Friday, December 28, 2012

அறுமுகன் வருகை

                    அறுமுகன் வருகை

சிந்திக்கும் நெஞ்சத்துள் தித்திக்கத் தித்திக்கத்
   திகழ்கின்ற மலைக்கொழுந்தே!
 சிந்தனையி லுனையன்றிச் சிறக்கின்ற வேறுபொருள்
   தினமும்நான் உணர்வதில்லை;
நிந்திக்கும் பெருங்கூட்ட நெருக்கடியில் வாழ்கின்றேன்;
   நித்தமுமே வாடுகின்றேன்;
 நினைப்புக்கும் செயலுக்கும் யாதுமொரு தொடர்பில்லா
   நேயரையே கூடுகின்றேன்;
வந்திக்கும் நிறைபொருளா யிளையவனே! உனையேநான்
   வாழ்நாளில் தேடுகின்றேன்;
 வாடுகிற கணந்தோறும் மலருகிற உன்மேனி
   வடிவழகைப் பாடுகின்றேன்;
செந்தமிழின் பாட்டிலொரு சுவைக்கூட்டாய்த் திகழுகின்ற
   சேயவனே! வருகவேநீ!
 திகழ்குன்றக் குடிமலையில் சிறப்பாக விளையாடித்
   திரிகுமர! வருகவேநீ!

துன்பங்கள் கணந்தோறும் எனைவந்து தாக்கியேஎன்
   சிந்தையைக் கலக்கிநிற்கும்;
 தொலையாத இடர்பலவும் அலையாக வீசியெனைத்
   துரும்பாக அலைக்கழிக்கும்;
இன்பத்தின் நிழல்கூட எனைவந்து தொடுவதில்லை
   எனையேனோ புறக்கணிக்கும்;
 இதயத்தில் பலவான பொல்லாத பேய்க்கூட்டம்
   எப்போதும் ஆர்ப்பரிக்கும்;
கண்பாவச் செயல்காணும்; கைபாவச் செயல்செய்யும்;
   கால்பாவ வழிநடக்கும்;
 காதுகளும் பாவத்தின் குரல்கேட்டே மகிழ்ந்திருக்கும்;
   கடும்பாவம் எனைநடத்தும்;
மென்பாவை வள்ளிமயில் விளையாடு தோளழகா!
   முருகான வாவருக!
 முந்துகிற புகழ்கண்ட குன்றத்தின் மேலமர்ந்த
   முத்தான வாவருக!

நாள்தோறும் எனைநாடும் நண்பர்தம் கூட்டத்தில்
   நாடகமே காணுகின்றேன்;
 நெஞ்சிலொரு நினைப்பாகி நாவிலொரு சொல்லாகி
   நடக்கின்றார் நாணுகின்றேன்;
தோள்தழுவி உறவாடும் தோழனேஎன் பின்னிருந்து
   தொல்லைதர வாடுகின்றேன்;
 தூய்மையொடு வாய்மையின் தடங்கூடத் தெரியவில்லை
   தொலைதூரம் தேடுகின்றேன்;
நாள்பலவும் கழிகிறது; நெஞ்சமோஉள் அழுகிறது;
   நல்லகதி வேண்டுகின்றேன்;
 நாட்டிலது கிடைக்குமெனும் நம்பிக்கை எனக்கில்லை;
   நெஞ்சுறுதி தளருகின்றேன்;
வேல்தாங்கி வந்தென்றன் வேதனைகள் ஒழித்திடவே
   வேலவனே! வருகவேநீ!
 மயில்தாங்கி நடந்துவர வளைதாங்கு மயிலோடு
   மால்மருக னேவருகவே!

அறியாமை தனில்மூழ்கிக் கிடக்கின்றார் பாமரர்கள்;
   அவர்கள்தம் தலையிலேயே
 அருமையுடன் மிளகாயை அரைக்கின்றார்; தலைகொடுத்தோர்
   அகமகிழ்ந்து திளைக்கின்றார்;
தெரியாமல் கேட்கின்றேன்; தலையெரிச்சல் தெரியாத
   திறமென்ன திறமதுவோ!
 தெரிந்தாலும் சரியென்று கும்பிட்டுப் பணிசெய்யும்
   செயலென்ன செயலதுவோ!
அறிவுறுத்த முயல்பவரை அச்சுறுத்த முயல்கின்றார்;
   அடிப்பதற்கும் அஞ்சவில்லை;
 அறுமுகனே! சூரரினை அழிக்கவேநீ முனைந்துவந்தால்
   அடியவரே எதிர்ப்படுவார்;
புரியாத நல்லமனப் போக்குகளே புரிந்துசெயப்
   பொன்மயிலு டன்வருக!
 புகழேறு குடியதனில் மலையேறி நிற்கின்ற
   புண்ணியனே வருகவேநீ!

பொல்லாத மனமென்னைப் பாடாகப் படுத்திநாளும்
   போகாத இடம்செலுத்தும்;
 புரியாத அறிவென்னைப் பெருங்குழப்பந் தனிலாழ்த்திப்
   பொல்லாங்கில் மூழ்குவிக்கும்;
இல்லாத ஆசையெல்லாம் என்னென்ன வோஎழுந்தே
   என்னெஞ்சில் புயலெழுப்பும்;
 என்றைக்கும் நனவாகாக் கனவுகளே என்வாழ்வின்
   ஏக்கமென நிறைந்திருக்கும்;
செல்லாத நெறிசெலுத்தும் சபலங்கள் தேரேறித்
   திசையெல்லாம் ஓடிநிற்கும்;
 செய்வதொன்றும் புரியாமல் திசைவழிகள் தெரியாமல்
   திண்டாடி வீழ்ந்துநிற்பேன்;
கல்லாத எனக்குவழி காட்டிடவே மயிலேறிக்
   காற்றாக வருகவேநீ!
 கலைநிலவு குடியதனில் மலைநிலவி யுயர்ந்துள்ள
   கலைமணியே வருகவேநீ!

பொருள்செய்யும் வழியறியா திவ்வுலகில் நாள்தோறும்
   புண்பட்டு வாடுகின்றேன்;
 பொழுதொன்றும் பொருளின்றிப் போகாத தையுணர்ந்தே
   புலம்பியேநான் ஓடுகின்றேன்;
பொருளுக்கும் நான்கற்ற கல்விக்கும் சற்றுமொரு
   பொருத்தமுமே காணவில்லை;
 பொருள்கூடாக் கற்றவரைப் பூனையுமே மதிப்பதில்லை;
   புவியினிலோர் உயர்வுமில்லை;
மருள்போகக் கற்றவனைப் பொருள்சேர்க்கக் கற்குமொரு
   வழிகாட்டி அருளவேண்டும்;
 வாராத இடரேதும் வந்தாலே நீவந்து
   வாரியணைத் தெடுக்கவேண்டும்;
அருள்தோகை விரித்தமயில் அழகுவள்ளி யுடனாக
   அப்பப்ப! வருகவேநீ!
 அருங்குன்றக் குடியிலுயர் பெருங்குன்றி லாடுகின்ற
   அழகழகா! வருகவேநீ!

எத்தனையோ துன்பங்கள்; எத்தனையோ துயரங்கள்;
   எத்தனையோ மனஉளைச்சல்;
 எத்தனையோ பேராசை; எத்தனையோ மனஓசை;
   எத்தனையோ நெஞ்செரிச்சல்;
எத்தனையோ மனவீழ்ச்சி; எத்தனையோ மனத்தளர்ச்சி;
   எத்தனையோ பேரிகழ்ச்சி
 எத்தனையோ நடிப்பலைகள்; எத்தனையோ இடிப்பலைகள்;
   எத்தனையோ துடிப்பலைகள்;
இத்தனையும் நான்தாங்கி இவ்வுலகில் வாழ்ந்திடஎன்
   இதயத்தில் வலிமையில்லை;
 எனைக்கூட்டி யணைத்தெனக்கோர் வழிகாட்டி நடத்தியெனக்
   கென்றும்நீ அருளவேண்டும்.
இத்தரையில் வந்துகுற வள்ளிமயில் மணந்தவனே!
   எழில்முருக னேவருக!
 எழிலான குடிதன்னில் உயர்வான மலைவாழும்
   இளையவனே! வருகவேநீ!;
 

 

Saturday, December 22, 2012

கண்ணதாசன்

                               கண்ணதாசன்

வண்ணத்து மயிற்கூட்ட ஆட்டத்திற் கோர்பாடல்
      மனமீர்க்கப் படைத்த ளிப்பாய்;
   மால்வண்ணன் வாயரும்பி மலர்கின்ற குழலிசைக்குள்
      வசமாக்கும் பாட்ட ளிப்பாய்;
எண்ணத்துள் நுழைந்தாடும் காதலர்க்கோர் இணைப்பாடல்
      இன்பமுறத் தொடுத்த ளிப்பாய்;
   இலக்கியத்தின் பிழிவாகத் தொடர்களினைத் தொட்டெடுத்தே
      இன்மணத்து மாலை யீவாய்;
கிண்ணத்துள் மதுவுக்கும் கிறக்கங்கள் வரும்வண்ணம்
      கடும்போதைச் சொற்கள் பெய்வாய்;
   கிறங்கிப்போய்த் திரைக்கூட்ட அலையுன்னைத் தாலாட்டத்
      திரையுலகை ஆட்சி செய்தாய்;
வண்ணப்பொன் உடலழகா! உன்பாட்டைக் கேட்டுள்ளம்
      மயங்காதார் யாரு மில்லை;
   வளமான திரையுலகை வலங்கொண்டும் வளங்காணா
      மாமன்ன! கண்ண தாச!

யார்யாரை எங்கெங்கே வைப்பதென யாருக்கும்
      புரியவில்லை எனஉ ரைத்தாய்;
   யார்யாரோ எங்கெங்கோ அமர்கின்றார்; தன்முனைப்பாய்
      என்னென்ன வோசெய் கின்றார்;
சீருடைய குயில்கட்கும் காக்கைக்கும் வேறுபாடு
      தெரியவில்லை என்று ரைத்தாய்;
   சிக்கலிங்கே அதுதானே! தீர்வெதுவும் தெரியவில்லை;
      திருந்துவோரைக் காண வில்லை;
பார்வாழ நீசொன்ன கருத்துக்கள் தத்துவங்கள்
      பார்வாழ்வோர் கொள்ள வில்லை;
   பாவங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற விந்தையேதான்
      பக்குவமாய் விளங்கி நிற்கும்;
பேர்வாங்கிப் புகழ்வாங்கிப் பெரியமுத லாளியெல்லாம்
      படையெடுக்க வைத்த மன்னா!
   பாட்டாலே திரையுலகை ஆண்டபெரு மன்னனேஉன்
      பேரெங்கள் மனமி ருக்கும்.

மதுவைநீ குடித்தாயோ மதுவுன்னைக் குடித்ததுவோ
      மயங்கியது நாங்க ளன்றோ!
   மயக்கத்தில் அளித்தாலும் மயக்குகின்ற பாட்டளித்தாய்!
      மகிழ்ந்திட்டார் மக்க ளெல்லாம்;
மதுக்கோப்பைக் குள்ளுனது குடியிருப்பென் றுரைத்தாலும்
      மக்களுள்ள மெலாமி ருந்தாய்!
   வசமாகா உள்ளத்தின் வசப்பட்டு மயங்கினுமுன்
      வசப்பட்டார் உலக மக்கள்;
மதிமயக்கும் கவிவரிசை மட்டுமல்ல உன்னுரையும்
      மயக்கியது நெஞ்ச மெல்லாம்;
   வனவாசம் போல்மனசைத் திறந்துரைத்தா ரிவ்வுலகில்
      யாருமில்லை உண்மை தானே!
நிதியுன்னைத் தினந்தோறும் தேடிவந்து குவிந்தாலும்
      நிற்பதில்லை உன்னி டத்தில்;
   நிதிகொழிக்கும் திரையுலகில் கொழித்தாலும் செல்வத்தில்
      நீகொழிக்க வில்லை மன்னா!

அருத்தமுள்ள இந்துமதம் படித்தவர்க ளெல்லோரும்
      அடடாவென் றதிச யிப்பார்;
   அன்றாட உண்மையுடன் ஆண்டவனின் உண்மையினை
      அணைத்தொன்றாய்ச் சொல்லி வைத்தாய்;
பொருத்தமுடன் நம்வாழ்வில் பொருந்திவரும் செய்திகளில்
      பொருத்திவைத்தாய் ஆன்மீ கத்தை;
   புவிவாழ்க்கைப் போதிமரம் போதித்த பிழிவினைநீ
      பொறித்துவைத்தாய் மற்ற வர்க்காய்;
இருக்குமிந்தப் பேருலக இன்பத்தின் துன்பத்தின்
      எல்லைகளைத் தொட்ட வன்நீ!
   இருந்துகொண்டே செத்தவனாய் இரங்கற்பாப் பாடியேயோர்
      எழுச்சியினைத் தந்த வன்நீ!
கருக்கொண்ட போதிலேயே கவிதையினைக் கற்றதுபோல்
      கவிச்சுவையின் சிகரம் தொட்டாய்!
   கவியரசாய்ப் புவியாண்டு கலையுலகை ஆட்டுவித்த
      கண்ணதாச! நீச காப்தம்.

Saturday, November 17, 2012

மைத்துனி

                                  உறவுகள்---'மைத்துனி'
                  ( கவிதை உறவு--ஆண்டுவிழா-18-05-09 )
                     -தலைமை;- கவிஞர் முத்துலிங்கம்--

மைத்துனிகள் என்றாலே மனசிலோர் கிளுகிளுப்பு;
எத்துணையோ உணர்வுவகை எழுந்து தலைகாட்டும்;

மாமியார் வீட்டிற்கு விருந்தென நான்சென்றால்
மாமியொடு என்மனைவி பொழுதெல்லாம் பேசிநிற்பாள்;

கிடைப்பதை உண்டுவிட்டுக் கூரைபார்த்துக் கிடப்பவனை
இடைவந்து சீண்டி, என்னென்ன வோகிண்டிப்,

பேச்சுத் துணையாகி விளையாட்டுக் கையாகி
மூச்செல்லாம் உயிர்மூச்சாய் ஆக்குபவள் மைத்துனிதான்;

கல்லூரி மங்கையவ ளென்பதனால் எம்பேச்சு
உள்ளபடி யேநல்ல சுவைநிறைந்த பேச்சாகும்;

என்துணையோ உள்ளிருந்தே 'என்னடி அரட்டை?'
உன்வாயைக் கொஞ்சம் அடக்கிக்கொள்'  என்றிடுவாள்.

அவளும் பேசமாட்டாள்; அருகமர்ந்து  பேசும்
இவளையும் பேச விடமாட்டாள்;ஆகவேதான்

பெண்ணையே அழகான பேயென்பார் போலும்;
என்னவோ போங்கள்; மைத்துனி மைத்துனிதான்;

இன்னொரு மைத்துனி; இவளோ படுசுட்டி;
என்னையவள் படுத்தும் பாடு இருக்கிறதே!

தாங்காத தொந்தரவா யிருந்தாலும் அதற்குள்ளே
நீங்காத இன்பஅலை வீசிடவே செய்கிறது;

ஓடி வருவாள்; ஒருதுள்ளுத் துள்ளியென்னை
நாடிவந்தே மடியில் நறுக்கென்றே அமர்ந்திடுவாள்;

கழுத்தில் கைபோட்டு முகத்தை இழுத்தணைத்துக்
களுக்கென்று கன்னத்தில் முத்தம் இட்டுவைப்பாள்;

மகிழ்ச்சிக் கரையுடைத்தே மனதில் நீங்காத
நெகிழ்ச்சிதரும் அவள்வயது; திகைக்காதீர்! வெறும்நான்கே;

இப்படி மகிழ்ச்சிதரும் மைத்துனிகள் இல்லையென்றால்
எப்படிநான்  மாமியார்  வீட்டில்  இருப்பதுவாம்?

அத்தான் எனஅழைத்தே கொஞ்சுவதும், எனக்கெனவே
மெத்தஅக் கரையோடு போட்டதா யெடுத்துவந்தே

உப்பிட்ட  தேநீரை   உள்மகிழ   நீட்டுவதும்,
சப்பிமுகம்  சுழிப்பதனைக் கைகொட்டி ரசிப்பதுவும்,

அக்கா!  உன்கணவர் அழகைப்பார்!  என்றவர்கள்
அக்காளை அழைப்பதுவும், அனைத்தும் சுவைதானே!

வீடுவந்த பின்பும்  நீங்காத  நினைவாகி
ஏடுதிருப் புவதைப்போ லினிப்பவை அவைதானே!

கட்டியவள் முறைப்பையும், கனைப்பையும், சுளிப்பையும்
கட்டிவந்த நாள்முதலாய்க்  கண்டுவரும் என்போன்றோர்

கண்மூடி எண்ணிக்  களிப்பதெலாம்  மைத்துனிகள்
எண்ணமுடி யாச்சேட்டை ஈந்த  சுவைதானே!

ஆதலினால் இளைஞர்காள்!  எதெதெற்கோ ஆசைப்பட்டு
மாதவள் தனியாளை மணங்கொள்ள  முயலாதீர்!

மைத்துனி இலாவீடு  மகிழ்ச்சியே  இலாவீடு;
மைத்துனிகள் வாழ்கவென மனங்களித்தே ஆடிடுவோம்.

இளைஞர்களே!    ஓர் அறிவுரை;

கோவிலில்லா ஊரில்  குடியிருக்க வேண்டாம்;
மைத்துனி இலாவீட்டில் பெண்ணெடுக்க வேண்டாம்.

,

Saturday, November 10, 2012

தேசத்தைப் பாடுவோம்

                             தேசத்தைப் பாடுவோம்

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
           என்றிருந்த கொடுமை தீர்ந்தே
   எல்லோரும் மன்னரென ஆகிவிட்டோம்; குதிகுதித்தே
           இங்காட்டம் போட்டு நின்றோம்;
நம்மவர்க ளாட்சியிலே நன்மையெனப் பலகோடி
           நாடிவரும் என்றி ருந்தோம்;
   நன்மைகளை விடத்தீமை நாள்தோறும் பெருகிவரும்
           நடப்பினையே காணு கின்றோம்;
நம்மவர்கள் குரங்காகிப் பூமாலை பிய்த்தெறிந்தே
           நர்த்தனங்கள் புரியக் கண்டோம்;
   நாட்டினிலே அதர்மங்கள் தலைதூக்கத் தர்மங்கள்
           நடுங்கிப்போ யொடுங்கக் கண்டோம்;
சிம்மமெனக் கருதியவர் சிறுநரியாய் நாட்டுக்குள்
           சிறுசெயல்கள் செய்யக் கண்டோம்;
   சீறிவருந் துன்பங்கள் சிதைந்தோடச் செய்திட்டே
           தேசத்தைப் பாடு வோமே!

ஆடியது பார்த்துநாளும் அடங்கியது போதுமிங்கே
           அச்சங்கள் போக்கி நிற்போம்;
   ஆரடாஅ!  நீயென்றே அதர்மங்கள் புரிவோரை
            அதட்டியே ஒடுக்கி வைப்போம்;
கூடிவரும் நன்மையெனக் கோடிமுறை கும்பிட்டும்
             கூடிவர வில்லை நன்மை;
   கொழுத்தசிறு நரியெல்லாம் தடியாட்சி நடத்திட்டே
             கோலோச்சி வெற்றி காண்பார்;
இடிவீழ்ந்த கதையாக இடுப்பொடிந்து கீழ்வீழ்ந்தே
              இந்தியன்நாம் கிடக்க லாமா?
   எழுந்துநின்று தூய்மைப்போர் முழக்கங்கள் செய்திடுவோம்;
              எடுத்தெறிவோம் ஊழல் தம்மை;
குடியாட்சி குடிமக்கள் தமக்கேயென் றாக்கிவிட்டே
              கொள்கையிலே ஊறி நிற்போம்;
   குலவுமிருள் தனையோட்டி விடிவெள்ளி கொணர்ந்திங்கே
               தேசத்தைப் பாடு வோமே!

ஆத்திரத்தில் நெருப்பள்ளிக் கொட்டுகிறேன் என்றென்னை
               அவசரத்தில் திட்டி டாதீர் !
   அமைதியுறப் பார்த்தாலும் அதுதானே தெரிகிறது;
               அப்புறம்நான் என்ன செய்வேன் ?
தீத்திறத்தில் முதிர்ந்தோரே வென்றுவரக் கண்டுதினம்
                சிந்தைநொந்து வாடு கின்றேன்;
   செம்மைநெஞ்சங் கொண்டவர்கள் அரசியலைப் புறக்கணித்துச்
                செயலற்றே ஒதுங்கக் கண்டேன்;
நாத்திறத்தில் கொடியோச்சும் நல்லவர்கள் ஏனிந்த
                 நாட்டுநலம் புறக்க ணிப்பார்?
   நன்மையெலாம் ஒன்றாகி நிமிர்ந்துவந்தால் தீமையெலாம்
                 நாடுவிட்டே ஓடி டாதா?
தீத்தொழிலே ஆளவிட்டுத் தினமும்நாம் அழுதுநின்றால்
                 செயல்வீரம் பழுதா காதா?
   செம்மைமனங் கொண்டோரே! திரண்டிங்கே எழுந்திடுவீர்!
                  தேசத்தைப் பாடு வோமே!+

    

Thursday, November 8, 2012

அவன் கணக்கும் இவன் கணக்கும்

               இவன் கணக்கும்--அவன் கணக்கும்
         (கலைமகள் மார்ச் 2000-கி வா. ஜ.நினைவு
             மரபுக் கவிதைப் பரிசு )

இறைவனொரு கணக்கினையே போட்டு மாந்தர்
   இனத்தினையே படைத்திட்டால் அந்த மாந்தன்
மறைவாகப் பலகணக்குப் போட்டு மேலோன்
   மனக்கணக்கைத் தலைகீழாய் மாற்றி அந்த
இறைவனையே குழப்பிவிட்டு மீன்பி டிப்பான்;
   இந்தமண்ணை விருப்பம்போல் ஆட்டி வைப்பான்;
இறைவனுக்கே விதியெழுதும் அவனா? எல்லாம்
   இயக்குகின்ற இறையவனா? யார்தான் மேலோன்?

மனிதஇனம் அவன்படைத்தான்; சாதி யென்னும்
   ' மனக்கொல்லி'  இவன்படைத்தான்; சிந்திக் கின்ற
மனங்களையே அவன்படைத்தான்; தமக்குள் மோதும்
   மதங்களையே இவன்படைத்தான்; பொங்கும் செல்வ
இனங்களையே அவன்படைத்தான்; ஏற்றத் தாழ்வாம்
   இதயநோயை இவன்படைத்தான்; இவன்ப டைப்பால்
மனமயங்கிக் கிறுகிறுப்பான் இறையே என்றால்
   வல்லானின் வாய்க்காலுக் கணைகள் ஏது?

நல்லறத்தை ஒழுக்கத்தைக் கழித்து விட்டோம்;
   நாள்தோறும் போகாத பாதை யில்போய்
அல்லறத்தைத் தீமையினைப் பெருக்கி விட்டோம்;
   அடிதடியும் அடாவடியும் கைக்கொண் டால்தான்
நல்லதெனும் ஒருவழியை வகுத்து விட்டோம்;
   நாசங்கள் மோசங்கள் கூட்டி விட்டோம்;
சொல்லுங்கள் காலமெனும் புத்த கத்தில்
   சுகமான கணக்காநாம் போடு கின்றோம்?

பொய்முகங்கள் வணங்கப்பட் டுயரும் போது,
   பொழுதெல்லாம் தவறுகளில் குளித்து நிற்போர்
பொய்முழக்கம் வேதமென ஆகும் போது,
   பொல்லாங்கின் கொடியுயரப் பறக்கும் போது,
மெய்மையிங்கு குத்துப்பட் டலறும்போது,
   மேலோர்கள் மிதிபட்டுச் சாகும் போது,
மெய்யாக வாய்மையினைப் போற்றி வாழும்
   மனக்கணக்கின் விடைசரியாய் வருமா? சொல்வீர்!

சத்தியத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டுத்
   தர்மத்தின் குரல்வளையை நெரித்து விட்டு,
நித்தமுமே நேர்மையினைச் சிறையில் தள்ளி,
   நெஞ்சாரப் பொய்மைக்கே மாலை யிட்டுச்,
சத்தமிட்டே அதர்மத்தை மேடை யேற்றிச்,
   சிரிக்கின்ற குடியரசில் உண்மை யாகச்
சத்தியந்தான் வாழ்கிறதா? இவ்வி னாத்தான்
   சத்தியமாய் நெஞ்சுகளைக் கீறி நிற்கும்.

மனிதாபி மானத்தைக் காண வில்லை;
   மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
   இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
   கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
   இந்தமண்ணில் மகாத்மாக்கள் தோன்று வாரா?

சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
   சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
   முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
   பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
சாதிக்கும் சங்கங்கள் சங்க மித்துச்
   சரியான விடைவருமா? அவன்க ணக்கில்!
 

Wednesday, November 7, 2012

காதல் -ஒரு பார்வை

     இளமைக்குப் பெருமை சேர்க்குமா காதல்?

நானுந்தான் காதலித்தேன்; மணம்பு ரிந்தேன்;
   நங்கைதந்த இன்பத்தில் கிறங்கிப் போனேன்;
தேன்குடித்த நரியாகச் சுற்றிச் சுற்றித்
   திரிந்ததனால் எமைச்சுற்றி மக்கள் கூட்டம்;
தேனாக இனித்தஅவள் இன்றைக் கென்னைத்
   தேளாகக் கொட்டுகிறாள்; தொடச்சென் றாலோ
தானாக முறைக்கின்றாள்; என்றன் காதல்
   தொட்டிலுக்குப் பலியாகிச் செத்துப் போச்சு.

தொட்டிலுக்குப் பலியாகும்; இல்லை யென்றால்
   தோகையவள் பின்னேயே வலமாய் வந்து
கட்டிலுக்குப் பலியாகும்; இந்தக் காதல்
   கட்டிளமைக் கெந்தவகை பெருமை சேர்க்கும்?
விட்டிலொன்று தெரிந்திருந்தும் சுடரைத் தீண்டி
   வீழ்ந்துபடுங் கதைபோல இளமை யெல்லாம்
தொட்டவுடன் கிடைக்கின்ற சுகத்தில் வீழ்ந்து
   துவள்வதன்றி வேறென்ன பெருமை கூட்டும்?

காதலொரு பொல்லாத நோய்தான்; காணும்
   கண்வழியே கிருமிபுகும்; நெஞ்சந் தன்னை
மோதியதை நொறுக்கிவிடும்; சிந்த னைகள்
   முழுதையுமே வயமாக்கிப் பித்தா யாக்கும்;
சாதனைகள் செயத்துடித்த இளமை தன்னைச்
   சவமாக்கி விட்டுவிடும்; எண்ணிப் பார்த்தால்
வேதனையைத் தவிரவேறு எதையும் இந்த
   வியனுலகில் காதலது தருவ தில்லை.

பார்த்தாலும் பறிபோகும்; அவளைச் சற்றுப்
   பார்க்காம லிருந்தாலும் நொறுங்கிப் போகும்;
சேர்த்தாலும் வசமிழக்கும்; சேர்த்த கையைச்
   சிறிதளவே பிரித்தாலும் துடித்துச் சாகும்;
கோர்த்தாலும் நெகிழ்த்தாலும் துன்ப மீயும்
   காதலினால் இளையநெஞ்சம் ப்டும்பாட் டையே
பார்த்தபின்னும் காதலினைப் போற்றி நிற்றல்
   பைத்தியந்தான்; அதுநமக்கே என்றும் வேண்டாம்.

காதலிக்க வேஇளைஞர் அஞ்சு கின்றார்;
   கட்டழகைக் காதலித்து மணந்தால் அந்தக்
காதலியின் பின்னாலே பொருள்க ளேதும்
   கைவராது போகுமென்ற நினைப்பு நெஞ்சக்
காதலினை நொறுக்கிவிடும்; ஆமாம் இன்று
   கரும்புதின்னக் கூலிவந்த பின்னர் தானே
காதலுடன் கரும்பினையே தொடுவார்; இந்தக்
   கொடுமையிலே காதலொரு கேடா? வேண்டாம்.

துணிவில்லா நெஞ்சத்தில் தோன்றும் காதல்
   துணியில்லாப் பெண்ணைப்போல் ஆபா சம்தான்;
துணிவுடனே ஒருத்தியையே காத லித்துத்
   துணையாக மற்றொருத்தி கொள்ளு கின்ற
துணிவுக்கு நம்நாட்டிற் பஞ்ச மில்லை;
   தோற்றவர்யார்? ஆண்மகனா? பெண்ணா? இல்லை;
துணிவில்லா நெஞ்சத்தில் நிலைக்க எண்ணித்
   தோன்றியதே அக்காதல் தனக்கே தோல்வி.       ---------------------------
Azhagi v6.0, www.azhagi.com
---------------------------
Sure you have saved this file with the recent modifications?



NOTE:

If you have not yet saved the file (with the recent modifications) and wish to save the same, click on 'No' and proceed to save the file. Otherwise, you can click on 'Yes' to quit anyway (i.e. even without saving the file).
---------------------------
Yes   No  
---------------------------

Tuesday, November 6, 2012

திருமகள்

                        குற்றவாளிக் கூண்டில் "திருமகள்"
                                  ( சன் தொலைக்காட்சி )
                 நடுவர்; கவிக்கோ அப்துல் ரகுமான்

திருமகளே! உனைக்கூண்டில் நிறுத்திக்குற் றம்சாட்டல்
பெருமளவு கலக்கத்தை எனக்குத் தருகிறது.

ஆனாலும் என்னசெய்ய? அளவில்லாத் தவறுகளால்
தேனான ஓவியங்கள் சிதைபட்டுப் போயினவே!

செல்வத்தின் தேவதைநீ செய்தபல குற்றத்தால்
எல்லாத் திசைகளுமே இடிபட்டுப் போயினவே!

பொருளுக்குத் தேவதையாய்ப் பொறுப்பை உனக்களித்தால்
இருளுக்குத் தலைமைதாங்கி இவ்வுலகை நொறுக்கிவிட்டாய்;

நல்லவை வாழ்வுபெற ராணியென உனைவைத்தால்
அல்லவை ஆட்டமிட அனைத்தும் செய்துவிட்டாய்;

குற்றங்கள் தனையிந்த மன்றத்தில் வைக்கின்றேன்;
குற்றங்கள் எல்லாமே குணமெனவா திடவேண்டாம்;

உனைச்சேறும் துடிப்பில்தான் உயர்பாவச் சுழலாறு
தனைச்சேர்ந்து மூழ்கித் தவியாய்த் தவிக்கின்றார்;

செய்யாத குற்றங்கள் தொகைதொகையாய்ச் செய்வதெலாம்
அய்யோ உனைவீட்டில் அமர்த்திக் கொளத்தானே!

பணக்காரன் ஏழையெனப் பாரிலிரு சாதிப்பூ
மணக்கவைத்துச் சமுதாயம் மயங்க வைத்திட்டாய்;

உன்னருள் இல்லாதான் ஒப்பரிய மேதையென
நின்றாலும் இருக்குமிடம் தெரியாமல் சாகின்றான

உன்னருள் பெற்றவனோ பெரும்பேதை என்றாலும்
நின்று சுடர்வீசி நிலவைவாங்கப் பார்க்கின்றான்;

கொலைகொள்ளை பாவங்கள் எல்லாமே இங்கே
கலகலப்புக் காரியுன்றன் கண்வீச்சால் நடப்பவையே;

குப்பை கூளங்கள் கோபுரத்தில் ஏறுவதும்
தப்புத் தாளங்கள் முழங்குவதும் உன்னால்தான்;

பொருளற்ற ஏழைமகன் வாழ்க்கை முழுதுமோர்
பொருளற்றுப் போனதென்றால் புரிபவள் நீதானே;

பேரழகுப் பெட்டகமாய்ப் பொலிகின்ற பெண்வாழ்க்கை
சீரழிந்து மணமின்றிக் கருகுவதுன் புறக்கணிப்பால்;

பொருள்மலராத் தோட்டத்தில் பூமலர்ந்து பயனென்ன?
அருள்மலரா உன்றன் அணைப்பில்லை யெனும்போது;

படமாடும் கோவில் உண்டியலை நிரப்பும்நீ
நடமாடும் கோவில் வயிற்றைப் புறக்கணிப்பாய்;

காசற்ற மகனையவன் கட்டி யவள்கூட
நேசமுடன் மதிப்பதில்லை; நெஞ்சார அணைப்பதில்லை;

பாசங்கள் எங்கோபோய்ப் பதுங்கிப் புதைந்தோட
மோசங்கள் கொடிகட்டி விளையாடச் செய்கின்றாய்;

குடியாட்சி தனையுன்றன் மடியாட்சி யாக்கிவிட்டுத்
தடியாட்சி தழைத்தோங்கத் தடம்போட்டு விட்டாய்நீ;

கோபுரங்கள் சாய்வதும் குப்பைவான் பறப்பதும்
நூபுர ஒலிநங்காய்!  நீவீசும் புயலால்தான்;

சாதிப் பயிர்வளரத் தழையுரமா யாகின்றாய்;
நீதி வளைவதற்கும் நீண்டகை யளிக்கின்றாய்;

நல்லவர்க்கு நரகத்தை இவ்வுலகில் காட்டிவிட்டு
அல்லவர்க்குச் சொர்க்கத்தை அளித்து மகிழ்கின்றாய்;

இப்போது சொல்நீ!  இந்தஉன்  குற்றங்கள்
தப்பாமல் உலகத்தைச் சாய்த்ததா? இல்லையா?

"மன்ற நடுவரே!  மனதில் நிறுத்துங்கள்;
 என்றும் இவ்ளிடத்தில் இரக்கமே காட்டாதீர் !

தீர்ப்பு இப்படி இருக்கட்டும்;

"நூறாண்டு கடுங்காவல் நலிந்தோரின் குடிசைக்குள்"
யாராண்டு வந்தாலும் தண்டனை நிலைக்கட்டும்;  ;                             

Wednesday, October 31, 2012

சித்தர்கள்

                                                   சித்தர்கள்
                    (நம் யோகியார் இல்லக் கவியரங்கம்
                                 10--01--10 )

           அழைப்பாளர்--யோகியார்
என்னையிங்கேன் அழைத்தீர்கள் என்று கேட்டால்
  என்பாபா கட்டளையென் றுடனே சொல்வார் ;
அன்புடனே இத்தலைப்பேன்? எனக்கே என்றால்
  அவர்சொன்னார்; நான்கொடுத்தேன்; என்பார். என்றும்
திண்ணமுற உள்ளமெலாம் அவரே யாகத்
  தினமுமுரை யாடிமகிழ் கின்றார்;அந்த
எண்ணமெலாம் நிறையன்பு பக்தி யால்தான்
  இயங்குகிறார்; அவர்யோகி; வணங்கு கின்றேன்.

             தலைவர்--இலந்தையார்
என்நண்பர் இவரென்று கூறும் போதே
  இதயத்துள் சந்தமொன்று துடிக்கக் காண்பேன்;
வண்ணமுற வருஞ்சந்த வரிசை கண்டே
  வாய்பிளந்து கவிதையினைச் சுவைப்பேன்; சொந்த
எண்ணமெலாம் கவிதைக்கே என்றிட் டாலும்
  இவர்கலைகள் பலகற்ற அறிஞர்; அந்த
வண்ணமிகும் இலந்தையாரை வணங்கு கின்றேன்;
  வாயுதிர்க்கும் கவிதைமழை நனைவேன் நானே.
                             ----
கடற்பரப்பின் மேல்நடந்து காததூரம் சென்றடுத்த
          கரைசேர்ந்தே நின்றிடலாம்;
  காணுமொரு நிலவுமுகம் தனைத்தடவி விண்மீன்கள்
          கட்டியெடுத் திங்குவரலாம்;
உடற்பாரம் பஞ்சாக்கி உயர்வானக் காற்றேறி
          ஊர்வலமாய்ச் சுற்றிடலாம்;
  உள்ளத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளைச் சுட்டெரித்தே
          உலகத்தை வென்றிடலாம்;
மடல்திறந்த இமைமீதே காட்சிகளை வரிசையென
           மலர்ந்துவரச் செய்திடலாம்;
  மனமென்ற குரங்கையொரு மந்திரத்தா லாட்டுவித்து
           மாசற்ற தாக்கிடலாம்;
திடமான சித்தியுடைச் சித்தர்க ளால்மட்டும்
           சாதிக்க இவைமுடியும்;
  சித்தர்கள் பெருமையெலாம் சிந்தையுளே நிறுத்தியேநாம்
           சிரந்தாழ்த்தி வணங்கிடுவோம்.

ஆசைகளை வென்றிடலாம்; தீமைகளைத் தடுத்திடலாம்;
           அடுத்துவரும் செயல்வகுத்தே
  அதையுமொரு நடைமுறையில் உலவிவரக் கண்டிங்கே
           அன்றாடம் மகிழ்ந்திடலாம்;
காசையொரு பொருட்டாக மதிக்காமல் இவ்வுலகில்
            கனவாழ்வு வாழ்ந்திடலாம்;
  கருத்துக்குள் நடமாடும் பேய்களினை ஓட்டியங்கே
             கடவுளையே கண்டிடலாம்;
தூசையெலாம் போக்கியொளிர் துங்கமணிச் சோதியினைத்
             தூக்கியுளம் ஏற்றிடலாம்;
  தோன்றுமொரு பேரின்பம் தொடர்ந்துவரு மகிழ்ச்சிவெள்ளம்
              திளைத்திடலாம் மண்ணிலேயே;
ஆசைகளை விட்டவன்மேல் ஆசையினை வையென்றே
              அறிவுறுத்தும் சித்தருளம்
  அறிந்துவிடில் வாழ்க்கையினை அறிந்தவரா யாகிடுவோம்;
               அவனடியே குறுகிநிற்போம்

உள்ளிருக்கு மொருபொருளை வெளியிருக்கு மெனக்கருதி
                        ஓடியோடித் தேடுகின்றோம்;
     ஒருபோதுங் காணாமல் மனமோய்ந்து தளர்ந்தேநாம்
                          உளமொடிந்து வாடுகின்றோம்
கல்லிருக்கு மிடமெல்லாம் கடவுளிருப் பாரென்றே
                          காலமெல்லாம் புலம்புகின்றோம்;
      கருத்துக்குள் உள்ளொளியாய் விளங்குமொரு கடவுளைநம்
                            கவனத்துள் போற்றமாட்டோம்;
எள்ளிருக்கும்; அதற்குள்ளே எண்ணெயிருக் குமென்பதனை
                            இதயத்துள் உணர்ந்துவிட்டால்,
     இதயத்தைப் பிழிந்துள்ளே இருப்பவனைக் கண்டுவிட்டால்
                             இவ்வுலகில் வாழ்ந்தவர்நாம்;
கள்ளிருக்கும் போதையெனக் கருத்திருக்கும் சொற்களினைக்
                              கொட்டிடுவார் சித்தரெலாம்;
      மண்ணிருக்கும் வரையிந்த வாழ்விருக்கும் வரையந்தச்
                               சித்தரினை மறக்கமாட்டோம்.

அச்சமெனும் ஒருபேயை ஓட்டிவிடு; நெஞ்சுக்குள்
                                 அவன்நினைப்பைக் குடியேற்று
       அவலமென ஒன்றில்லை; ஆனந்த மென்றில்லை;
                                அனைத்துமொன்றாய் எண்ணிவிடு;
துச்சமெனத் துன்பத்தைத் துடைத்தெறிவாய்; மீட்டுமது
                                 தோன்றாமல் வழிவகுப்பாய்;
           தோணுவதுங் காணுவதும் அவனன்றி வேறில்லை;
                                   சிந்தைக்குள் அதைநிறுத்து;
மிச்சமென இருக்கும்நாள் அவன்நாளே என்றவனின்
                                    மென்பாதம் சரணடைவாய்;
             வித்தையெலாம் கற்றாலும் ஆட்டுபவன் அவனென்றே
                                   மனதுக்குள் பதித்துவிடு;
அச்சமிலை என்றுணர்த்தி அருள்வாழ்வு வாழ்ந்திட்ட
                                   அருளாளர் அவரென்றே
       அன்றாடம் சித்தரினை வணங்கிடுவோம் அவர்நம்மை
                                 அண்டிவந்தே அணைத்திடுவார்.

மூலாதா ரம்தொடங்கி ஆறாதா ரமனைத்தும்
                                முனைப்புடன்கை வரப்பெறுவார்
            முந்திவரு சித்தியெலாம் முன்கையி லாடிடவே
                                  மூவுலகும் வலம்வருவார்;
ஆலாதா ரமாம்வித்தே எத்துணைதான் சிறிதெனினும்
                                   ஆலமரம் விரிவதைப்போல்
               அண்டிவரு சித்தருமே ஆளுருவம் சிறிதெனினும்
                                    ஆற்றலிலே பெரியவர்காண்;
காலாலே கடல்கடப்பார் காற்றுவெளி மீதேறிக்
                                  கதிருடனே கைகொடுப்பார்;
         கடும்புலியும் நாயாகிக் கட்டியமே கூறிவரக்
                                   கானாட்டை ஆண்டிடுவார்;
ஆலகால நஞ்சினையும் அப்படியே விழுங்கிவிட்டே
                                  அப்புறமும் இயங்கிடுவார்;
              அவர்சித்தர்; அவர்காட்டும் அற்புதங்கள் சித்தியென
                                   அன்றாடம் வணங்கிடுவோம்.;  ; ;;.


  

Monday, October 22, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                           கம்பராமன்   
         காவியத்துக் கம்பராமன்
         காட்டுகின்ற சோதியென்றன்
         ஆவியெல்லாம் உருக்குதுள்ளே சென்று--கம்பன்
         ஆக்கிவிட்ட அவன்சிரிப்பான் நின்று.

         மாடமீது நின்றதேவி
         வளைத்தகண்ணின் வீச்சினிலே
         ஓடவிட்டான் நெஞ்சினையே மாயன்--மேலே
         உயர்ந்துள்ளம் பறிகொடுத்தான் தூயன்.

         பிரிந்தவர்கள் பிறந்துவந்து
         பூமிதனில் கூடியிங்கே
         விரித்தகதை மிதிலைகண்ட தன்று--அதை
         மனம்நினைத்தால் இனித்திடுமே என்றும்.

         தேவியினைப் பிரிந்தபின்னர்
         நடையிடறும் பாதமெல்ல
         மேவினவே கற்பரலின் மேலே--காடு
         மெத்தையென மாறியது கீழே.

         கங்கைநதி வேடனையே
         கட்டியவன் தம்பியெனச்
         சங்கையின்றி உரைத்ததென்ன பாங்கு--அவன்
         தளிரடிக்காய் என்றனுளம் ஏங்கும்.

        வஞ்சிமகள் சூர்ப்பநகை
        வாயுதிர்த்த சொற்களிலே
        கொஞ்சுதடி அவனழகு மேனி--எண்ணிக்
        குழையுதடி என்மனமும் நாணி.

        தேவமகன் கால்நடந்த
        தூசுபட்டுக் கல்லுயிர்த்துப்
        பாவையாகி வந்ததனைக் கண்டோம்--அந்தப்
        பெருவியப்பில் நாம்கல்லாய் நின்றோம்.

        தேவனையே கீழிறக்கி
        மனிதனென நடக்கவைத்து
        மேவியிங்கே காட்டுகிறான் வித்தை--கம்பன்
        வித்தைகண்டு நாம்முழுதும் செத்தோம்.

       ஆயுதங்கள் இழந்துவிட்டுச்
       சாய்ந்ததலை இராவணனைப்
       போயடுத்த நாள்வாநீ என்றான்--அந்தப்
       புகழுரையால் மானுடமாய் வென்றான்.

       மானுடமே வென்றகதை
       இராமனாலே நிகழ்ந்ததென
       ஊனுருகப் பாடினானே கம்பன்--அந்த
       உயர்கவிக்கே ஈடெந்தக் கொம்பன்.

       ஒருசொல்லும் ஓரில்லும்
       ஒருவில்லும் கொண்டுயர்ந்த
       ஒருவனையே போற்றிடுவோம் என்றும்--அவன்
       ஒருவனலால் வேறியாராம் இன்றும்.

       தருமத்தை வாழ்விக்கத்
       தாரமுடன் கான்புகுந்தே
       உருகிநின்றான் அவள்பிரிவால் நித்தம்--அந்த
       உருக்கத்தால் இலங்கைநாசம் மொத்தம்.

       குரங்கினத்தை அரக்கரினைக்
        கூட்டிட்டான் தம்பியெனக்
        கிறங்கடிக்கும் அன்பினையே காட்டி--அவர்
        கிறங்கிநின்றார் உயிரினையே நீட்டி.

        இராமநாமம் சொல்லிடுவோம்
        கம்பநாமம் போற்றிடுவோம்
        இராமனவன் வெற்றிபெற்றான் வில்லால்--இந்தக்
        கம்பநாடன் வெற்றிபெற்றான் சொல்லால்.      


 

Saturday, September 22, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                                         நானும் கவிதையும்

   பாடுபொருள் முடிவானவுடன், எந்த வடிவத்தில் இதைச் சிறப்பாகச்
செய்யலாம் எனச் சிந்தித்து வடிவத்தை முடிவு செய்வேன்.
   பாடுபொருளும், வடிவமும் முடிவானதும் ஓர் உணர்வு நிலைக்குச்
சென்று விடுவேன்.சொல்லாட்சி நடமிடத் துவங்கும்.
   பாடுபொருள், வடிவம், உணர்வுநிலை - இம் மூன்றும் சொல்லாட்சி
யைத் தேர்வு செய்கின்றன.
   கவிதை உருவானதும் மறுபடி, மறுபடி படித்துப் பார்ப்பேன்.
பெரும்பாலும் மாற்ற வேண்டிய சொற்கள் இரா. அப்படி இருப்பின்
மாற்றி அமைத்து விடுவேன்.
   சொல்லாட்சிக்கு முதலிடம் கொடுப்பேன்." எந்தப் பொருளை, எந்தச்
சொல்லால், எப்படிச் சொல்ல வேண்டுமோ, அந்தப் பொருளை, அந்தச்
சொல்லால், அப்படிச் சொல்லப் பெரு முயற்சி செய்வது கூட உண்டு.
   கவிதை நிறைவு பெற்றதும், படிப்போர் சுட்டும் குறைகளைக் கேட்டுக்
கொள்வேன்.சொல்மாற்றம் சொன்னால் நான் மாற்றுவதில்லை.
   காரணம்,
கவிஞன் ஏதோவோர் உணர்வுநிலைக்குச் சென்று, கவிதை உருவாக்கும்
போது சொல்லாட்சி நடக்கிறது. அந்த உணர்வுநிலையில் அவன் தேர்ந்
தெடுத்த சொல் அங்கே இடம் பெறுகிறது, பின்னொருநாள் கவிஞனே
அந்த உணர்வுநிலைக்கு மீளச் செல்ல முடியாது என்பதே உண்மை.
பின் ஏன் சொல்லாட்சியை மாற்ற வேண்டும்?
   என் ஒரு கவிதையை என் நண்பர் பார்த்துத் திருத்தம் சொல்கிறார் என
வைத்துக் கொள்வோம்; நானும் அவர் சொல்வதை ஏற்று இரண்டு
இடங்களில் சொற்களை மாற்றிவிட்டால் அதன்பின் அந்தக் கவிதை
முழுமையாக என்னுடையதாக எப்படி இருக்க முடியும்?
   இரண்டு இடங்களில் அவர்தம் சொல்லாட்சி அல்லவா சிரித்துக்
கொண்டிருக்கும்!
   இன்னொன்று;
நண்பர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? என்று குறிப்பிட்டுப்
பரிந்துரைக்கும் சொற்கள், கவிதை உருவாகும் போது எனக்கும் தெரிந்த
சொற்கள்தாமே; பின் ஏன் அவை தவிர்க்கப் பட்டன? அதை முடிவு செய்தது
அந்த உணர்வுநிலைதான்
   எனவே, கவிதை, நிறை, குறைகளோடு அப்படியே இருக்க வேண்டும்.
ஆய்வாளன் அதைச் சுட்ட வேண்டும். அவன் சுட்டுவான்.
   சுவைஞன் கதையே வேறு. இருவரும் ஒருவராக இருத்தல் அரிது.
இருக்கிறார்கள்.
   இவை எல்லாமே வளர்ந்து, முதிர்ந்து, புகழ்பெற்ற கவிஞர்கட்கு
மட்டுமே.
               ------         ----            ----
   உங்கள் இசைவுடன் யாப்பிலக்கணம் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம்
எனக் கருதுகிறேன். யாரும் தவறாகக் கொள்ளற்க.
   அடிப்படை அலகுகள் நேர், நிரை, என இரண்டு.
   தனிக்குறில்,தனிக்குறில் ஒற்றடுத்து, தனிநெடில், தனிநெடில் ஒற்றடுத்து
வருவது நேரசை யாகும்.
   குறிலிணை, குறிலிணை ஒற்றடுத்து, குறில்நெடில், குறில்நெடில் ஒற்றடுத்து
வருவது நிரையசையாகும்.
   இவை ஈரசைச் சீர்களை உருவாக்கும் போது, நேர்நேர்--தேமா, நிரைநேர்--புளிமா,
நிரைநிரை--கருவிளம், நேர்நிரை--கூவிளம் என வரும்.
   மூவசைச் சீர்கள் உருவாகும் போது, இவைகளுடன் நேர் சேர்ந்தால், தேமாங்காய்,
புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என வரும்.
   நிரை சேர்ந்தால் கனிச்சீராகும்.
   இவ்வளவுதான் நம் அடிப்படை இலக்கணம்.விளாங்காய்ச் சீரென ஒன்றில்லை.
ஆனால் அப்படி ஒன்றை உருவாக்கலாம் என கி.வா.ஜ. குறித்திருக்கலாம்.
   ' நமசிவாய வாழ்க' என்பதில் முதற்சீரைக் கருவிளங்காய் எனக் கொள்ளலே
நலம்.கருவிளாங்காய் என்பது தேவையில்லை.(இது என் கருத்து)
   நம் இலக்கணம் மிகவும் நெகிழ்ச்சியுடையது. அதையும் மீறியே புதுக்கவிதைகள்
தோன்றின.
   புறம். கலி. இவைகளைப் பார்த்தால் மரபின் நெகிழ்ச்சி தெரியவரும்.
   ' இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்' என்பதே உண்மை.
   புதிய வடிவங்கள் உலாவந்து, நிலைபெற்று விடின்,அங்கே புதிய இலக்கணம்
தோன்ற வேண்டும்.தமிழ் இலக்கணம் அப்படித்தான் வளர்ந்துள்ளது.
அதனாலேயே தமிழ்மொழி என்றும் நிலைத்து வாழ்கிறது.



Wednesday, September 19, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                              சுவைஞன்

எல்லோரும் கவிஞனென மிளிர்வ தில்லை;
   இணையில்லா ஒருகவிஞன் சிந்து கின்ற
எல்லாமே உயர்கவிதை ஆவ தில்லை;
   ஏட்டினிலே படைத்துவரும் கவிப டிக்கும்
எல்லோரும் நற்சுவைஞர் ஆவ தில்லை;
   இனியஉளம்; நற்பார்வை; அறிவுக் கூர்மை;
எல்லாமே இணைந்திட்ட சுவைஞர் கையில்
   இன்கவிதை கிடைத்திட்டால் அதுவே சொர்க்கம்.

கவிஞனவன் நினைக்காத சுவைக ளெல்லாம்
   கற்கின்ற சுவைஞனிவன் காட்டி நிற்பான்;
கவிஞனவன் படைத்திட்ட சொற்க ளேறிக்
   ககனத்தில் உலாவருவான்; ஆகா வென்றே
புவிநடுங்கக் கூச்சலிட்டே கூட்டஞ் சேர்ப்பான்;
   பார்த்துவந்த சுவையமுதைப் பலர்க்கும் ஈவான்;
கவியுள்ளங் கண்டுணர்ந்தே மகிழு மந்தக்
   கவிச்சுவைஞன் கவிஞர்க்குக் கிடைக்காப் பேறு.

ஒருகவிதை படிக்குங்கால் அதிலே எங்கோ
   ஓரிடத்தில், ஒருசொல்லில், சுவைகள் விஞ்சிப்
பெருகுவதை அவனுணர்வான்; கவிதைக் குள்ளே
   பிழைகாணும் கண்வீச்சை வீச மாட்டான்;
வரிசையிடும் சொல்லாட்சிச் சிறப்பைக் கண்டு
   மனமகிழ்ந்து திளைத்திடுவான்; அந்தப் பாட்டில்
சிரிக்கின்ற வழுக்களையோ, மயக்க மூட்டும்
   சொல்லடுக்கை யோஎன்றும் பொருட்ப டுத்தான்.

 

Re; சவகர்லால் கவிதைகள்

                                  கவிதை

எதுகவிதை எனச்சற்றே சிந்தித் தால்நாம்
   ஏதேதோ சொல்லிடலாம்; நெஞ்சுக் குள்ளே
மெதுவாக, இனிமையாக,ஆழ மாக
   மெல்லிசைபோல் நுழையவேண்டும்; பின்ன ராங்கே
மதுமயக்கம் நிகழவேண்டும்; கவிதைச் சொற்கள்
   வரிசைநட மிடவேண்டும்; கேட்போர் நெஞ்சுள்
அதுநுழைந்தால் நற்கவிதை; இல்லை யென்றால்
   அணிவகுத்த சொற்கூட்டம்;அவ்வ ளவ்வே.

பளிச்சென்றே ஒருமின்னல் தோன்ற வேண்டும்;
   பாதாளக் குகைக்குள்ளும் அதுபு குந்து
வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும்; கற்போர் நெஞ்சுள்
   விதம்விதமாய்ப் பலசுவைகள் மலர வேண்டும்;
கலகத்துப் பூண்டுகளை எரிக்க வேண்டும்;
   கற்பனையில் வானவில்லே தோன்ற வேண்டும்;
தெளிவாக உள்நுழைந்தே தெளிவைத் தந்து
   சுவைகூட்டும் ஒன்றேதான் கவிதை யாகும்.

ஏதோவோர் கிறுகிறுப்பை ஈய வேண்டும்;
   இதயத்தின் உட்புகுந்தே உணர்வைத் தட்டி
ஏதோவோர் கிணுகிணுப்பை ஒலிக்க வேண்டும்;
   இனம்புரியா இன்பஅலை உள்ளே வீசி
ஏதோவோர் மயக்கத்தை அளிக்க வேண்டும்;
   எடுத்துவைத்தே மறுபடியும் படிக்கத் தூண்டும்
ஏதோவோர் போதையினை ஊட்ட வேண்டும்;
   இன்பமூறும் மணற்கேணி நல்ல பாடல்.

நடப்பிலில்லாக் கற்பனைகள் மட்டு மின்றி
   நடப்பினையும் கவிதையுளம் காட்ட வேண்டும்;
இடுப்பசைவில் உயிரொடுங்கும் காதல் விட்டே
   இடுப்பொடியும் மங்கைதுயர் காட்ட வேண்டும்;
எடுப்பான மாளிகைகள் மட்டு மன்றி
   ஏழைமக்கள் குடிசையையும் காட்ட வேண்டும்;
அடுத்துநிற்கும் இரட்டைகளை நல்ல பாடல்
   அழகுறவே காட்டாக்கால் காண்பார் யாரே!
   

Sunday, September 16, 2012

Re;சவகர்லால் கவிதைகள்

                                                  மழலையர்
             ( ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
        சென்னை--13.11.07)
               கவியரங்கத் தலைமை

பெற்ற பொருளளவால் நாம்பெருமை யுற்றிடலாம்;
பெற்ற புகழளவால் நாமுயர்வை யெட்டிடலாம்;

பொருளளவும் புகழளவும் தருஞ்சிறப் போரளவே;
பொருள்பெற்றோர் புகழ்பெற்றோர் பெற்றோ ராவதில்லை;

சின்னக் கையசைவில் சிங்காரப் புன்னகையில்
வண்ணமுறக் குழந்தை வழங்குவதே அப்பதவி;

இந்திர லோகமாளும் அப்பதவி கிடைத்தாலும்
இந்தப் பதவிமுன்னே அப்பதவி தூசாகும்;

தத்தி விழுந்து தவழுமப் பிஞ்சுக்கே
எத்திசைச் செல்வமும் ஈடாகி நின்றிடுமா?

வாயொழுகும் நீர்குளித்தே வந்துவிழும் மழலைக்கே
போயெங்கும் ஈடொன்றைப் பார்க்க இயன்றிடுமா?

பூவிதழில் நெளிந்து புரண்டுவரும் புன்னகைக்கே
பூவுலகும் அந்தப் பொன்னுலகும் ஈடாமா?

எட்டி நடைபயிலும் இடையசைவின் எழிலுக்கே
கட்டிவைத்த நடனங்கள் கால்தூ சாகிடுமா?

மேல்விழுந்து புரண்டு வழங்குமந்த முத்தத்தை
மேலுலகப் பொன்மகளிர் வழங்கமிழ்தம் வென்றிடுமா?

செல்வத்தில் ஈடில்லா அச்செல்வம் பெற்றோரே
செல்வத்தைப் பெற்றோராம்; மற்றோர் பெறாதோர்;
குழந்தை
தொடரும் பரம்பரையின் சிறிய அணுத்துளி;
படரும் ஆலமரச் சந்ததியின் விதைக்கூறு;

தலைமுறையின் மகரந்தம் பரப்பும் ஒருகாற்று
தலைகளைத் தந்தையாக்கும் ரசவாதத் தொருகுளிகை;

பொருளற்ற வாழ்வைப் பொருளுற்ற தாக்கியோர்
பொருளாக்கும் அந்தப் பொருளுக் கீடேது?

கள்ளமிலாச் சிரிப்பு; களங்கமி லாக்கண்கள்
உள்ள மெலாந்தூய்மை எனவிளங்கும் தெய்வமது;

முந்நூறு நாள்சுமந்து பெற்றபெரு வேதனையைப்
பெண்ணவள் மறக்கச் செய்வதப் பிஞ்சுதானே!
;;;

Tuesday, September 11, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                     கண்ணதாசன் ஒரு பொழில்
            (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
                     கண்ணதாசன் விழா--29-07-07 )
வானாகி விரிந்தவனைக் கவிதை யென்னும்
   மலையாகி உயர்ந்தவனைக் கருத்து வெள்ளத்
தேனாறாய்த் தவழ்ந்தவனைக் களிப்பை யூட்டும்
   தென்றலாகி அணைத்தவனைக் கண்ணன் என்னும்
கான்மழையின் வெள்ளமோடிக் கலக்கும் ஆழக்
   கடலாகி ஆழ்ந்தவனைப் பொழிலாய்க் காட்ட
நான்தானா கிடைத்திட்டேன்? சோலைக் குள்ளே
   நுழைந்தாடச் சரியான குரங்கு தான்நான்.

மதுவுக்கும் போதைவரப் பாட்ட ளித்த
   மாமன்னன்; திரையுலகம் என்னு மந்த
மாதுக்கும் போதைவர ஆட்டு வித்த
   மயக்குமொழிப் பாட்டுவீச்சுக் காரன்; அந்த
மதிமயக்கும் கண்ணனையே மயங்க வைத்த
   மாமாயக் கண்ணதாசன்; அவனை யிங்கே
எதெதுவாக வோஆக்கிப் பார்க்கின் றோம்நாம்;
   என்கடனோ பொழிலாக்கிப் பார்த்தல் தானே;

வண்டாடும் மலர்ச்சோலை யென்றால் அங்கே
   வந்தாடும் தென்றலுக்குக் குறைவா? வாசம்
கொண்டாடும் மலர்க்கூட்டம் சேர்ந்தால் அங்கே
   குழைந்தாடும் மணத்திற்குக் குறைவா? கண்கள்
கண்டாடும் எழிற்சோலை நுழைந்தால் உள்ளம்
   களிக்கின்ற அழகுக்குக் குறைவா? பாட்டைக்
கொண்டாடி வென்றிட்ட கண்ண தாசக்
   குளிர்சோலைக் குள்மனசு குதித்தா டாதா?

பொழிலுக்குள் மணமலர்கள் மட்டுந் தானா
   பொலிந்திருக்கும்? வாழ்ந்துபார்த்த கண்ண தாசப்
பொழிலுக்குள் நுழையுங்கள்; முட்கள் மத்தி
   பூத்திருக்கும் ரோசாக்கள் உமையே ஈர்க்கும்;
எழில்பொங்கும் ரோசாவைத் தொட்டால் உங்கள்
   இளவிரலைக் கூர்முட்கள் பதமும் பார்க்கும்;
அழகுவிஞ்சும் கண்ணதாசன் பாட்டுக் குள்ளே
   அகங்குத்தும் முள்ளிருக்கும் மறந்தி டாதீர்!

பாட்டுமகள் அவனிடத்தே தஞ்ச மாகிப்
   பைந்தமிழில் சந்தமென ஆடி நின்றாள்;
கேட்டவர்கள் செவிக்குள்ளே தேனாய்ப் பாய்ந்து
   கிறுகிறுக்க வைத்திட்டாள் கவிதை நங்கை;
பாட்டுக்கென் றேபிறந்த மகனும் சந்தப்
   பாட்டணங்கும் தமிழ்ச்சோலை தனிற்கு லாவக்
கூட்டுக்குப் பிறந்தவெல்லாம் கொள்ளை இன்பம்
   கூட்டுகின்ற தமிழ்ப்பாடற் சேயின் கூட்டம்

மணம்நிறைந்த மலர்பூத்த தன்மை யாலும்,
   வண்டுகட்குத் தேனீந்த பெருமை யாலும்,
மணம்பரப்பும் தென்றலங்கே தவழ்வ தாலும்,
   மனங்கவரும் சிட்டுக்கள் திரிவ தாலும்,
கணங்களென அரம்பையர்கள் ஆட லாலும்,
   கந்தர்வர் போலிசைஞர் இசைப்ப தாலும்,
குணமூட்டும் பொய்கையலை தவழ்வ தாலும்,
   கொள்ளைகொண்ட பாட்டுமகன் சோலை யேதான்

எப்போதும் மலர்க்கூட்டம் நிறைந்த ஒன்றே
   இனியபொழில் என்றிட்டால் கவிஞர் தன்னை
எப்போதும் எவ்விடத்தும் மலர்கள் மத்தி
   இனியமுறை பார்ப்பதனால் பொழிலே என்றால்
தப்பில்லை; அவர்முகமே அன்ற லர்ந்த
   தாமரைதான்; வாயசைவோ இதழ்க ளேதான்
ஒப்பின்றிப் பாடுமவர் இசையைக் கேட்டால்
   உலகுமகிழ் குயிலுக்கும் நாணம் தோன்றும்.

இவனைப்போல் உயிருடனே இருக்கும் போதே
   இரங்கற்பாப் பாடியவன் யாரு மில்லை;
இவனைப்போல் தன்வாழ்க்கைச் செய்தி யெல்லாம்
   ஒளிக்காமற் சொன்னவர்கள் யாரு மில்லை;
இவனைப்போல் யாரையுமே முழுதாய் நம்பி
   ஏமாந்தோர் யாருமில்லை; பொழிலென் றாலே
இவனைப்போல் ஒளிவுமறை வின்றி யார்க்கும்
   இனிமைதரும் பண்புடைய ஒன்று தானே. ,..   

Thursday, August 30, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                      ஏனடி மறந்தாய்?

தென்றலும் வந்தது; தீங்குளிர் வந்தது;
  தேமலர்ச் சோலையில் பாடிடும்
வண்டினம் வந்தது; மலரினை மொய்த்தது;
   மயங்கிய பூக்களூம் ஆடிட
நின்றிசை பெய்தது; நீள்கதிர் மாய்ந்தது;
   நிரம்பின செவ்வொளி யெங்கணும்;
என்றனைக் கொன்றிட வந்தது மாலையும்;
   ஏனடி நீவர மறந்தனை?

பூங்குயில் வந்தது; புள்ளினம் வந்தது;
   பூத்திடு மலர்களும் சிரித்தன;
மாங்கனி யொன்றினைத் தீண்டிடும் அணிலெனை
   மாய்த்திடு வகையினில் நகைத்தது;
தாங்கிய ஆவலில் தாவிடு பார்வையில்
   தவித்திடு மென்னிலைக் கிரங்கியே
வீங்கிய மாலையும் வீழ்ந்தது; சோலையில்
   விரைந்திட ஏனடி மறந்தனை?

கார்முகில் வந்தது; களிமயில் வந்தது;
   களிப்பொடு தோகையை விரித்தது;
சீர்நடம் பயின்றது; சிந்தையைக் கொண்டது;
   சிந்திய பூவினப் பாயலில்
போரினைத் துவக்கியே பூஞ்சிறைச் சிட்டினைப்
   புல்லிப் புரண்டது ஆணிணை;
பாரினில் மாரன்கை ஓங்கிய வேளையில்
   பாவையே ஏன்வர மறந்தனை?

                      10--11--61
   
   ;
   

Wednesday, August 29, 2012

மாற்றம்

                         மாற்றம்

பதித்தவிதை முளையாகித் தளிரா யாகிப்
   படர்ந்துவரு கொடியாகி நுனியில் முத்துப்
பதித்ததுபோல் மொட்டாகிச் சிரித்து நிற்கும்
   படர்மணத்துப் பூவாதல் இயற்கை மாற்றம்;
குதிகொண்ட நெஞ்சத்துக் குமரி கொய்யக்
   குழலேறி யழகுபெறல் அடுத்த மாற்றம்;
சுதியோடு வேண்டிநின்ற வண்டுங் கூடத்
   தொடவிரும்பா துதிர்ந்திடுதல் இறுதி மாற்றம்;

கள்ளமிலாச் சிரிப்போடு கழுத்தைக் கட்டிக்
   கைகொட்டி மேல்விழுந்து முத்த மீந்த
வெள்ளையுளச் சிறுபெண்ணாள் ஒதுங்கி நின்று
   மேலாடை சரிசெய்து நிலத்தைப் பார்த்தே
உள்ளத்து மகிழ்ச்சிக்கோ ரணையைக் கட்டி
   ஓரத்தில் இதழசைத்துத் தூர நின்று
வெள்ளத்தி லாடுமிளங் கொடியைப் போல
   விளங்குகின்ற நிலையதுதான் பருவ மாற்றம்;

கொத்துகின்ற கலைகற்றுக் கொடுத்துக் குப்பை
   கிளறியதிற் கிடைத்தவற்றைக் குஞ்சுக் கீந்து
தத்துமிளங் குஞ்சுகளைச் சிறகிற் காத்துத்
   தனியன்பு காட்டிட்ட கோழி யோர்நாள்
தத்துகின்ற குஞ்சதுவும் பெரிதா யானால்
   தன்னருகும் நெருங்கவிடா தோட்டி யோட்டி
கொத்துகின்ற நிலையதுவே அன்பின் மாற்றம்;
   கோழியினப் பெருக்கத்திற் கதுவும் வேண்டும்

காலைவரும்; இருள்மாறும்; வானில் மெல்லக்
   கதிரேறும்; ஆட்சிசெய்யும்; பின்ன ராங்கே
மாலைவரும்; கதிர்மறையும்; குளுமை காட்டி
   வட்டநிலா வான்பரப்பில் ஆட்சி கூட்டும்;
காலையிலே துவங்கிமறு காலைக் குள்ளே
   கடுகிவரு மாற்றந்தான் நாளின் மாற்றம்;
வேலைசூழ்ந் தோய்வின்றிச் சுழலு கின்ற
   வியனுலகிற் கிம்மாற்றம் என்றுந் தேவை.

மாற்றத்தை வேண்டுவதே உலகி யற்கை;
   மனிதவுடல் நாள்தோறும் மாறும்; அந்த
மாற்றத்தை வளர்ச்சியென்போம்; அறிவு சேர
   மனமதுவும் மாறுமதை மலர்ச்சி என்போம்;
தோற்றத்தி லிருந்தபடி இருப்பின் யாதும்
   துளிப்பெருமை பெறுவதில்லை உண்மை; ஆனால்
மாற்றத்தால் நன்மைவர வேண்டும்; வீணே
   மாற்றத்தால் பயனில்லை; மாற்றம் வெல்க!

           (1968 ல்மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின்
            எட்டாம் ஆண்டுக் கவிதைப் போட்டியில் முதற்
            பரிசு பெற்றது.வழங்கியவர் கலைஞர்.)  
    .

puthiyathor ulagu seyvom


 புதியதோர் உலகு செய்வோம் ----சேவை
                    (திருச்சி வானொலி--14-01-69- பொங்கற்
               கவியரங்கம் )

இதற்குமுன்னே புத்துலகம் சமைக்க எண்ணி
   இவ்வுலக நெருப்பாற்றில் நீந்தி உள்ளம்
வதைப்பெய்தி உடல்கருகிச் செத்த சான்றோர்
   வரலாறு நன்றாகத் தெரிந்தி ருந்தும்
புதிதாக உலகத்தைச் செய்வோ மென்று
   புறப்பட்ட கவிஞர்காள்! உணர்ச்சி வேகக்
கொதிப்பினிலே புறப்பட்டீர்!  அய்யோ பாவம்!
   கொடுங்குளவிக் கொடுக்கினிலே கைவைக் கின்றீர்.

இருக்கின்ற சமுதாய நிலையை ஆங்கே
   ஏழையினம் வாழ்கின்ற முறையை, இன்னும்
இருக்கின்ற சீர்கேட்டை யெல்லாம் நாமா
   எடுத்துரைத்து நாடறிதல் வேண்டும் ? கையில்
இருக்கின்ற புண்ணுக்குக் கண்ணா டீயா?
   எரிகின்ற நெஞ்சுக்கு விளக்கம் வேறா?
விரிக்கின்ற வாய்ப்பந்தல் தொலைத்துச் சேவை
   விரித்திட்டால் புதிதாக உலகம் ஆகும்.

சாதியினை, வேற்றுமையை, அதனால் கூடும்
   சஞ்சலத்தைத் தவிர்க்கவெனச் சான்றோன் காந்தி
ஆதிமுதற் சேவைசெய்தான்; உயிரும் ஈந்தான்;
   அதற்குப்பின் தொண்டரென்பார் பெருகக் கண்டோம்;
சாதிப்பேய் தொலைந்ததுவா? பேயாட் டத்தில்
   சமுதாயம் பிழைத்ததுவா? மணக்க லப்பால்
சாதியொன்று புதிதாக முளைத்த லன்றிச்
   சமுதாயம் எப்பயனைக் கண்ட தய்யா?

மேடையிலே நாப்பறையை அடிப்பார்; சாதி
   வேற்றுமையைச் சொல்லிமனம் துடிப்பார்; கண்ணீர்
மேடையினை மூழ்கடிக்க நடிப்பார்; தீயில்
   வேகின்ற புழுப்போலத் தவிப்பார்; பேச்சு
மேடையிலே கைதட்டைக் குவிப்பார்; தேர்தல்
   வந்துவிட்டால் தன்சாதி பெரிதாய்க் காட்டித்
தேடுகிறார் நம்வாக்கு நமக்கே என்று;
   செயல்வீரர் இவர்தொண்டர்; செயல்தான் சேவை.

பறவைக்குச் சிறுபுழுக்கள் படைத்தான்; நச்சுப்
   பாம்பிற்குத் தவளையினைக் கொடுத்தான்; அந்தச்
சிறுபுழுக்கென் றழுக்குகளை வைத்தான்; துள்ளும்
   தவளைக்குப் பூச்சிகளைக் குவித்தான்; காட்டில்
திரிகின்ற விலங்குகட்கும் உணவைத் தந்தான்;
   தேடியுண்ணும் வலிமையொடு வழியுந் தந்தான்;
பிறந்திட்ட ஏழைகளுக் கென்ன வைத்தான்?
   படுந்துன்பம் தலைவிதியா? அதுவா நீதி?

வயல்நீரைப் பயிரெல்லாம் ஏற்கும்; சோலை
   வருதென்றல் மலர்க்கெல்லாம் பொதுவா யாகும்;
கயல்மீன்கள் குளத்துணவைப் பொதுவாய்க் கொள்ளும்;
   கலைமதியின் ஒளிவெள்ளம் பொதுவா யாகும்;
குயிலிசையும் பொதுவாகும்; இறைவ னிங்கே
   கொடுத்திட்ட எல்லாமே எல்லார்க் காகும்;
மயல்நிறைந்த இவ்வுலகச் செல்வ மொன்றே
   மாளிகைக்குத் த்னியான உடைமை யாகும்.

குழிவிழுந்த கன்னத்தை, வளைந்த கேள்விக்
   குறிபோன்ற உடல்தன்னை, தெய்வத் தின்மேற்
பழிபோட்டுப் பசிதீர்க்கும் நிலையை, நாளும்
   பணத்திற்காண் மகன்நோகும் பாட்டை, மிக்க
இழிநிலையில் இரந்துண்ணும் செயலை, ஏதும்
   இயலாது மடிகின்ற துணிவை, இந்தக்
குழிகளையே மூடிவிட்டுச் சமமா யாக்கிக்
   கூட்டிவிட்டால் புதுவுலகம் அதுதான் சேவை.

இருப்போனை இல்லானாய்ச் செய்ய வேண்டாம்;
   இல்லானை இருப்போனாய்ச் செய்வோம்; மேனி
பெருப்பானை இளைப்பானாய்ச் செய்ய வேண்டாம்;
   பெருத்திடவே இளைத்தானைச் செய்வோம்; வீட்டில்
இருப்போரைத் தெருவிழுக்க வேண்டாம்; வாழ
   இல்லாதோர் இல்லமுறச் செய்வோம்; இந்தத்
திருப்பத்தைத் துணிவோடு செய்திட் டால்தான்
   தேடிவந்த புதுவுலகம் கண்ணிற் காணும்.

சமுதாய வாழ்க்கையிலே தேங்கி நிற்கும்
   சாக்கடையைத் துப்புரவு செய்தல் வேண்டும்;
சமுதாய நிலத்தினிலே மண்டி நிற்கும்
   சாதியெனும் களைதன்னை நீக்க வேண்டும்;
சமுதாயப் பாதையிலே மேடு பள்ளம்
   தடுமாறச் செய்கிறதே அதனை இந்தச்
சமுதாயக் காவலர்கள் சரிசெய் தால்தான்
   சமநிலையில் புத்துலகம் அமைதல் கூடும்.

ஏடெடுத்துப் பாட்டெழுதுங் கவிகாள்! நாம்தாம்
   இதுவரையில் எதைஎதையோ பாடி விட்டோம்;
கோடுயர்ந்த பிறையினையே பாடி வந்தோம்;
   கூடியொளிர் மீனினத்தைப் பாடி வந்தோம்;
ஓடிவரு தென்றலினைப் பாடி வந்தோம்;
   உள்ளமுணர் காதலினைப் பாடி வந்தோம்;
தேடியொரு சேவையினிச் செய்வோம்; நம்மைச்
   சுற்றியுள்ள ஏழைகளைப் பாட்டிற் காண்போம்.

மாலைவரை வீடுகட்டும் தொழிலைச் செய்து
   மனையின்றித் தெருவோரம் தூங்கு வோரை,
சேலைவகை நவநவமாய்ச் செய்து விட்டுச்
   சுற்றவொரு துணியின்றி வாடு வோரைக்,
காலைமுதல் மாட்டோடு பாடு பட்டுக்
   கதிரறுத்துப் பசியோடு திரும்பு வோரை,
மாலையிலே வீடுவந்தும் அமைதி காணா
   வக்கற்ற ஏழைகளைப் பாட்டிற் கண்போம்.

ஒட்டியுள்ள அவர்வயிற்றை, உடம்பின் எண்சாண்
   ஒருசாணாய்க் குறுகிவரும் நிலையை, என்பில்
ஒட்டியுள்ள தோலுடலை, அதனைப் போர்த்த
   இல்லாத வறுமையினை, அவனை வாழ்விற்
கட்டிநொந்த பெண்கொடியைப், புன்சி ரிப்பைக்
   காணாத அவள்முகத்தை, மக்கள் தம்மை
எட்டியுதைத் திடுமந்த எரிச்சல் தன்னை,
   ஏட்டினிலே பாடிவைத்தாற் குறைந்தா போகும்?

நிலவுதனைப் பாடியது போதும்; ஆடும்
   நீளலையைப் பாடியது போதும்; சோலை
கலகலக்கும் குயிற்பாட்டுப் போதும்; கூடும்
   காதலினைப் பாடியது போதும்; வீரக்
களத்தினையே பாடியது போதும்; பெண்கள்
   கற்பினையும் பாடியது போதும்; இந்த
நிலையில்லாச் சமுதாய வாழ்க்கை நன்கு
   நிலைபெறவே புதியமுறைப் பாடல் செய்வோம்.  
   
   

Sunday, August 5, 2012

விடியலும் உண்டா ?

      விடியலும் உண்டா?

தவறுகள் நியாய மாகிச்
  சாதனை படைக்கும்; வென்ற
தவறுகள் ஊர்வ லம்போய்ச்
  சந்தியில் முழங்கும்; நீதி
கவலையே யின்றிக் கண்ணைக்
  கட்டியே தூங்கும்; இந்த
அவலமே நடப்பா யாகும்
  அவனியில் விடிய லுண்டா?

வேலியே பயிரை மேயும்
  வேதனை திகழும்; பெண்ணின்
தாலியே சுருக்காய் மாறிச்
  சாவினை நிகழ்த்தும்; கெட்ட
காலிகள் கூட்டுச் சேர்ந்தே
  காரியம் முடிக்கும்; நாளும்
போலிகள் வெல்லு மிந்தப்
  பூமியில் விடிய லுண்டா?

சத்தியம் குத்துப் பட்டுச்
  செத்திடும்; தர்ம மிங்கே
நித்தமும் வெட்டுப் பட்டே
  நடுங்கிடும்; நேர்மை நாட்டில்
சுத்தமாய்த் துடைக்கப் பட்டுத்
  துவண்டிடும்; நியாயம் நாளும்
கத்தியே ஒடுங்கும்; இந்தக்
  காசினி விடிய லுண்டா?

காந்திகள் நெஞ்சைப் பாவக்
  குண்டுகள் துளைக்கும்; வஞ்சம்
ஏந்திகள் நெஞ்சம் மாலை
  ஏந்தியே சிரிக்கும்; சூழ்ச்சி
மாந்துவோர் வாழ்க்கை நாளும்
  மகிழ்வினில் செழிக்கும்; தூயோர்
சாந்தியே இன்றி நையும்
  சகத்தினில் விடிய லுண்டா?
             -அமுதசுரபி தீபாவளி மலர்-92      

சுதந்திரம்

                                சுதந்திரம்

கற்பனைச் சிறகின் மீதேறி--வானக்
  கருமுகிற் கூட்டம் கிழித்தெறிந்தே
அற்புதச் சுதந்திரக் கனவுகளில்--நம்
  அகங்கள் மிதந்திடக் கனவுகண்டோம்

கையில் சுதந்திரக் கனிபெற்றோம்--அதைக்
  கண்ணுற உருட்டிக் களிப்புற்றோம்
கையில் கிடைத்ததை வாய்சுவைக்க--அங்கே
  'கடக்'கெனப் பல்லுடை படுகிறது.

கனிக்குளே கல்லா? வியக்கின்றோம்!--ஆனால்
  கடைப்பல் உடைவதை உணர்கின்றோம்
இனிப்புள சுதந்திரக் கனிக்குள்ளே--ஊழல்
  எப்படிக் கல்லெனப் புகுந்ததுவோ?

கனிச்சுளை யெல்லாம் கல்லானால்--அந்தக்
  கனிபெறும் பெயர்வே றாகாதா?
கனிக்குளே கலந்துள கற்களையே--கழித்துக்
  கனியினைக் காத்திட வேண்டாமா?

சுதந்திரக் காற்றில் கிருமிகளாய்--ஊழல்
  கலந்திடக் கண்டும் பொறுத்திருந்தால்
சுதந்திர நாடே அழியாதா?--அதன்
  சுவாசக் காற்றுநஞ் சாகாதா?

காற்று வெளியெலாம் நஞ்சானால்--நம்
  கண்ணெனும் தாய்நா டழியாதா?
கூற்றுவ னாய்வரும் அந்நஞ்சை--நாம்
  கொன்று காத்திட வேண்டாமா?

இனியொரு சுதந்திரப் போராட்டம்-- இங்கே
  எழுந்துதான் நாடு பிழைத்திடுமா?
கனியினைக் குரங்குகைக் கொடுத்துவிட்டே--நாம்
  கதறினால் கனிகளே பிழைத்திடுமா?

சுதந்திர நாட்டுக் குடிமகன்கள்-- பிழை
  செய்திடா உணர்வே பெறவேண்டும்.
இதந்தரு நன்மை பெருகிடவே--தூயோர்
  இங்குவந் தாட்சிகள் செயவேண்டும்.

சுதந்திரக் கனியைச் சுவைத்திடுவோம்--நாம்
  சொல்லொணாப் பெருமகிழ் வடைந்திடுவோம்
சுதந்திர நாட்டின் குடிகள்நாம்--என்றும்
  தூய்மை வாய்மை யுடன்வாழ்வோம். 

Saturday, August 4, 2012

ஏனிந்தப் பிறவி

                             ஏனிந்தப் பிறவி ?

ஏனிந்தப் பிறவி? எனக்குத் தெரியவில்லை;
நானிந்தப் பிறவி விரும்பி எடுக்கவில்லை;

நாயாய்ப் பிறந்திருந்தால் நன்றிக்கு விளக்கமாவேன்
காயாய்ப் பிறந்தாலும் கனியாகிப் பயன்தருவேன்

புழுவாய்ப் பிறந்தாலும் மண்ணை உரமாக்கி
உழுவார்க் கொருபயனை உதவி மகிழ்ந்திருப்பேன்;

மனிதனாய்ப் பிறந்துவிட்டேன்; மனிதனாய் வாழவில்லை;
மனசுக்குள் ஒருபாதி மிருகமாய் வாழ்கிறது;

நேர்மை தூய்மைவாய்மை எனக்குப் புரியவில்லை;
சீர்மை எனஒன்று தேவைதானா? தெரியவில்லை;

சுற்றிப் பார்க்கின்றேன்; எனைச்சுற்றிப் பெருங்கூட்டம்;
உற்றுப் பார்க்கின்றேன்; மனிதன்யார் தெரியவில்லை;

குள்ள நரியாகிக் குழிபறிப்போர்; எப்போதும்
உள்ளத்தை மறைத்தே ஒழுகும் திருக்கூட்டம்;

கண்ணீரைக் கொட்டிக் கதறியழு தணைத்தவர்கள்
வெந்நீரை ஊற்றி வேடிக்கை காட்டுகின்றார்;

கொள்கை என்றாலே கொள்ளுங்கை என்கின்றார்
கொள்கையைப் புதைக்கலாம்; ஆதாயம் குறியென்பார்;

எனைச்சுற்றி இவர்களே இருக்கையில் இவ்வுலகில்
எனக்கிந்தப் பிறவி ஏன்கொடுத்தாய் இறைவாநீ?

கண்குருடாய்ப் படைத்திருந்தால் கொடுமையின் கூத்தாட்டம்
க்ண்ணிற் படாமல் களிப்போடு வாழ்ந்திருப்பேன்;

செவிபழுதாய்ப் படைத்திருந்தால் தீமைகளின் கூக்குரல்கள்
புவியைப் புரட்டுவதைக் கேளாமல் வாழ்ந்திருப்பேன்;

இதயம் எனஒன்றைப் படைக்காமல் இருந்திருந்தால்
இதயமிலா மனிதரினை எண்ணாமல் இருந்திருப்பேன்;

ஏனிந்தப் பிறவி எனக்களித்தாய்? நாள்தோறும்
நானிந்தப் பிறவிகளைப் பார்த்து நோவதற்கா?

நெஞ்சுக்கும் வாய்க்கும் நெடுந்தூர மாகிறது;
வஞ்சமும் சூழ்ச்சியும் வீதிநட மிடுகிறது;

குத்தாட்டம் ஆடுகின்ற கொடுமைகளைக் கண்டுதினம்
செத்துப் பிழைக்கின்றேன்; எனக்கேன் இப்பிறவி?

தூய்மை திகழுமிடம்; சீர்மை வாழுமிடம்;
வாய்மை வெல்லுமிடம் இருந்தால் பிறக்கவைப்பாய்;

அப்படியோர் இடமுனக்கே தெரியவில்லை என்றிட்டால்
இப்படிப் பிறவிவேண்டாம்; நீயே பிறந்துவா;

வந்துபார்! நீபடைத்த உலகத்துக் கொடுமைகளை
நொந்துபார்! பிறகுநீயே ஏதேனும் முடிவையெடு;

அதுவரை எனக்கேதும் பிறவி அளிக்காதே!
இதைமீறிப் படைத்தால்நான் என்னசெய்வேன்? தெரியாது.; 

Saturday, July 28, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                             பாவேந்தர்

பூவேந்தி நிற்கின்ற இதழ்க ளெல்லாம்
  பொலிவுடனே என்றென்றும் நிலைப்ப தில்லை;
காவேந்தி நிற்கின்ற மரங்க ளெல்லாம்
  கனிகாய்கள் என்றென்றும் தருவ தில்லை;
நாவேந்தி நாம்துப்பும் சொற்க ளெல்லாம்
  நல்லினிமை தந்தென்றும் திகழ்வ தில்லை;
பாவேந்தர் நாவேந்தி உதிர்த்த சொற்கள்
  பைந்தமிழில் என்றென்றும் இனிக்கக் கண்டோம்.

இயற்கையினைப் பாடினாலும் இனிக்கும்; நாட்டை
  இடித்துரைத்துப் பாடினாலும் இனிக்கும்; சமய
மயக்கத்தைப் பாடினாலும் இனிக்கும்; ஏழை
  மக்களினைப் பாடினாலும் இனிக்கும்; பெண்கள்
செயற்கையழ குணர்த்தினாலும் இனிக்கும்; அன்னார்
  சிரிப்பழகைப் பாடினாலும் இனிக்கும்; சற்றும்
மயக்கமில்லாச் சொற்கூட்டி எதைச்சொன் னாலும்
  மனசெல்லாம் இன்பமழை பொழியு தந்தோ!

பாரதியின் தாசனென ஆனார்; அய்யர்
  பாட்டுக்கே நானடிமை எனஉ ரைத்தார்;
பாரதியை இகழ்ந்துவிட முனைவோர் தம்மைப்
  பளிச்செனவே அறைவதுபோல் பாடல் தந்தார்;
பாரதியின் சமுதாயப் பார்வை வித்தைப்
  பரந்துநிற்கும் ஆலமர மென்ன வாக்கி
வீரமுடன் தீரத்தைக் காட்டிச் சொல்லால்
  வெல்லுகின்ற கவிதைகளை விதைத்து நின்றார்.

பெண்களினை எவரிவர்போல் பார்த்தார்? பெண்கள்
  படுந்துயரை எவரிவர்போல் இடித்து ரைத்தார்?
புண்நிறைந்த சமுதாய உடலில் தூய
  புதுரத்தம் எவரிவர்போல் பாய்ச்சி நின்றார்?
கண்களெனும் பெண்களிங்கே கைம்பெண் ணாகிக்
  கோரிக்கை யற்றதொரு வேர்ப்ப லாவாய்க்
கண்குருதி சிந்திடவே நையும் காட்சி
  கவிதையிலே எவரிவர்போல் பாடி வைத்தார்? 

Wednesday, July 25, 2012

வானொலிச் சிற்றுரைகள்

                            நேர்மை

  நாம் விடுதலை பெற்றுக் குடியரசு நாட்டில் வாழ்கிறோம்.

  எல்லோரும் இந்நாட்டு மன்னராகி விட்டோம். அதாவது ஆளப்படும்
ஒரு குடிமகனாகவும், அதே நேரத்தில் ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும்
அதிகாரம் படைத்தவனாகவும், ஒவ்வொரு குடிமகனும் திகழ்கிறான்.
அவனே ஆள்வோனாக மாறவும் வாயில் திறந்தே உள்ளது.
 
  இத்தகைய மாபெரும் பொறுப்பைத் தாங்கியுள்ள ஒவ்வொருவனும்
சான்றாண்மைத் தகுதி மிக்கவனாகத் திகழ்வானாயின் நாடு உலகிற்கே
பேரொளி கொடுக்கும்.

  அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
  நம் உள்ளத்திற்குள்ளே ஓர் உள்முகப் பயணம் சென்று நம் உள்ளம்
தூய்மையுடன் திகழ்கிறதா என்று நுணுகி ஆய்ந்து பார்க்க வேண்டும்.
 
  நாம் பேசுகின்ற சொல்லில், செய்கின்ற செயலில், தூய்மை இருக்க
வேண்டும். சொல்லும், செயலும் தூய்மையாக வேண்டின் அவற்றை
இயக்கும் மனம் தூய்மையுடன் திகழ வேண்டும்.

  இவ்வாறு மனம், சொல், செயல் மூன்றும் இணைந்து தூய்மையுடன்
ஒருவன் திகழ்ந்தால் அவன் நேர்மையாளன் என்று போற்றப் படுவான்.

  இந்த நேர்மை, உள்ளே வீட்டிலும், வெளியே சமுதாயத்திலும் சுடர்விட
வேண்டும்.

  சமுதாயம் ஓர் ஆலமரம் என்றால், அதன் கிளைகளாகவும், விழுதுகளாக
வும் பல்வேறுபட்ட தொழில் வகைகள், வணிகங்கள் விளங்குகின்றன.

  இந்தக் கிளைகளிலும், விழுதுகளிலும் நேர்மை நிறைந்து திகழ வேண்டும்.

  "கொள்வதும் மிகைகொளாது, கொடுப்பதும் குறைகொடாது" நேர்மையுடன்
வணிகம் நடக்க வேண்டும்

  "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
   பிறவுந் தமபோற் செயின்"---என்பது வள்ளுவம்.

  வணிகம் பற்றிய இந்தச் செய்தி நடுவுநிலைமை அதிகாரத்தில் வருவதிலிருந்தே
வணிகத்திற்கு நேர்மை எவ்வளவு தேவை என்பது தெரியவரும்.

  பிறரை ஏமாற்றாமல், தானும் ஏமாறாமல் நேர்மையுடன் வணிகம் திகழ வேண்டும்.

  சமுதாய உறுப்புகளில் ஒன்றுதான் வணிகம். இன்னும் எத்துணையோ அலுவலகங்
கள், ஆட்சி மன்றங்கள் எனக் குடியரசாட்சியில் நேர்மையுடன் செயல்பட வேண்டிய
பொறுப்பகங்கள் நிறைய உள்ளன.

  குடியரசின் தூண்களாகிய நாம் உரிமைகள் நிறையப் பெற்றுள்ளோம். அதே நேரத்தில்
நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறையவே உள்ளன.

  அவற்றை நாம் மனதில் இருத்தி எப்பணி செய்தாலும், தூய்மையுடன், நேர்மையுடன்
அப் பணியைச் செய்து முடிக்கும் திடமும், உள்ளத் துணிவும் நமக்குத் தேவை.

  நேர்மை சிதறுகாயாகி எந்தெந்தத் தெய்வங்கள் முன்னாலேயோ உடைக்கப் படுவதை
நடைமுறையில் பார்க்கிறோம்.

  இன்றைய உலகில் நேர்மையுடன் வாழ்தல் இயலாது என்ற கருத்து வலியுறுத்தப்
படுகிறது.

  இது தவறு என்பது மட்டுமன்று; இத்தகைய நினைப்பே சமுதாயத்தை, அதன் விரிவாகிய
நாட்டை உருத் தெரியாமல் அழிக்கக் கூடிய ஒரு புற்றுநோய்க் கிருமி என்பதை நாம் உணர
வேண்டும்.

  புகழை நிறுத்தி வாழ்ந்து மறைந்தவர்களே இன்றும் பேசப் படுகிறார்கள்.

  " மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே." --என்று புறநானூறு கூறுவது போல, உலகம் நிலையில்
லாதது; ஆனால் புகழ் நிலையானது.

  அத்தகைய புகழை நிறுத்த வேண்டுமாயின், நம் உள்ளத்தில் நேர்மையை நிலைநிறுத்த
வேண்டும்.

  வேதனைத் தீயில் வெந்து மடிந்தாலும், சோதனை தாங்காது துவண்டு நைந்தாலும்,
நேர்மை என்ற ஒன்றை உயிருள்ளவரை கடைப்பிடித்து வாழ்ந்தவனே வாழ்ந்தவனாவான்.

  வாய்மையுடன் திகழ்ந்த அரிச்சந்திரன் அடைந்த துன்பங்கள் அவனை வழிமாறச்
செய்யவில்லையே!.

  நம் காலத்தில் காந்தியடிகள் பட்ட இடர்கள் அவர் பாதையை மாற்றவில்லையே!

  இறுதி வரை நேர்மை கடைப்பிடித்து வாழ்ந்தமையாலேயே அவர்கள் இன்றும் பேசப்
படுகிறார்கள்.

  நம் சொல்லோ, செயலோ, வேண்டியோர்- வேண்டாதோர் என்ற பாகுபாடின்றி ஒரே
செம்மைத் தன்மையுடன் திகழ்வதே நேர்மை.

  இத்தகைய நேர்மை இன்றையச் சூழலில் ஆளும் வாய்ப்பைத் தரும் வாயிலாகிய
அரசியலில் இருப்போரிடம் மிக மிகத் தேவை.

  முடியுமா? என்ற ஐய வினாவை எழுப்பாமல், முடியும் என்ற முடிவோடு ஒவ்வொரு
வரும் தம்முடைய உள்ளத்தில் நேர்மை நின்று நிலவச் செய்தால், வீடு, சமுதாயம்,
நாடு அனைத்தும் புகழொளி பெற்றுப் பொலிவுடன் திகழும் என்பதில் ஐயமில்லை.
.

Wednesday, July 4, 2012

Re: சவகர்லால்--வானொலிச் சிற்றுரைகள்


             Re: சவகர்லால்--வானொலிச் சிற்றுரைகள்


                        பொறுமை

   வாழ்க்கையின் களங்கள் இரண்டு. ஒன்று வீடு ; இன்னொன்று சமுதாயம்.
 
   ஆணோ பெண்ணோ, இருவரும் வாழ வேண்டிய,இயங்க வேண்டிய
களங்களும் இவை இரண்டும் தாம்.
   நாம் வெற்றி பெற வேண்டிய களங்களும் இவை இரண்டுதாம்.
   வீட்டில் வீசுகின்ற அலைகளும், உண்டாகின்ற அதிர்வுகளும் நம்
உள்ளத்தைத் தாக்கி ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துவது போலவே
வெளியுலகென்னும் சமுதாய அலைகளும், அதிர்வுகளும் நம்மைப்
பாதிக்கவே செய்கின்றன.
   அந்தப் பாதிப்புப் பல நேரங்களில் நாம் அடக்கித் தூங்க வைத்திருக்கும்
ஆத்திரம், சினம் முதலிய உணர்வுகளைத் த்ட்டி எழுப்பி விடுகின்றன.
   ஆத்திரமும், சினமும் பொங்கியெழுந்து நம்மை நிலை  தடுமாறச் செய்து
நம் நிலைக்குப் பொருந்தாத சொற்களைப் பேச வைத்துச்,செயல்களைச்
செய்ய வைத்து விடுகின்றன.
   இவ்வளவு காலமும் நாம் கட்டிக் காத்து வந்த நம் பேரும் புகழும் கேள்விக்
குரியதாகி விடுகின்றன.
   இத்துணைக்குங் காரணம் நம் உள்ளத்தில் ஓங்கி எழுந்த சினம்.அந்தச்
சினத்தை ஓங்கி எழச் செய்த தூண்டல் வீட்டிலோ,வெளியிலோ உள்ளோர்
செய்த தவறான செயல்கள்.
   ஆக,அவர்களுடைய தவறான செய்கையால் தூண்டப் பெற்று,ஆத்திர
வயப்பட்டு நாமும் தவறையே செய்து விடுகிறோம்.
   இப்படி ஒரு தவறு நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்?
   ஆன்றோர்கள் தம் பட்டறிவு வாயிலாக நுணுகி நுணுகி ஆய்ந்து பல
கருத்துகளை நம் நெஞ்சில் பதிக்க வேண்டிக் கூறியுள்ளனர்.
   அவைகளுள் தலையாயது பொறுமை.
      பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. ஆனால் அதை நாம் ஓர்
அணியாக அணிந்து இயங்க வேண்டுமாயின் அது மிக மிகக் கடினமான பயிற்சியே.
பயிலப் பயிலத்தான் பொறுமை உள்ளத்தில் அமரும்.
     எவ்வளவோ பொறுமையாக நாம் இருந்தாலும், திடீரென ஒரு பொறி பட்டுச்
சினமென்னும் நெருப்புக் கொழுந்துவிட்டெரிய அதில் பொறுமை எரிந்து சாம்பலாகி
விடுவதைப் பார்க்கிறோம்.
    ஆத்திரம் அறிவுக்கு எதிரி. ஆத்திரம் எழுந்து விட்டால் அறிவு அட்ங்கி விடுகிறது.
அறிவைப் புதைத்து விட்டு எழுகின்ற ஆத்திரம் உமிழ்கின்ற சொற்கள் அறிவொடு
பொருந்துமா? தவறான சொற்களே தாவி விளையாட அந்த ஆட்டத்தில் நம் புகழ்
இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போகிறது.
    இத்தனைக்கும் காரணம் என்ன? எழுந்த ஆத்திரம். அதை அடக்கிவிட்டு நாம்
கொள்ளாத பொறுமை
      நெருப்பை விழுங்குவது போல நம்மைத் தாக்கிய கடுஞ்சொற்களை விழுங்கி விட்டுப்
பொறுமை காத்து ஒரு புன்னகையை நெளிய விட்டிருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும்.
        ஆனால், அது அவ்வளவு எளிதா?
       வீட்டில் விளக்கேற்ற மருமகள் வருகிறாள். ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு வரும்
பெண்ணுக்குப் பிறந்த வீட்டுச் சான்றோர் வழங்கும் அறிவுரை, 'பொறுமை என்னும் நகை
யணிந்து பெருமை கொள்ள வேண்டும்' என்பதே.
      மாமியின் அடக்குமுறை, நாத்தியின் அடங்காமுறை, எனப் பல கோணங்களிலும்
தலைவியைத் தாக்கும் பலவகைக் கணைகளையும் தாங்கிக் கொண்டு தன் பொறுப்பைக்,
கடமைகளைச் செய்து பொறுமையுடன் நற்பெயர் எடுத்து வாழ்வது பெண்கட்கு நெருப்புக்
குளியல்தான்.
    பொறுமை என்ற பண்பைத் தன்னுடைய மன இயல்பாகக் கொண்டுவிட்டால், எல்லாக்
கணைகளும் அவள் காலடியில் வீழ்ந்து நற்பயன் விளைக்கும்.
    ஆண்மகன் வெளியுலகில், சமுதாயத்தில் நடமாடுபவன். நண்பர்கள், பகைவர்கள்,
புதியவர்கள் எனப் பலரையும் சந்தித்து உறவாட வேண்டிய கட்டாயஸ் சூழலில்
உள்ளவன்.
    குறுகிய எல்லைக்குள் இருக்கும் வீட்டுத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு பெண்
தவிக்கிறாளென்றால் ,பரந்துபட்டுக் கிடக்கும் சமுதாயப் பலகோணத் தாக்குதல்களையும் தாங்கிப்
பொறுமை காத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறான் ஆண்மகன்.
       தன்னை விட வயது, அறிவு, படிப்பு, புகழ், தகுதி - இவை குறைந்தவர் தன்னை இகழ்ந்து பேசு
வதைக் கேட்டால் அவன் உள்ளம் பொங்காதா? ஆத்திரம் எழுந்து அனல் வீசாதா?
     ஆத்திரப் படாதே! என்கிறார் அய்யன்.
     பண்பட்ட நிலத்தைப் பார்! இந்த நிலம் எத்துணை தாக்குதல்கட்கு ஆளாகிறது!
    பயிர் செய்ய, வீடு கட்டச், சுரங்கம் தோண்ட, ஆற்றோட்ட வழி செய்ய, என எத்துணை தாக்குதல்
கட்கு உள்ளாகிறது?
   தன்னைத் தோண்டித் துன்புறுத்துவோரையும் தாங்கி வாழ வைக்கிறதல்லவா நிலம்!
    அந்த மண்ணை விட மனிதனாகிய நீ பண்பிற் குறையலாமா?
   
   "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
     இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
என்று நமக்கு வள்ளுவர்  கூறுகிறார்.
     இயேசு பெருமான் படாத துயரங்களா? சிலுவையில் அறையப் படும் அந்தக் கொடுமையான
நிகழ்வின் போது கூட அவர்,"இறைவா! தாம் செய்வது இன்னது என்று தெரியாமல் செய்யும்
இவர் பிழையை மன்னியும்! " என்று வேண்டினாரல்லவா?
    அந்தப் பொறுமைதானே அவர்தம் புகழாக நின்று நிலவுகிறது.
 
  "ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
   பொன்றுந் துணையும் புகழ்."
என்ற குறளின் பொருளை மனதிற் கொண்டு ,தகுதி யில்லாதார் மிகையாக ஏதும் செய்தாலும்,
நம் தகுதியால் பொறுமை காத்து அதனால் வென்று வாழ்வோமாக!
.

Saturday, June 30, 2012

Re; குறுந்தொகைச் சித்திரம்

                             நான் யார்? நீ யார்?
 
  மாலை மயங்குகிற நேரம்.ஆளை மயக்குகிற சூழல்.தென்றல் தவழ்கிறது
தேமணம் கமழ்கிறது.சோலை மலர்கள் சுந்தரப் பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.
சின்னஞ்சிறு சிட்டுகள் குறுக்கே பாய்கின்றன.
  அங்கே...அந்தச் சோலையில்...
  அப்போது..அந்த மாலை நேரத்தில்..
  தம்மை மறந்த தனிநிலையில் இருந்தனர் இருவர்.தலைவனின் கையணைப்பில்
தலைவி.
  அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் தலைவி திடீரென அவள்
கன்னங்களில் கண்ணீர் வழிகிறது. வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே
விழியைக் கூர்மையாக்கிப் பார்க்கிறான் அவன்.

"அன்பே!"
"என்ன?"
"வரக்கூடாத நேரத்தில் வரக்கூடாத கண்ணீர் வருகிறதே. என்ன காரணம்? நான் அதை
அறியலாமா?" தலைவன் கேட்டான்.
  வரக்கூடாத எண்ணங்கள் என் சிந்தனையில் வந்து மோதிய காரணம்தான் இந்தக்
கண்ணீர்." என்றாள்.
  "அப்படி என்ன சிந்தனை அன்பே!"
  "நாம் முதலில் தலைப்பட்டுச் சந்தித்து உள்ளம் பரிமாறிக் கொண்டோமே அந்த நாளை
நினைத்தேன்."
  அந்த நாள்..அதன் தொடர்பான நிகழ்ச்சிகள்..அவன் உள்ளத்திலும் படமென ஓடின.
  அன்று.. வேட்டைக்கென வந்த தலைவன் தன் தோழர்களைப் பிரிந்தான்.
  வெகு தொலைவு வந்து விட்டான்.
  தோழர்கள் வருவாரோ? அன்றி மயங்கித் திரிவாரோ?..என்று மறுகினான்.
  திடீரென ஓர் அலறல்.பெண் குரல். குரல் வந்த திசை நோக்கி ஓடினான்.
  காற்றில் ஆடும் கொடியென நடுங்கிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. முகத்தில்
பய உணர்வு படர்ந்திருந்தது.சுற்றும் பார்த்தான்.யாரும் இல்லை.யாரவள்?
எப்படி இங்கே வந்தாள்? ஏன் அலறினாள்?
  நெருங்கினான்.
  "பெண்ணே! யாரம்மா நீ? ஏன் அலறினாய்? " கேட்டான் அவன்.
  அவள் நிமிர்ந்தாள்;பார்த்தாள்; தலை கவிழ்ந்தாள்.
  முகத்தில் அச்சம் விலகி நாணம் குடி புகுந்தது.வாய்மலர் மெல்ல அவிழ்ந்தது.
  "நான்..நான்..தோழிகளோடு வந்தேன்.எப்படியோ அவர்களைப் பிரிந்து வழி
தவறி விட்டேன்.அச்சத்தோடு சுற்றும்போது புதருக்குள் ஏதோ சலசலத்தது.
புலியோ எனப் பயந்து அலறி விட்டேன்.அவ்வளவுதான். தாங்கள்

  "நானும் அப்படித்தான். வேட்டைக்கு வந்தவன்; தோழர்களைப் பிரிந்தவன்; வழி தவறியவன்.
ஆனால் இப்பொழுது எனக்குப் புரிகிறது. இருவருமே வழி தவறவில்லை. சரியான வழியில்
தான் வந்திருக்கிறோம். விதி இப்படிச் சேர்த்திருக்கிறது. விதி வழி தவறுமா?
  அவன் குறிப்பை உணர்ந்தாள் அவள். அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. நெகிழ்ந்த நெஞ்சத்தில்
அவன் குடியேறினான். அவன் நெஞ்சில் அவள் தவழ்ந்தாள்.

  இருவரும் சேர்ந்த கதை இது. அதன் பிறகு இது தொடர்கதை யாயிற்று. குறித்த நேரத்தில்
குறித்த இடத்தில் குறித்தபடி இணைந்து மகிழ்ந்தனர் அவர்கள்.
  அத்தகைய ஒரு சந்திப்புத்தான் இது. தலைவன் நினைவை விட்டு நிலைக்கு வந்தான்.
  "அன்பே! யாரென்றே அறியாத நம்மை விதி சேர்த்ததே! ஏன் வீண்  சிந்தனை?"
 
" அன்பரே! என்னை உங்கட்குத் தந்து விட்டேன். ஆனால் ஊரறியத் தரவில்லையே! இந்தக்
களவு கற்பில் முடிந்தால் தானே எனக்கு நிறைவு. மணம் நடைபெற ஏதேனும் இடையூறு
ஏற்பட்டு விடுமோ என்று என் உள்ளம் கலங்குகிறது."

  "காரணம் இல்லாத கலக்கம் கண்ணே இது. இடையூறு என்றால் விதி தானே தர வேண்டும்?
நம்மைக் கூட்டுவித்ததே அந்த விதிதானே; கொஞ்சம் சிந்தித்துப் பார்.

  "என் தாயும் உன் தாயும் உறவினர்களா? இல்லையே! என் தந்தைக்கும் உன் தந்தைக்கும்
ஏதேனும் முறையான உறவுண்டா? இல்லையே!  அது போகட்டும். நம்மைக் கூட்டுவித்த
அந்த நிகழ்ச்சிக்கு முன்னால் நான் யார்?  நீ யார்? நம்மிடையே ஏதாவது அறிமுகம் உண்டா?
இல்லையே!..எப்படிச் சேர்ந்தோம்?..அதுதான் விதி.

  "வானத்தில் மேகம் கூடுகிறது; மழையாகப் பொழிகிறது; நிலத்திலே வீழ்கிறது; மண்ணோடு
கலக்கிறது. செம்மண்ணோடு கலந்த நீர் செந்நிறமாகிறது. மண்ணின் நிறம், மணம், குணம்
அனைத்தோடும் அந்த நீர் பிரிக்க முடியாதபடி இணைகிறது. இந்த மண்ணும் நீரும்
இணைவதற்கு முன்னால் அவைகட்கிடையே ஏதேனும் உறவுண்டா? இல்லையே!..ஆனால்
இணைந்த பிறகு பிரிவதில்லையே!...

  "இதேதான் கண்ணே! நம் நிலையும். மண்ணோடு மழைநீர் சேர்கிறது. இரண்டும் ஒன்றாகிறது.
என்னோடு நீ சேர்ந்தாய். இருவரும் ஒருவரானோம். கூட்டுவித்தது விதி. செம்புலத்திலே
பெய்த நீர்போல அன்பு நிறைந்த நெஞ்சங்கள் கலந்து விட்டன. இனிப் பிரிவே இல்லை.
கலங்காதே!" என்று தேற்றுகிறான் தலைவன்.
           பாடல்;
         "யாயும் யாயும் யாரா கியரோ
          எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
          யானும் நீயும் எவ்வழி அறிதும்
          செம்புலப் பெயனீர் போல
          அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!"
                            ---செம்புலப் பெயனீரார்
                              (குறுந்தொகை..40)
.

...
 
..
     Re; குறுந்தொகைச் சித்திரம் 

Sunday, June 24, 2012

kurunthokaich chiththiram


                   ஊமையன் காவல்

      பாங்கனுக்குத் தலைவனைப் பார்க்கப் பார்க்க உள்ளம் வேதனையில் மூழ்குகிறது.
எப்படி இருந்தவன்! எத்தகைய வலிமை வாய்ந்த உடம்பு ! எத்துணைச் சுவையான
உரையாடல்! இவைகளில் எதுவுமே இப்பொழுது தலைவனிடம் இல்லை. எங்கே
அவையெல்லாம்?
     வாடிக் குலைந்த மேனியோடு, எதையோ நாடித் தவஞ்செய்யும் முனிவரைப் போல
மோனத்தில் ஆழ்ந்து விட்டான் அவன்.எப்போதும் ஒரே சிந்தனை.தேடித் திரிந்த பொருள்
கிடைக்காத ஒரு தவிப்பு.யாருமில்லாத தனிமையில் ஏதோ ஓர் உருவத்தைக் கண்முன்
கொண்டு வந்து களிக்கும் ஒரு தவிப்பு.
 
எத்தனை நாளாக இது?
பாங்கனுக்குப் புரிந்தது.
  அன்று பாங்கனும் தலைவனும் தான் சென்றார்கள்.சென்று கொண்டேயிருந்த பாங்கன்
திரும்பினான். தலைவனைக் காணோம்.அவன் அப்படித்தான். எங்கேனும் ஆடுகின்ற
மயிலோ, அசைகின்ற மலரோ, தாவுகின்ற சிட்டோ, தட்டுப்பட்டால் அந்த அழகை அங்கேயே
நின்று சுவைப்பான்.அப்படித்தான் எதோ ஓர் அழகு அவனை நிறுத்தி விட்டது என்று கருதி
ஓரிடத்தில் அமர்ந்தான் பாங்கன்.

தலைவன் வரவே இல்லை.

 நேரம் ஓடியது.பாங்கனுக்கு வியப்பு.இவ்வளவு நேரமா இயற்கையழகு அவனை இருத்தி
விட்டது? தேடிச் சென்றான் பாங்கன் அருகிருந்த சோலைக்குள்.
 
  அங்கே கொடி கொம்பைத் தழுவிக் கிடந்தது.தம்மை மறந்த நிலையில் இருவர். எதிர்
பார்க்கவில்லை பாங்கன். எப்படி நேர்ந்தது இது? யார் அவள்? யாருக்குத் தெரியும்?

  ஒரு கனைப்பினால் அவர்கள் தவத்தைக் கலைத்தான். வெட்கித் தலை குனிந்து விலகிச்
சென்றது கொடி. விட்ட தழுவலில் மெய்மறந்து நின்றது கொம்பு.

  அவள் பாங்கியர் சூழப் போய் விட்டாள். அவன் பாங்கனிடம் வந்தான்.

  "நெகிழாத உன் நெஞ்சை நெகிழச் செய்த அந்த நேரிழை யாரோ?" பாங்கன் கேட்டான்.
  "அதுதான் தெரியவில்லை. ஆனால் இதோ இந்த ஊர்தான்." தலைவன் சொன்னான்.
  "என்னப்பா! யாரென்றே தெரியாமலா உள்ளத்தை ஓட விட்டாய்?"
  "நானா ஓட விட்டேன்; அது தானாகவல்லவோ ஓடியது; எப்படி ஓடியது? ஏன் ஓடியது?
யார்க்குத் தெரியும்? ஆனால் ஒன்று சொல்வேன்.இனி அவள்தான் என் தலைவி.
அவளைத்தான் நான் மணப்பேன்." என்றான் தலைவன்.

" சரி சரி வா !" என்றழைத்துச் சென்றான் பாங்கன்.

  அன்று ஏற்பட்ட மாறுதல்தான் தலைவனிடம்.

  நாள் தவறாமல் அதே சோலைக்குச் செல்கிறான். காத்திருந்து காத்திருந்து கவலையோடு
திரும்புகிறான்
   அவள் வரவில்லையே; காண முடியவில்லையே ; அவளை 'இற்செறித்து' விட்டார்களோ?
வீட்டிலேயே சிறை வைத்து விட்டார்களோ? என்று வேதனைப் படுகிறான்.
  வேதனையின் விளைவு அவன் உடல் இளைத்தது.உணர்வுகள் செத்தன.

  பாங்கன் தவித்தான்.தலைவனின் நலம் நாடுபவனல்லவா அவன்.அறிவுரை சொல்லி ஆற்றுப்
படுத்தும் கடமை அவனுக்கிருக்கிறதல்லவா? தவறு கண்டவிடத்து இடித்துரைக்கும் கடப்பாடு
அவனுக்குத்தானே உண்டு.
  "தலைவ! உன் தகுதிக்கும் பெருமைக்கும் இப்படி ஒரு பெண்ணை எண்ணி உருகுவது
ஏற்றதில்லை" என்று இடித்துரைக்கிறான் அவன்.
  தலைவன் தோழனைப் பார்த்துக் கூறுகிறான்;

"இடித்துரைக்கும் நண்பனே! என் மேனி இளைப்பது உனக்குத் தெரிகிறது. காரணமும் புரிகிறது.
நீ இடித்துரைப்பதோடு நில்லாமல் என் மேனி வாடாமல் இருக்க ஏதாவது செய்ய்ஸ் முடியுமானால்
மிக்க நன்றியுடையேனாவேன்; என் தகுதிக்கு இது சரியில்லை என்கிறாய். எனக்கும் அது தெரிகிறது.
என்ன செய்ய? என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே ! அவளை எண்ணி ஏங்கி உருகும் என்
உடல் நலிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

  நண்ப! இதைக் கொஞ்சம் கேள்! ஒரு பாறை. அதன்மேல் கையில்லாத ஊமையன் ஒருவன். அவனுக்கு
முன்னால் வெண்ணெய். வெய்யில் ஏற ஏற வெண்ணெய் உருகி ஓடுகிறது.கண்ணால் பார்க்கிறான்
ஊமையன்.என்ன செய்வான் அவன்?
  தடுத்து நிறுத்தக் கையில்லையே! அருகுள்ளோரை அழைத்துச் சொல்ல வாயில்லையே! வெயிலில்
வெண்ணெய் உருகிப் பரந்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

  அவன் நிலைதான் என் நிலை. வெயில் காய்கிறது; வெண்ணெய் உருகுகிறது. காதல் காய்கிறது; என்
கட்டுடல் உருகுகிறது. ஊமையனால் வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியவில்லை;என்னால் என்
உடல் உருகுவதைத் த்டுக்க முடியவில்லை.நோய் அப்படிப் பரந்து விட்டது. என்ன செய்வேன்?
நீதான் ஏதாவது செய்ய வேண்டும்' என்கிறான் தலைவன்.
    "இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
   நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
   ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
   கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
      வெண்ணெய் உணங்கல் போலப்
      பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே!
                                                               -வெள்ளிவீதியார்
                               குறுந்தொகை--58
(கேளிர்--சுற்றத்தார்,பாங்கன்.குறை--இன்றியமையாத செயல்,அறை--பாறை
   நோன்றுகொளல்--பொறுத்துக்கொளல் )    
.