்பி
    வெளியிட்ட பாடல் தொகுதி ஒலிநாடாவில் இடம்பெற்ற என் பாடல் இது.
    இசை;-திரு. வீரமணி  பாடியவர்;--திருமதி. வித்யா ( உளுந்தூர்பேட்டை சண்முகம்

     மகள் எனக் கருதுகிறேன். ) 

Monday, October 13, 2014

ச.வ.கவியரங்கம்

             சந்தவசந்தக் கவியரங்கம்

         "எங்கே போய்க்கொண்டிருக்கின்றேன்?
   
        தலைமை;- யோகியார்

   அடடா! இவரொரு யோகியா? கவிதை
      அள்ளிச் சுவைக்கும் போகியரா?--இங்கே
   அடடா! இவர்தம் தலைமையில் கவிதை
      அளித்திட உள்ளம் குதிக்கிறதே!

   நல்ல கவிதைகள் கண்டால் உடனே
      நாட்டுவார் புகழ்ச்சி மண்டபத்தை;--அதில்
   வெல்லுங் கவிஞரைக் கூட்டியே அவர்தம்
      வித்தகம் காட்டி மகிழ்ந்திடுவார்.

   அவரை நினைத்துக் கவிதை வடித்தால்
      ஆயிர மாயது பெருகிடுமே!--அணைக்கும்
   அவர்கை நினைத்தால் மகிழ்வினில் திளைத்தே
      அணுவணு வாயுளம் உருகிடுமே!

   ஏதோ புன்கவி ஒன்றை அவர்முன்
      என்கவி யெனவே படைக்கின்றேன்;--அதில்
   தீதோ நன்றோ சிந்தனை யாய்ச்சில
      செய்திகள் நெய்தே கொடுக்கின்றேன்.
              --------   -------

   எங்கே வந்தேன்? எப்படி வந்தேன்?
      எங்கே போய்க்கொண் டிருக்கின்றேன்?--முன்னர்
   எங்கே இருந்தேன்? எப்படி இருந்தேன்?
      யாரெனக் கதனை உணர்த்திடுவார்?

   நானோர் கவிஞன் என்றன் ஆசை
      எங்கெங் கோவெனை இழுக்கிறது;--அந்த
   வானும் மீனும் வட்ட நிலாவும்
      வாவென் றெனையே அழைக்கிறது.

   கற்பனை வானில் காற்றுக் குதிரையில்
      கடுகி விண்ணைத் தொடுகின்றேன்;--மண்ணில்
   நிற்பன நடப்பன என்னை இழுத்தே
      நடப்பினைக் காட்ட விழுகின்றேன்.

   சுற்றி யிருப்பவை நல்லவை யா?எனைச்
      சூழ்ந்து சிரிப்பவை தூயவையா?--என்னை
   எற்றி உதைக்கிற இடர்கள் பிறர்தாம்
      இட்டவை யா?நான் தொட்டவையா?

   நெஞ்சில் தூய்மை நிரம்பி வழிய
      நாளும் வாழத் துடிக்கின்றேன்;--இங்கே
   வஞ்சமும் சூதும் வந்து மோதிட
      வாழ்க்கையில் கணமும் வெடிக்கின்றேன்.

   நல்லவர் நலிய அல்லவர் வாழும்
      நடப்பினைக் கண்டே திகைக்கின்றேன்;--மண்ணில்
   வல்லவ ரெல்லாம் நல்லவ ரில்லா
      வகைதிறம் கண்டே மலைக்கின்றேன்.

   சிரிப்பவர் தம்மை மனதுளே இருத்திச்
      சிறந்த நண்பராய் மதிக்கின்றேன்;--அவர்
   விரித்தொரு வலையில் எனையே வீழ்த்தி
      மீண்டிடா வகையெனை மிதிக்கின்றார்.

   எங்கே வந்தேன்? எங்கே வாழ்கிறேன்?
      எங்கே போய்க்கொண் டிருக்கின்றேன்?--வாழ்வில்
   எங்கே யிதைநான் நினைக்கிறேன்? ஏதோ
      எந்திரம் போலத் திரிகின்றேன்.

   விடிகிற வானம் தெரிகிற தாவெனக்
      கீழ்வான் பார்த்தே நிற்கின்றேன்;--அது
   தொடுகிற தூரம் போலத் தெரியினும்
      தொடமுடி யாமல் தவிக்கின்றேன்.

   எங்கே வாய்மை எங்கே தூய்மை
      எங்கே செம்மை தெரிகிறதோ--நான்
   அங்கே செல்லத் துடிக்கிறேன்; ஆனால்
      அதுவோ கண்ணில் தெரியவில்லை.

   போக முடிவில் அதுவரு மா?யிலை
      யோக நிறைவில் அதுவருமா?---இல்லை
   போகமும் யோகமும் கூடிய நெறியில்
      போயின் அதுதான் எனைத்தொடுமா?

   எங்கே போய்க்கொண் டிருக்கிறே னென்பதே
      இன்னும் எனக்குப் புரியவில்லை;--மண்ணில்
   இங்கே வாழ்கிறேன்; அதுநல் வாழ்வா?
      என்பதும் எனக்குத் தெரியவில்லை.


   

Friday, October 3, 2014

மகனே!

               சிவகாசி--14-08-88
        கவிதைப் பட்டிமன்றம்
     ( பெற்றோர் பால் கொண்ட பிரியத்தைக்
       கடைசிவரை காப்பாற்றுபவர் மகனா? மகளா? )
           "மகனே"--அணித்தலைமை
       நடுவர்:- இளங்கம்பன்

   எனக்கிரண்டு மக்கள்; ஆணொன்று; பெண்ணொன்று;
   எனக்காசை அதன்மேலும்; அரசாங்கம் விடவில்லை.

   கண்ணிரண்டைக் காப்பதுபோல் கண்மணிகள் காத்தேன்நான்;
   பின்னவர்க்கு வாழ்க்கை பின்னமிலா தமைத்துவிட்டேன்.

   என்வீட்டில் விளக்கேற்ற மருமகள் வந்துவிட்டாள்;
   இன்னொரு வீட்டிலேற்ற என்மகள் போய்விட்டாள்.

   கண்ணிரண் டென்றேனே இப்பொழுது தானெனக்குக்
   கண்ணிரண்டின் வேறுபாடு கணக்காகப் புரிகிறது.

   கண்ணைப்போற் காத்தாலும் கருத்தெல்லாம் கொடுத்தாலும்
   என்றைக்கும் மகளென்பாள் வேறில்லம் செல்பவள்தான்.

   எந்தமக ளுமிங்கேயே இருப்பதாகச் சொல்வதில்லை;
   அந்தமகள் சொன்னாலும் அதைநாம் ஏற்பதில்லை.

   நாற்றங்கால் நாற்று நல்விளைச்சல் தருதற்குப்
   பாத்திவிட்டு வயல்நாடிப் பண்போடு செல்கிறது;

   ஏழிசையும் தன்னுள் இருத்திவைத்த வீணையின்று
   ஏழிசையை மீட்டும் எழிற்கையை அடைகிறது;

   கடலில் பிறந்தமுத்து கட்டழகுக் கணவன்
   உடலில் தவழ்வதற்கே ஓடிப்போய்ச் சேர்கிறது.

   இதுதான் சிறப்பென் றெல்லோரும் போற்றுவதால்
   அதுதான் தொடர்கிறது; ஆருமதை வெறுப்பதில்லை.

   அப்படித்தான் என்மகளும் அவள்வீடு சென்றுவிட்டாள்;
   எப்படியெல் லாம்வளர்த்தேன்? என்றெண்ணி நான்பார்ப்பேன்.

   அவளுலகம் தனியுலகம்; அவளாட்சி திகழுலகம்;
   அவள்சுற்றம் இப்போது தனிச்சுற்றம்; புதுச்சுற்றம்.

   ஒருநாள் மகள்வந்தாள்; ஓடிப்போய் வரவேற்றுத்
   திருநாள் வந்ததுபோல் கொண்டாடித் தீர்த்தேன்நான்.

   மறுநாளே புறப்பட்டாள்; வாட்டமுடன் "மகளேநீ
   இருப்பாய் சிலநாட்கள்; என்னுள்ளம் மகிழுமென்றேன்.

   அதற்கவள் என்னசொன்னாள் அறிவீரா? "அப்பாநான்
   இதற்குமேல் முடியாது; என்வீட்டில் பலவேலை".

   என்றாள்; நானவளை ஏக்க முடன்பார்த்தேன்.
   அன்றிருந்த அவள்தானா? இல்லையிது ரசவாதம்.

   என்னுடன் உணவுண்ணும் நேரத்தும் அவள்கணவன்
   உண்பானா? மாட்டானா? என்றே கலங்குகிறாள்.

   வாய்திறந்தால் கணவன் புகழே வருகிறது;
   வாய்மூடி னாலுமவள் மனமதையே நினைக்கிறது.

   இந்த வேறுபாட்டில் நான்கவலை கொள்வதில்லை.
   அந்தவேற் றுமைதானே பெண்மையின் தனிச்சிறப்பு;

   செம்புலப் பெயல்நீர் போலக் கலந்துவிட்ட
   அன்புவாழ்க்கை கண்டுள்ளம் ஆனந்தம் அடைகிறது.

   ஆனாலும் அந்த ஆனந்தப் பண்ணுக்குள்
   போனமகள் பற்றியவோர் சோகராகம் இழைகிறது.

   தங்கத் தேர்போலத் தவழ்ந்து வருமழகில்
   அங்கம் பூரித்தேன்; தேர்வீதி வேறாச்சே!

   வெள்ளிக் கொலுசணிந்து விளையாடுங் கோலத்தில்
   உள்ளம் பறிகொடுத்தேன்; ஆடுகளம் வேறாச்சே!

   கைவீசச் சொல்லியவள் கைவிரல் அசைவினிலே
   மெய்வீசி மகிழ்ந்தேன்நான்; வீசுமிடம் வேறாச்சே!

   போன இடத்தில் பிரியத்தைக் காட்டுவதே
   போனவட்கும் நன்மை; பெற்றவர்க்கும் நற்பெருமை.

   மகன்கதை அப்படியா? விழுந்தாலும் எழுந்தாலும்
   மகன்கை யதுதானே வாழ்க்கையின் ஊன்றுகோல்.

   தன்பெற்றோர் தன்வீடு என்றுணரும் பற்றுள்ளம்
   என்றைக்கும் மாறாது; இனியஉற வதுதானே!

   துள்ளிக் குதித்தமகன் துடிப்பொடுங்கிப் பெருஞ்சுமையை
   உள்ளத்தில் சுமக்கும் ஓவியத்தைப் பார்க்கின்றேன்.

   மருமகளைப் புண்படுத்தி மகிழுவ தாயெண்ணி
   ஒருமகனைத் திருமகனை உருக்குலையச் செய்கின்றாள்;

   அவளுக்குப் பரிவாக அவனோர் வார்த்தைசொன்னால்
   இவளுக்குப் பெருநெருப்பு இதயத்தில் மூள்கிறது.

   சொல்லை நெருப்பாக்கிச் சூடு போடுகின்றாள்;
   நல்லமகன் அதைவாங்கி நடக்கிறான் மெதுவாக;

   தாயைப் பார்ப்பானா? தாரத்தைப் பார்ப்பானா?
   சேயைப் பிடித்தசனி சென்மச் சனியாச்சு.

   மகன்பாடு பெரும்பாடு; மத்தளம் படும்பாடு.
   மகன்பாவம் அத்தனையும் மனசுக்குள் சுமக்கின்றான்.

   எல்லாச் சுமைகளையும் தாங்கும் சுமைதாங்கி;
   எல்லா இடிகளையும் வாங்கும் இடிதாங்கி.

   அத்தனையும் தாங்கி அளவற்ற பிரியத்தை
   மொத்தமெனப் பெற்றோர்பால் காட்டுபவன் மகனேதான்.

   தன்னை நம்பிவந்த தளிருக்கும் வாழ்வுவேண்டும்;
   அன்னை குரலுக்கும் ஆறுதல் தரவேண்டும்;

   ஒருகயிறு இருபுறமும் முறுக்கப் படுகிறது;
   முறுக்கு பெரிதானால் கயிறறுந்து போகாதா?

   என்றைக்கும் பெற்றோர்பால் கொண்ட பிரியத்தைக்
   குன்றாமல் காப்பவன் குடும்பத்து மகனேதான்.

   பிறந்தமண்ணில் காலூன்றிப் பெரும்பிரியம் காட்டுபவன்
   பிறந்த மகன்தான்;  போன மகளில்லை

   தாய்க்கும் மனைவிக்கும் தந்தைக்கும் தன்னுடைய
   சேய்க்கும் பிரியத்தைத் தினம்செலுத்து கிறானவன்தான்.

   மகன்கொண்ட பிரியமென்றும் மாறாது; மாறாது.
   மகனவன் மாறிவிட்டால் மகனில்லை; தந்தையில்லை.

   என்றுசொல்லி வாதத்தை இங்குவைத்து எல்லோர்க்கும்
   நன்றிசொல்லி முடிக்கின்றேன். நன்றி; வணக்கம்.

   


Monday, September 29, 2014

பாரதியின் புதிய அறம்

              பாரதியின் புதிய அறம்

        ( பாரதி கலைக் கழகம்-56ஆம் ஆண்டு விழா-23-12-07 )
                கவிதைப் பட்டி மன்றம்
          பொருள்;- பாரதிக்குப் பெரும்புகழ் சேர்ப்பது: "புதிய அறமா?
                   பாட்டுத் திறமா?
          நடுவர்;--டாக்டர் வ.வே.சு.
   நடுவர் அவர்களே!
 
   இன்றைக்கு எனக்கோர் உண்மைதெரிஞ் சாகணும்!

   பாட்டுத் திறமிருந்தால் தானே பாவலன்;பின்
   பாட்டுத் திறத்தையேன் அவனிடம் தேடுவது?

   சமுதாயத் தொளிசேர்க்கப் புதிய அறச்சுடர்
   அமைந்துளதா எனப்பார்த்தல் தானே நல்லாய்வு.

   பாரதிக் கதிர்வீச்சுப் பரவாத இடமில்லை;
   பாரதி ஒளிச்சுடர் புகாத இடமில்லை.

   பலதிசையும் சுடர்வீசிப் பரிமளிக்கும் ஒருகதிரை
   அளவாகச் சிமிழுக்குள் அடைக்க நினைக்கலாமா?

   இதழ்தடவி மலர்விக்கும் இனியதொரு தென்றலினைப்
   பதமாக்கிப் பெட்டிக்குள் பதுக்க முயலலாமா?

   பாரதியை அறிவுலகே பார்த்து வியக்குதெனில்
   பாரதியின் பாட்டுத் திறம்மட்டு மேபார்த்தா?

   பாட்டிலவன் கொட்டிவைத்த பாச்சுவை யெனும்தேறற்
   சாற்றைப் பருகிக் கிறுக்காகார் யாரிங்கே?

   அதனால் மட்டுமா அறிவுலகம் போற்றிசெயும்?
   எதனால்? எதனால்? எண்ணில் பெருவியப்பே!

   கற்பனை வானேறிக் கதிரளந்து பார்க்குமொரு
   கற்பனைச் சிறுகவிஞ னாஇந்தப் பாரதி?

   மண்ணுக்கு விடுதலை வந்துவிட்டாற் போதுமா?
   புண்ணான சீர்கேடு மண்ணாக வேண்டாமா?

   அறமென்ற பேரில் எத்தனை சீர்கேடு?
   அறமென்னும் பழமையைப் புதிப்பிக்க வேண்டாமா?

   அதைத்தான் செய்தான் அருமைப் பெருங்கவிஞன்;
   எதைச்செய் தாலுமதை மண்ணுக் காய்ச்செய்தான்.

   பாட்டுத் திறம்நமக்குப் புதுச்சுவைகள் ஊட்டலாம்;
   நாட்டு நலத்திற்காய்க் கவிநடக்க வேண்டாமா?

   கற்பனைச் சிறகாலே வானளந்து பார்க்கலாம்;
   அற்பமன நோய்தீர்க்க அறம்புதிதாய் வேண்டாமா?

   வாழ்வுச் சுவைகண்டோர் கவிச்சுவையில் திளைக்கலாம்;
   வாழ்வில் நையுமுயிர் ஊண்சுவைக்க வேண்டாமா?

   பூட்டிவைத்த பெண்கூண்டு பொடிபடவே வேண்டாமா?
   கூட்டாகப் பெண்ணினந்தான் கோலோச்ச வேண்டாமா?

   அதற்கறம் சொன்னதால்தான் பாரதியைப் போற்றுகிறோம்;
   எதற்காக வுமவனைக் கூண்டுக்குள் அடைக்கலாமா?

   புதிய சந்தங்கள்; புதிய சுவைக்கூட்டு;
   புதிய வடிவங்கள்; புத்தம் புதுநயங்கள்;

   இவைமட்டு மாகவிதை மழையில் விழுந்தன?
   அவைகளுடன் புதிய அறங்களைப் பொழிந்தானே

   அதுதானே அவனைப் புகழுச்சி ஏற்றியது!
   அதுதானே தாசனின் அடிமனத்திற் பதிந்தது;

   "புதிய அறம்பாட வந்த அறிஞனெனப்
   புதுமையாய்ப் பாடவைத்த தந்த அறந்தானே!

   அறம்--1
   "இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்
    கொப்பில்லை மாதர்; ஒருவன்தன் தாரத்தை

   விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்;
   முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை"

   பழைய அறமிது; பாஞ்சாலிக் கவைதன்னில்
   அழகுற வீட்டுமன் அளித்த விளக்கமிது.

   புதிய அறமிங்கே நெருப்போடு வருகிறது.
       "இதுபொ றுப்பதில்லை--தம்பி!
           எரிதழல் கொண்டுவா!
        கதிரை வைத்திழந்தான்--அண்ணன்
           கையை எரித்திடுவோம்!"
   மூத்தவன் என்ற மரியாதை அறமும்
   சேர்த்தெரிக்கப் படுகிறது புதிய அறநெருப்பால்.

   அறம்--2
   பெண்விடு தலைக்கெனப் பத்துக் கட்டளைகள்
   அன்றைய மலைப்பொழிவாய் அழுத்தமுடன் வருகிறது;

   புதிய அறமங்கே பூத்துப் பொலிகிறது;
   புதுமைப் பெண்ணைநாம் பாட்டிலே காண்கிறோம்.

   நிமிராது குனிந்ததலை; நெளிகோணப் பார்வைபோய்
   நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை;

   நிலத்தினில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன்
   கலகலப்பாய்ப் புதியஅறம் பெண்ணாகி வருகிறது.
 
   அறம்--3
   அன்றெழுதி வைத்ததை அழித்தெழுத முடியாது;
   இன்றைக் குணவில்லை என்றால் அவன்விதி.

   இதுதான் பழையஅறம்; பழகிய நீதி;
   இதோ பாரதியின் புதியஅறப் போர்முரசம்.

   "இனியொரு விதிசெய்வோம்--அதை
      எந்த நாளும் காப்போம்!
   தனியொருவனுக் குணவில்லை--எனில்
      சகத்தினை அழித்திடுவோம்!"

   பழமை பழமையென்ற பாவனையால் ஏழைமக்கள்
   அழுதுநையச் செய்யும் அறந்தூக்கி எறிந்திட்டான்;

   நெஞ்சம் துணிந்தவரே நிமிர்ந்துகையை உயர்த்திட்டால்
   பஞ்சம் பறந்தோடும் எனப்புது அறம்சொன்னான்.

   பிறர்பங்கைத் திருடுதல் எனச்சொன்ன தொடரிலே
   உறுதியுடன் மார்க்சின் கொள்கையை விளக்கிவிட்டான்.

   இப்போதைக் கிதுபோதும்; இணையில்லாப் பெருங்கவியின்
   தப்பாத பெரும்புகழைப் புதியஅற மேகொடுக்கும்.

   இனியென்ன நான்சொல்ல? கவிஞனுக்கு நாம்செய்யும்
   பணியவனின் பரிமாணம் உணர்ந்து உணர்த்தல்தான்.

   பாட்டுத் திறமவன்றன் பரிமாணத் தொருகூறு;
   காட்டும் புதியஅறம் பரிமாணச் சுடர்வீச்சு.

   மாந்தரை நெறிப்படுத்த, மனங்களைச் சரிப்படுத்த
   ஏந்தல்கள் தந்தவைதாம் இங்குள்ள அறங்களெல்லாம்;

   வளர்ந்தோர்க்குப் பழையசட்டை பொருந்தா ததைப்போல
   மலர்ந்துநிற்கும் மன்பதைக்குப் புதியஅறம் இவன்தந்தான்.

   அதுதானே சமுதாயக் கவிஞன் முதற்கடமை!
   அதைச்செய்த திறம்பற்றி அவனைநாம் போற்றிடுவோம்.

   பாட்டுத் திறமென்னும் கூட்டுக்குள் அடைக்காமல்
   நாட்டுக் கறம்சொன்ன நல்லிதயம் போற்றிசெய்வோம்.

   என்று நான்முடிப்பேன்; தீர்ப்பெனக்குச் சாதகமாய்
   நன்று வருமென்றே நம்பி  அமர்கின்றேன்.


 
 



     

Tuesday, August 12, 2014

என்னுரை

                                               என்னுரை--கனல் நெஞ்சம்

            கவிஞன் உள்ளத்தில் ஏதோ ஒன்று எப்படியோ பதிவாகிறது. சில நேரங்களில் உடனே அது கவிதையாகிறது. பல நேரங்களில், பதிவானவையெல்லாம் உள்ளேயே பதுங்கிப் பொதிந்து கிடக்கின்றன.
      சாம்பலுக்குள் பொதிந்து கிடக்கும் கனல் துண்டுகளைப் போல அவை பதுங்கிக் கிடக்கின்றன
      .பதுங்கியிருக்கும் அப் பதிவுகள் வெளியுலகப் பாதிப்பின் ஏதோவோர் பொறிபட்டுச் சுடர்விட்டு நெருப்பாகிக் கவிதையென வெளி வருகின்றன.
       அக் கவிதைகளின் சுடர்வீச்சுச் சிலரைப் பெரிதும் பாதிக்கின்றது.
        பாதிக்க வேண்டுமென்பதே கவிஞனின் நோக்கம்.
        ஆனால் அந்தப் பாதிப்புத் தாக்கத்தின் விளைவாகத் தீய எண்ணங்கள் கவிதைச் சுடரில் வெந்து பொசுங்கித் தூய உணர்வுகள் தோன்றி விடுகின்றனவா? என்பது விடைகிடைக்கா ஒரு வினாவாகிறது.
         மாறாகக் கவிஞனே தாக்கப் படுவதும், புறக்கணிக்கப் படுவதும் நிகழ்கின்றன.
          கவிஞனின் தாக்கத்தால் எப்படித் தீயோர் மாறுவதில்லையோ, அப்படியே அவர்தம் தாக்கத்தால் கவிஞனும் மாறுவதில்லை.
           கவிஞனின் நெஞ்சக் கனல் கவிதைச் சுடரைத் துப்பிக் கொண்டே உள்ளது.
           மருத்துவனிடம் ‘ஏன் உங்கட்கு நோய்கள் மட்டுமே தென்படுகின்றன?’ என்று எப்படிக் கேட்க முடியாதோ, அப்படியே சமுதாயச் செப்பம் வேண்டிப் பாடும் கவிஞனிடம் ,”ஏன் உங்கட்குச் சமுதாயக் குறைகளே தென்படுகின்றன?” எனக் கேட்க முடியாது.
             தீர்வு காணும் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத கவிஞனால் குறைகளைச், சமுதாய நோய்களைச் சுட்டிக் காட்டவே முடிகிறது.
           நோயைக் குணமாக்கிச், சமுதாயம் சீர்ப்படுத்துவது, ஆட்சியிலுள்ளோர்க்கும், அவரை அமர்த்திய மக்கட்கும் பொறுப்பாகிறது. இருவரும் உணர்ந்து செயல்பட்டால் சமுதாயம் செப்பமுறும் என்பதில் ஐயமில்லை.
            இத்தகைய எண்ணங்களின் வெளிப்பாடே என் கவிதைகள்.
            ஆகவே தான், இறை நம்பிக்கையுடைய நான் இறைவனைப் பாடும்போது கூடச் சமுதாய நோய்கள் சுட்டப் படுகின்றன.
             என்ன செய்ய?
              நான் நானாக இருப்பதை இறைவன் முன்னிலையிலும் என்னால் தவிர்க்க இயலவில்லை.
              அந்த ‘ நான்’ ஒழிந்து நன்னிலை பெற இறையருள் கிடைக்கட்டும்.
              இந்த ‘நான்’ ஒழிவது நல்லது தானா?
              இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் 1960 முதல் இன்று வரை பாடியவை.
              அவைகளில் பக்குவம், பக்குவமின்மை இரண்டும் கலந்து வரலாம்.
               படித்துப் பாருங்கள். பாராட்டு, திட்டு- ஏதேனும் ஒன்றைத் தாருங்கள்.
                                            தங்களன்புள்ள
                                              சவகர்லால்

              ( என்னுரை—நெஞ்சக்கனல்-2009 )

Friday, June 27, 2014

முருகா! வருக!

          முருகா! வருக!

அழகே வருக! தெவிட்டாத
   அமுதே! வருக! கொஞ்சுமிளங்
குழகா! வருக! மயிலாடுங்
   குன்றே! வருக! என்றைக்கும்
இளையாய்! வருக! உள்ளத்தில்
   இனிப்பாய்! வருக! குன்றாடுங்
கலையே! வருக! நெஞ்சாடுங்
   கவினே! வருக! வருகவே!

நல்லாய்! வருக! எங்களுளம்
   நடப்பாய்! வருக! எம்நாவிற்
சொல்லா யினிக்கும் மெய்ஞ்ஞானச்
   சுடரே! வருக! ஈடெங்கும்
இல்லாய்! வருக! பூங்காற்றின்
   இனியாய்! வருக! என்றைக்கும்
நல்லா ருள்ளந் தனில்மகிழ்வாய்
   நடமே புரிவாய்! வருகவே!

நெஞ்சில் பூக்கும் நறுமலரே!
   நினைப்பில் மணக்கும் புதுமணமே!
அஞ்சு மடக்கும் அடியார்கள்
   அகத்தில் நிறையும் பெருங்கயமே!
கெஞ்சி நிற்பார் தமையணைப்பாய்!
   கருணை பொழிவாய்! வருகவே!
கொஞ்சுங் கிள்ளை யுடன்மருவுங்
   கோவே! வருக! வருகவே! 

Tuesday, June 24, 2014

சண்முகன் வருகை

           சண்முகன் வருகை

சண்முகாஉன் மைந்தன்நான் உன்பணிகள் தமையேற்றுப்
         பணிசெய்ய முந்திநின்றால்
   சைத்தானின் மைந்தனொரு தாக்கிலெனை எற்றுகிறான்;
         தலைகீழாய் விழுகின்றேன்;
என்மனத்தி லுனையன்றி எப்பொருட்கு மிடமின்றி
         இவ்வுலகில் வாழுகின்றேன்;
   அன்பனெனைத் துன்பத்தில் அலைக்கழிய விட்டுவேறு
         யாருக்குத் துணைநிற்பாய்?
வன்மத்தை வஞ்சகத்தை ஆயுதமாய்க் கையேந்தி
          நல்லவரை அழிப்பவர்கள்
   வாய்குழறிக் கையுதறிக் காலுதறி மண்வீழ்ந்து
          மறுகியழ வேண்டாமா?
இன்முகத்து வள்ளியினை இறங்கிவந்து மணங்கொண்ட
          இனியவனே! வருகவேநீ!
   எழில்குன்றக் குடியதனில் இலங்குமயில் மலைமீதில்
          இருப்பவனே! வருகவேநீ!

வஞ்சகந்தான் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடிநல்லோர்
            வாழ்க்கையைச் சிதைத்துநிற்கும்;
    வாய்முழுதும் பல்லாகிச் சூழ்ச்சியிங்கே நல்லவரை
             வகையாகக் குதறிநிற்கும்;
கொஞ்சமேனும் வெற்றியினைச் சத்தியங்கள் காண்பதில்லை;
             குப்புறவே வீழ்ந்திருக்கும்;
     குவலயத்தில் சத்தியத்தை முருகாநீ கைவிட்டால்
              காசினியே அழிந்திடாதா?
கிஞ்சித்தும் தயங்காதே! கய்வேலை நிமிர்த்திவிடு! 
              கயவரினை அழிக்கஏவு!
      கண்மூடித் திறப்பதற்குள் கயமையெங்கும் அழியட்டும்;         
              கண்களெல்லாம் சிரித்திடட்டும்.
கொஞ்சுமிள வஞ்சியினை முருகாகி மணந்தவனே!
              கோலமுடன் வருகவேநீ!
      கொள்ளையெழில் தவழ்குன்றக் குடியதனில் வாழ்சேவற்
              கொடியவனே! வருகவேநீ!

உன்னுடைய அடியவர்கள் உள்ளத்திற் கோழையாகி
                ஒடுங்கியிங்கே சுருண்டுவிட்டோம்;
       உண்மையிலே கொடுமைகள் கண்ணுக்குத் தெரிந்தாலும்
                 ஒழிப்பதில்லை மயங்கிவிட்டோம்;
என்னவகைக் காரணமோ என்றனுக்குப் புரியவில்லை
                 இழந்துவிட்டோம் தைரியத்தை;
       இருகண்கள் கொடுமையினைக் கண்டாலும் எதிர்ப்பதில்லை;
                 மனிதராய்ப் பிறந்துவிட்டோம்;
மன்னவனே! அழகான முருகாகி வந்தவனே!
                 மக்களைநீ விட்டுவிட்டால்
        மண்மீதில் வஞ்சகரே தலையைவிரித் தாடுவர்பின்
                 நல்லவரே வாழமாட்டார்;
கண்ணனைய வள்ளியினைக் கானகத்தில் கைப்பிடித்த
                 காளையே வருகவேநீ!
         கலையழகு நிலவுகுன்றக் குடியதனில் நிலவுகின்ற
                  கட்டழகே! வருகவேநீ!

ஆசையொடு சபலங்கள் அன்றாடம் எம்மனதை
                 ஆட்டிவாழ்வை அலைக்கழிக்கும்;
         ஆடுகிற பம்பரமாய் ஆசைக்க யிற்றிலெங்கள்
                  அகமெல்லாம் ஆடிநிற்கும்;
பேசுகிற பேச்சிலெலாம் பொய்மையதே கலந்திருக்கும்
                  பண்பதுவோ தொலைந்திருக்கும்;
          பக்குவமில் லாமனமோ பாரெல்லாம் பறந்துவரும்
                   பதவிகளுக் கேங்கிநிற்கும்;
வீசுகிற காற்றெல்லாம் விடக்காற்றாய் வீசயெங்கள்
                    மேனியதில் நடுநடுங்கும்;
           விளையாடுங் கொடுமையினை வேரோடு கருவறுக்க
                     வேலவனே! வேலெடுப்பாய்!
பாசமிகு பெண்ணிரண்டைப் பக்கத்தி லணைத்துவரும்
                     பண்புமலை! வருகவேநீ
            பரிவுமிகு குடியதனில் பாங்காக அமர்ந்துள்ள
                      பொன்மலையே! வருகவேநீ!!

நல்லவர்கள் யாரென்று தெரியவில்லை; இந்நாட்டு
                     நடப்பெனக்குப் புரியவில்லை;
           நடிப்பவர்க ளேகுறுக்கும் நெடுக்குமெனத் திரிவதனால்
                     நிசமுகங்கள் தோணவில்லை;
வெல்லமென மொழிபவர்கள் நெஞ்சுக்குள் வஞ்சமன்றி
                    வேறுண்மை காணவில்லை;
            விளையாடுங் களமெதுபின் வினையாகுங் களமெதென்ற
                    வேறுபாடு புரியவில்லை;;
கள்ளமதை மூலதன மெனவைப்போர் ஊதியத்தின்
                    கணக்குகளோ குறையவில்லை;
            கண்மூடிப் பொய்சொல்வோர் விண்மூடும் மாளிகைகள்
                    கட்டுவதில் குறைச்சலில்லை.
புள்ளிமயில் ஊர்பவனே! புரியவைக்க வேவிரைந்து
                     புயலாகி வருகவேநீ!
            புகழோங்கு குன்றத்தில் பொலிவோங்க விளங்குமிளம்
                     புதுவடிவே! வருகவேநீ!

வேதனைகள் உன்னடியார் தமக்குத்தான் என்றிட்டால்
                    விளைநலம்பின் யாருக்கோ?
             வஞ்சகங்கள் சத்தியத்தை வென்றிட்டால் சண்முகனே!
                     வேல்கையில் பின்னெதற்கோ?
நாதியின்றி யுனைமட்டும் நம்பிடுவோர்க் கிடர்வந்து
                     நலிவுறுத்தல் என்னநீதி?
             நல்லமனம் உள்ளவர்கள் நைவதிலும் அல்லவர்கள்
                     நிமிர்வதிலும் நியாயமென்ன?
மீதியின்றித் தீமைகளை வேரறுக்க வில்லையெனில்
                   வீரவேலுக் கதுவழகா?
             வருந்துகிற துயர்நீக்க விரைந்துவர வில்லையெனில்
                    மயிலுக்கு மதுவழகா?
மோதிவரும் இடர்நொறுக்க மின்னுகிற வேலோடு
                   மயிலேறி வருகவேநீ!
             முந்துகின்ற புகழ்குன்றக் குடியதனில் வளர்திருவே!
                    முருகவேளே! வருகவேநீ! 

குள்ளநரி பலகூடித் திட்டங்கள் தீட்டியிங்கே
                 கொடுமைகளைப் படைத்துநிற்கும்;
            கொள்ளைகள் நடத்திப்பின் பங்கீடு செய்துமனக்
                 களிப்பதனில் மிதந்துநிற்கும்;
பள்ளத்தில் நல்லவர்கள் படித்தவர்கள் புதைபட்டுப்
                 பாவமெனக் கிடப்பதுவும்
            பண்பாட்டைப் புதைத்தவர்கள் பலபாட்டி லுயர்வதுவும்
                 பலபேர்கள் போற்றுவதும் 
உள்ளத்தைக் குடைகிறதே! நியாயமா? என்றுன்னை
                 ஒருவார்த்தை கேட்கிறேன்நான்;
            உண்மையைநீ சொல்லிவிடு! நல்லவர்கள் போவதற்காம்
                  உலகத்தைக் காட்டுவாய்நீ!
புள்ளிமயில் தோகைவிரித் தாடுகின்ற மயிலாடு
                  பாறையென வருகவேநீ!
            வளர்குன்றக் குடியிலுயர் மலைமீது சிரிக்கின்ற
                  வேலவனே! வருகவேநீ!

அடியார்கள் துடிப்பதுவும் அருளாளர் நொடிப்பதுவும்
                  அழகல்ல வேல்முருகா!
            அன்றாடக் கணக்கெடுப்பில் நின்றாடி மகிழவேண்டும்
                   அகந்தூய்மை கொண்டவர்கள்;
செடியாய வல்வினைகள் தீர்க்குமொரு வேலுக்குச்
                   சிறுவினைகள் பொருட்டலவே!
             சிங்கார முருகனே!உன் மங்காத புகழடியார்
                    சிறுதுன்புங் காணலாமா?
விடியாத பொழுதுகளுன் னடியார்க்கு வரலாமா?
                    வினைத்தொடர்பு தொடரலாமா?
             வேல்தாங்கும் வேலவாஉன் னடிதாங்கும் அடியார்தம்
                     வேதனைகள் தீர்த்தருள்வாய்!
துடிப்பாக மயில்மீது தோன்றுமிளஞ் சூரியனே!
                    சுந்தரனே! வருகவேநீ!
              தோன்றுபுகழ்க் குடிதன்னில் தோற்றமிகு மலையமர்ந்த
                    தூயவனே! வருகவேநீ!
            
                                    குன்றக்குடி--30-05-88   
                 


          
                          
 


   













                 

Tuesday, June 17, 2014

அச்சப்பத்து

               அச்சப் பத்து

பல்லினில் விடத்தைக் கொண்ட
   பாம்பினுக் கஞ்சேன்; என்றும்
அல்லினில் ஆட்டம் போடும்
   அலகைகட் கஞ்சேன்; சொல்லும்
சொல்லினில் தேனும், செய்யும்
   செயலினில் நஞ்சுங் கொண்டே
நல்லவர் போல்ந டிக்கும்
   நட்பினுக் கஞ்சு கின்றேன்.      1

கடித்திடப் பாய்ந்து தாவும்
   கடுவனுக் கஞ்சேன்; வானில்
இடித்திடும் இடியென் மேலே
   இறங்கினும் அஞ்சேன்; நன்கு
பொடித்திடப் பாவந் தன்னைப்
   புலம்பிடு போதும் அங்கே
நடித்திடும் மனித னுக்கு
   நாளுமே அஞ்சு கின்றேன்.      2

தொட்டதும் கொட்டும் தேளின்
   கொடுக்கினை அஞ்சேன்; ஏதும்
பட்டதும் படமெ டுக்கும்
   பாம்பினை அஞ்சேன்; தன்னைத்
தொட்டதைச் சுட்டுத் தீய்க்கும்
   தீயினை அஞ்சேன்; என்னைக்
கட்டியே அணைப்பார் வஞ்சக்
   கரவினை அஞ்சு கின்றேன்.     3

தும்பினை அறுத்துத் தள்ளித்
   துள்ளியே திரியுங் காளைக்
கொம்பினை அஞ்சேன்; கொம்பின்
   கூரினை அஞ்சேன்; உள்ளம்
நம்பியே நான ணைத்த
   நல்லவர் எய்யும் வெய்ய
அம்பினுக் கஞ்சி நெஞ்சம்
  அழுதிட வெம்பு கின்றேன்.        4

எட்டியே உதைத்துத் தள்ளும்
   இரண்டுகால் அஞ்சேன்; வாழ்வில்
மட்டிலா இடர்கள் ஈயும்
   மாற்றலர்க் கஞ்சேன்; என்னைக்
கட்டியே பிணைத்து வாழ்ந்து
   கணக்கிலா இன்பந் தன்னைக்
கொட்டியே தந்தாள் சின்னக்
   கோபமே அஞ்சு கின்றேன்.       5

காற்றுடை வேக மஞ்சேன்;
   கடும்புயல் வெள்ள மஞ்சேன்;
தூற்றிடு பகைவ ரஞ்சேன்;
   தொடர்ந்திடு பழியை யஞ்சேன்;
ஏற்றெனை நண்ப ராக
   இழைந்தவர் எனக்குப் பின்னால்
தூற்றிடு பொல்லாச் சொல்லின்
   சூட்டினை அஞ்சுகி ன்றேன்.       6

வறுமையின் கொடுமை யஞ்சேன்;
   வாட்டிடு துன்ப மஞ்சேன்;
வெறுமையின் நிலைமை யஞ்சேன்;
   விரட்டிடு பேய்க ளஞ்சேன்;
அருமையாய்ப் புகழும் நண்பர்
   அகத்தினில் உள்ள வஞ்சச்
சிறுமையைக் கண்டே நாளும்
   சிந்தையா லஞ்சு கின்றேன்.       7

மட்டுவார் குழலு மஞ்சேன்;
   மயக்கிடும் விழிக ளஞ்சேன்;
கட்டியே இழுக்குங் காந்தக்
   கயல்விழிப் பாய்ச்ச லஞ்சேன்;
கட்டிய மனையாள் வாயின்
   கடையிதழ் உதிரு கின்ற
கட்டிலா இனிய சொல்லின்
   குளுமையை அஞ்சு கின்றேன்.     8

இறைவனே அளிக்கு மந்த
   இன்னலின் வரிசை யஞ்சேன்;
கறையணி கண்டன் கோபக்
   கனலினுக் கஞ்சேன்; அந்த
இறைவனின் முன்னால் நின்றே
   இருகைகள் கூப்பும் போதும்
கறையுள நெஞ்சங் கண்டே
   கணமெலாம் அஞ்சு கின்றேன்.     9

அஞ்சுதல் வேண்டு மென்பேன்;
   அரற்றுதல் வேண்டு மென்பேன்;
கெஞ்சுதல் வேண்டு மென்பேன்;
   கோபமும் வேண்டு மென்பேன்;
அஞ்சிட வேண்டு தற்கே
   அஞ்சலும், தேவை யின்றி
அஞ்சிடாத் துணிவும் என்னுள்
   ஆக்கிட வேண்டு கின்றேன்..        10


Thursday, May 29, 2014

இன்னும் எத்தனை

           இன்னும் எத்தனை?

இன்னும் எத்தனை எத்தனை காலம்
   என்னுயிர் நீளும் தெரியவில்லை;
இன்னும் எத்தனை எத்தனை புயல்கள்
   என்னுளம் தாக்கும் புரியவில்லை;
மின்னும் மின்னல் முழங்கும் இடிகள்
   மோதிட மோதிட வாழுகிறேன்;
கண்ணும் செவியும் உடலும் வலிவும்
   கரைவதை நாளும் காணுகிறேன்.

எத்தனை நட்புகள்! எத்தனை பிரிவுகள்!
   எத்தனை அலைகள் வாழ்க்கையிலே!
எத்தனை வஞ்சம் எத்தனை சூழ்ச்சி
   எத்தனை மோசம் உறவினிலே!
மெத்தென வந்து மெல்லென நுழைந்து
   மகிழ்வினைத் தந்த ஒருநட்பே
கொத்தெனத் துரோகம் இழைத்திடக் கண்டு
   குமுறிக் குமுறி அழுதுள்ளேன்.

அழுகையும் சிரிப்பும் கலந்ததே வாழ்க்கை
   அதனை நானும் உணர்கின்றேன்;
அழுதவன் சிரிப்பான்; சிரித்தவன் அழுவான்;
   அந்தச் சுழற்சி அவன்கையில்.
விழுந்தவன் எழுந்தால் மகிழ்வே; ஆனால்
   எழுந்தவன் விழுந்தால் என்செய்வோம்?
எழுகதிர் விழுவதும் விழுகதிர் எழுவதும்
   இயற்கை தருமொரு படிப்பினையே.

இப்படி வாழ்தல் எனமுடி வெடுத்தே
   இதுவரை அப்படி வாழ்கின்றேன்;
இப்படி வாழும் என்மேல் சேற்றை
   எறிபவர் சிலரைப் பார்க்கின்றேன்;
எப்படி இவரால் என்மேற் குற்றம்
   ஏற்றிட முடிகிற தெனத்திகைப்பேன்;
அப்படி அவர்மனம் கோண லடிக்க
   ஆனது ஏனெனக் கவல்கின்றேன்.

தெரிந்து தவறுகள் செய்யவும் மாட்டேன்;
   தீமையின் பக்கம் செலவுமாட்டேன்;
புரிந்தவ ரென்னைப் புரிந்தவ ரானார்;
   புரியா தவரும் புரிந்துகொள்வார்.
விரிந்த வாழ்க்கை திறந்த நூலாய்
   விளங்கிட வாழ்ந்தே மிகஉழன்றேன்
தெரிந்த தனைத்தும் நல்லவை யாகித்
   தெரிந்திட இறையை வேண்டுகின்றேன்

இன்னும் எத்தனை எத்தனை காலம்
   இந்த மண்தான் எனைத்தாங்கும்?
இன்னும் எத்தனை எத்தனை விடியல்
   இடர்கள் மோதிட விடிந்துவரும்?
இன்னும் எத்தனை எத்தனை சொந்தம்
   என்பாற் பற்றை மிகக்கொள்ளும்?
இன்னும் எத்தனை எத்தனை வானம்
   எனக்காய் விரிந்து வரவேற்கும்?.  .

Tuesday, May 6, 2014

மருந்து பிறிதில்லை

                               மருந்து பிறிதில்லை

   மாலை நேரம். பகல் முழுதும் கதிர்வீசிக் களைத்த
கதிரவன் மேனி இளைப்பாற மேற்றிசையில் இறங்கிக்
கொண்டிருந்தான்,
   மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் கன்றுகளை நினைத்துக்
கனைகுரலோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தன. பறவைகள்
கூட்டுக்கு விரைந்தன. மாலை நேரத்துக் கலகலப்பு எங்கும்
நிறைந்தது.
   அந்தக் கலகலப்பினூடே இன்னுமொரு கலகலப்பு. குயில்கள்
கூடி மிழற்றுவது போன்ற கூட்டுக் குரல்கள். யாழ் நரம்பைச்
சுண்டிவிட்டது போன்ற கிண்கிணிச் சிரிப்பு. இடையே திட்டுகள்.
கேலிப் பேச்சுகள்.
   பெண்கூட்டமொன்று பந்தாடிக் கொண்டிருந்தது. கைவிட்டுக்
கைமாறித் தாவியது பந்து. பெண்களின் பிடிப்பில் சிக்கியது;
அணைப்பில் நெருங்கியது; வீச்சில் பறந்தது.
   மலர்க் கூட்டத்தின் நடுவே செந்தாமரை தனித்து விளங்குவது
போல, நீர்ப்பறவைகளின் நடுவே அன்னமொன்று எடுப்பாகத்
தோன்றுவது போலத் தான்தான் தலைவி என்பதைத் தோற்றத்
தாலேயே காட்டி நின்றாள் அவள்.
   செல்லப் பெண் அவள். செல்வக் குடும்பம் அவளது. தந்தை
சீர்பெற்ற வாழ்வோடு தேர்பெற்று வாழ்பவர். தேரில் அவர் சென்று
வரும் காட்சி சிறப்புக்குரியது.
   தேர் இயங்குகின்ற அந்த மணல் முற்றத்தில்தான் இன்று
தோழியர் புடைசூழத் தோகை பந்தாடினாள்.
   தோழியர்க்கு நடை பயிற்றுவது போல நடந்தாள்; இசை
பயிற்றுவது போலப் பேசினாள். அசைவுகள் கற்பித்தாள்;
ஆட்டங்கள் சொல்லித் தந்தாள்.
   அத்தனை செயலையும் தூரத்தே நின்று பருகிக் கொண்டிருந்தன
இரு விழிகள். ஆடுகின்ற பந்தோடு அவன் உள்ளம் ஆடியது.
தலைவியின் கையில் பந்து தவழும் போதும், அவளணைப்பில்
அது கிடக்கும் போதும், 'ஐயோ அது நானாக இல்லையே'  என
ஏங்கியது அவன் நெஞ்சம்.
   ஏக்கப் பெருமூச்சோடு நடந்துபோன நிகழ்ச்சிகளை அசைபோட்டது
அவன் உள்ளம்.
   அவள் அவன் நெஞ்சிலே நிறைந்தவள்; நினைப்பிலே நடமாடும்
நேரிழை; அவள் பற்றிய நினைப்பே இனித்தது; கனவெல்லாம் அவளே;
காணும் பொருளெல்லாம் அவளே; அவளின்றி அவனில்லையெனத்
தனக்குள்ளே ஒரு முடிவை ஆக்கிக்கொண்டவன் அவன்;
   அவளின் ஒரு பார்வைக்காக ஏங்கினான்; பேச்சுக்காகத் தவித்தான்;
அவளுடைய உள்ளத்தில் தனக்கோர் இடமுண்டோ என அறியத்
துடித்தான்; ஏதோவோர் எண்ணம் ' அவள் உன்னவளே!' என்றது.
இயல்பாக எழுகின்ற ஐயம் ' அவள் என்னவள் தானா?' என்றது.
   என்ன செய்வான் அவன்? தலைவியோடு உடனாடித் திரிகின்ற
தோழியை அணுகினான். தன் நெஞ்சைத் திறந்து காட்டினான்; நெஞ்சில்
அவளே நிறைந்திருப்பதை உணர்த்தினான்; அவள்நெஞ்சில் தனக்கு
இடமுண்டா? என்பதை அறிந்து சொல்லச் சொன்னான். இடமில்லை
யென்றால் இடமுண்டாக்கி வழிகாட்டக் கெஞ்சினான்.
   தோழிக்குப் பெருமகிழ்ச்சி. தலைவிக்கேற்ற தலைவன் அவன்.
உருவும், திருவும், பருவமும் அனைத்தும் இணைந்த அழகான இணை
இது. அவள் உள்ளம் முடிபோட்டது. 'ஆனதைச் செய்வேன்' என வாக்
களித்தாள்.
   அடுத்து வரும்போது தலைவியின் உள்ளம் தலைவனை வெறுக்க
வில்லை எனக் கூறினாள்.
   போதுமே அது; வெறுப்பில்லையெனில் அடுத்த வளர்ச்சி விருப்புத்
தானே  என மகிழ்ந்தான் அவன். தனக்கென்று அவள் ஆகும் நாளை
ஆவலுடன் எதிர்நோக்கினான்
   வீட்டிலே இருப்புக் கொள்ளவில்லை.விரட்டியது நெஞ்சம்; விரைந்து
வந்தான் தலைவி தோன்றுமிடத்திற்கு.
   ஆட்டத்தைக் கண்டான்.
   அவள் தந்தையின் நெடுந்தேர் செல்லும் நிலவு போன்ற மணல்
முற்றம் அது.
   கோதை வரிப்பந்து கொண்டு நின்றாள். அவள் கூந்தல் மணத்தைக்
கொண்டுவந்து தந்தது தென்றல்.சந்தனக் கலவையின் சிந்தையள்ளும்
மணம் அவன் நெஞ்சைத் தடவியது. உயர்ந்த மலையில் விளைந்த
சிறந்த சந்தனத்தின் சேர்க்கை அது. தோழியர் கூந்தலில் உலர்ந்த
சந்தனக் கலவையின் தூள்கள் தோன்றின.
   தோழியர் மகிழும் வண்ணம் ஆடினாள் தலைவி.
   பார்த்துக் கொண்டிருந்த தலைவனின் நெஞ்சம் பதைத்தது. பார்வை
தன் பக்கமே திரும்பவில்லை என்பதை உணர்ந்தான். ஆனால் தான்
நிற்பதை அவள் அறிந்து கொண்டாள் என்பதில் அவனுக்கு ஐயமில்லை.
   ஏனிந்த நாடகம்?
   பரிவே இல்லாமல்- பார்வையைத் திருப்பாமல்- பந்தாடுகிறாளே!
   'ஏறிட்டுப் பார்க்காத அவளுக்காக நீ ஏன் ஏங்குகிறாய்?'- நெஞ்சம்
இடிக்கிறது.
   அவன் நெஞ்சிற்குக் கூறுகிறான்;
   " அருமை நெஞ்சமே! பரிவில்லாது செல்லுகின்ற ஒருத்தியின்
பார்வைக்காக நான் ஏங்குவது உனக்குப் பிடிக்கவில்லை. அவளன்புக்
காக இரங்கி நிற்பதை நீ வெறுக்கிறாய். காதலை வேண்டிக் கரைந்து
நிற்பதை நீ ஏற்கவில்லை.
   என்னருமை நெஞ்சே! ஒன்று கேள்;- எனக்கு இப்படி ஒரு நோயைத்
தந்தவள் அவள். இந்த நோய்க்கு வேறு மருந்தே இல்லை. நோய்தந்த
அவளே நோய்க்கு மருந்தாவாள். எனவே அவள் அருள் செய்யினும்
செய்யாவிடினும் இந்த நோய்தீர்க்கும் மருந்தாகிய அவளைப் பெறுதற்
காக இரந்து வழிபட்டு நிற்றலை வெறுக்காதே! "-என்று தன் நெஞ்சிற்குக்
கூறுகிறான் தலைவன்.
   " பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து," -என்ற குறட்கருத்து இங்கே பளிச்
சிடுகிறது.
   இந்தக் காட்சியைத் தரும் பாடல் இதோ!
   " கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
     சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
     வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
     புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
     பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
     நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
     பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
     அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து
     பின்னிலை முனியல்மா நெஞ்சே! என்னதூஉம்
     அருந்துயர் அவலந் தீர்க்கும்
     மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே!
                நற்றிணை--140- பூதங்கண்ணனார்

       ( கொண்டல்-கீழ்காற்று; குடக்கு ஏர்பு--மேற்கு மலையில்
         எழுந்து;  குழைத்த--தழையச்செய்த; சாந்தம்-சந்தனம்
         கூழை--கூந்தல்; பரிவிலாட்டி--பரிவில்லாதவள்
          பின்னிலை--வழிபட்டு நிற்றல் )
                         11-12- 1970
                         
   


.    

Wednesday, April 23, 2014

கவியரங்கம் --40

              கவியரங்கம்--40
          எனக்குப் பிடித்தது---பணிவு
           தலைவர்--புலவர் இராமமூர்த்தி

   பழகிய நாட்க ளெல்லாம்
      பசுமையாய் விரிந்தே நந்தம்
   அழகிய மேடை வீச்சை
      அந்தநாள் கவிதைப் பேச்சைக்
   கலகல எனவே பேசிக்
      களித்தஅக் காலப் போக்கை
   அழகுடன் விரித்தே என்றன்
      அகத்தினை நிறைத்து நிற்கும்.

   நண்பரின் தலைமை யேற்று
      நல்லதோர் அரங்கில் பாட
   அன்புடன் இசைந்தேன்; இந்த
      அருமையாம் தளத்தில் என்னை
   நண்புடன் இறுகக் கட்டி
      நெஞ்சினுள் நுழைந்த இந்த
   அன்புடைக் குழுமம் என்றும்
      அளவிலா மகிழ்வை ஈயும்.

   புலவராம் இராம மூர்த்தி
      பொழிந்திடும் கவிதை யிங்கே
   பலசுவை காட்டும்; வண்ணப்
      பாவகை நீட்டும்; அந்த
   நிலவினைத் தொட்டு மீளும்;
      நண்பரே! பணிவா யும்முன்
   சிலகவி படைப்பேன்; ஏதும்
      சுவையிலை யெனினுங் கொள்வீர்!

             பணிவு

   ஆயிரங் கதிர்க ளிந்த
      அவனியை அணைக்கும்; மற்றோர்
   ஆயிரங் கைகள் பூக்கள்
      அலர்ந்திடச் செய்யும்; இன்னும்
   ஆயிரம் வகையி லிங்கே
      அருமையா யுயிர்வ ளர்க்கும்;
   ஆயிரம் செய்து விட்டே
      அமைதியாய்க் கதிர்தான் வீழும்.

   நாற்றென இருந்த நன்செய்
      நற்பயிர் பசுமை யாகிக்
   கீற்றெலாம் மணிசு மந்து
      கதிர்களே முற்றும் போது
   வீற்றுயர் தலைதான் சற்றும்
      வீங்கிடா தழகா யங்கே
   ஏற்றிடு பணிவைப் பார்த்தே
      என்மனம் பாடங் கற்கும்.

   மண்ணுள மரங்கள் மற்றும்
      மலர்ந்துள பூக்க ளெல்லாம்
   மண்ணிலே பயன்கள் ஈய
      மகிழ்வுடன் நிமிர்ந்து யர்ந்து
   விண்ணினைப் பார்த்த பின்னர்
      விளைபயன் நல்குங் காலம்
   மண்ணினைப் பார்க்கும்; அந்த
      மாண்பினிற் பணிவு காண்போம்

   எத்துணை புகழ்வெ ளிச்சம்
      இங்கெனைத் தாக்கி னாலும்,
   எத்துணை பாராட் டுக்கள்
      இதயமே தூக்கி னாலும்
   எத்துணை பேர்கள் என்னை
      இனியநீ ராட்டி னாலும்
   எட்டுணைக் கனமு மென்றன்
      இதயமே ஏற்கா தென்றும்.

   செல்வமே என்னைச் சூழ்ந்து
      திளைத்திடச் செய்த போதும்
   கல்வியிற் சிறந்தோ ரென்னைக்
      கட்டியே புகழ்ந்த போதும்
   எல்லையில் புகழ்வெள் ளந்தான்
      எனையிழுத் தேகும் போதும்
   எள்முனை யளவும் கர்வம்
      என்சிரம் ஏற்கா துண்மை.

   பெரியவர் சிறியோ ரென்ற
      பேதமே கொள்ளேன்; நட்புக்
   குரியவ ரெல்லாம் இங்கே
      உயர்ந்தவ ரென்றே கொள்வேன்;
   வறியவன் ஏதுங் கல்லா
      மனிதனே யெனினும் என்னுள்
   உரியதோ ரிடம ளிப்பேன்;
      உளத்தினிற் பணிவே கொள்வேன்.

   கையொலி ஆர வாரம்;
      கட்டிய புகழ்மு ழக்கம்;
   கையினால் இழுத்தே உச்சி
      காட்டிடும் மனிதர் கூட்டம்;
   பையவே நுழைந்தென் நெஞ்சைப்
      பற்றிட இடங்கொ டேன்நான்.
   வையகம் வாழு மட்டும்
      பணிவுதான் அணியாய்க் கொள்வேன்.

   அடக்கமா யிருப்பின் நம்மை
      அடக்கமே செய்வ ரென்னும்
   துடிப்புடை நண்பர் சொற்கள்
      துவண்டிடச் செய்யா தென்னை;
   அடக்கமா யிருப்பேன்; மண்ணுள்
      அடக்கமா யாக மாட்டேன்;
   தொடக்கமும் முடிவும் எல்லாம்
      தொடர்ந்திடு பணிவொன் றேயாம்.

   மாவொடு பலவு மிங்கே
      மற்றுள கனிக ளெல்லாம்
   பூவுல கெல்லாம் சாய்ந்து
      பூமியைப் பார்க்கும் போது
   நாவுளே சொற்ப ழுத்த
      நற்றமிழ்க் கவிவல் லார்க்கு
   மேவிய பணிவு தோன்றின்
      மண்ணிலே விண்தோன் றாதா?
       .







Friday, April 11, 2014

குப்பைக்கோழிகள்

                      குப்பைக் கோழிகள்

நண்பன் நானெது செய்தாலும் - அதில்
   நாற்பது குறைகள் சொல்லிடுவான்;
என்றும் என்செயல் நலக்கூற்றை--அவன்
   இம்மி யளவும் காண்பதில்லை.

என்னவள் என்றன் செயல்களிலே--என்றும்
   எந்த நலமும் காண்பதில்லை;
அன்றும் இன்றும் என்றைக்கும்-- வாழ்வில்
   அவளிடித் துரைப்பவை குறைகளையே.

உறவு நெருக்கம் எல்லாமே - என்னை
   உரசிக் காண்பவை குறைகளையே.
தெரிபவை அவர்க்கே என்னிடத்தில்--உள்ள
   தவறு வழுக்கல் இவைகள்தாம்.

யாரிடம் குறைகள் இங்கில்லை?--வாழும்
   யாரெவர் குறையே இல்லாதார்?
யாரெவர் நிறைபண் பிருப்பிடமாம்--மண்ணில்
   அப்படி யிருப்பின் அவர்தெய்வம்.

குறைகள் நிறைகள் கலந்தவைதாம்--நம்முள்
   குலவும் மனித இனமெல்லாம்;
குறைகள் மிகுந்தால் கீழினமாம்--நிறைவே
   குறையா திருப்பின் தெய்வஇனம்.

என்னைப் பார்ப்பவர் எனைக்கிளறி--அங்கே
   எடுப்பவை யெல்லாம் குறைகளெனில்
மண்ணில் குப்பைப் புழுக்களையே--கிண்டி
   மகிழும் கோழிக் கவருறவா?

குப்பையைக் கிண்டும் கோழியிடம்--நல்ல
   கோமே தகமே கிடைத்தாலும்
அப்படி யேயதை உதைத்தெறியும்;--மண்ணில்
   அவைகளின் தேடல் புழுக்கள்தாம்.

அப்படிப் பழக்கம் மனிதர்க்கே--என்றும்
   அடிப்படைப் பண்பாய் ஆகலாமா?
குப்பைக் கோழி யாகாமல்--மற்றவர்
   குணங்கண் டவரைப் போற்றிடுவோம்.
                   01--10--2010